ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

கட்சிக அலுவலகங்களுக்கு தொண்டர்கள் வருகை குறைந்து வருகிறது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என, கட்சி பேதமில்லாமல், சென்னையில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைமை அலுவலகங்களுக்கும், தொண்டர்கள் வருகை, படிப்படியாக குறைந்து வருகிறது. ஆளுங்கட்சியில், ஆட்டம் போடும் கட்சி நிர்வாகிகள் மீது எழுப்பப்படும் புகார்கள் மீது நடவடிக்கை இல்லாததாலும், எதிர்க்கட்சிகளில் கோஷ்டி பூசல் தகராறு தொடர்பான புகார்களுக்கு மதிப்பு இல்லாததாலும் தொண்டர்கள், கட்சி தலைமை மீது அதிருப்தி காட்டுகின்றனர். அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட மாநில கட்சிகளுக்கும், காங்கிரஸ், பா.ஜ., போன்ற தேசிய கட்சிகளுக்கும், சென்னையின் முக்கியப் பகுதிகளில் தலைமை அலுவலகங்கள் இயங்குகின்றன. கட்சி தலைவர் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் சந்திக்கும் இடமாக, இந்த அலுவலகங்கள் விளங்கி வருகின்றன. மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும், சொந்தப் பிரச்னை, பொதுப் பிரச்னை, கட்சி பிரச்னைகளுக்காக தலைமை அலுவலகங்களை தேடி நிர்வாகிகளும், தொண்டர்களும் வருகின்றனர். தங்கள் பயணத்தில், எவ்வளவு தூரம் வெற்றியோடு, மன திருப்தியோடு ஊர் திரும்புகின்றனர் என்று பார்த்தால், கொதிப்பு குரல்களே அதிகமாக கேட்கின்றன.
அறிமுகம் இருந்தால் தான்.. அ.தி.மு.க., ஆளும் கட்சியாக இருப்பதால், அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இங்கு, அலுவலக மேலாளர் தவிர, கட்சியின் மாநில பொறுப்பில் உள்ளவர்களுக்கும் தனி அறைகள் உள்ளன. மாநில நிர்வாகிகளை, தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள் மட்டுமே, அவர்களைச் சந்திக்கின்றனர். மற்றவர்கள், அலுவலக மேலாளரைச் சந்திக்கின்றனர். மருத்துவ சிகிச்சைக்கு உதவி வேண்டும்; ஊரில் தீர்க்கப்படாமல் உள்ள பொதுப் பிரச்னைக்கு தீர்வு வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகளுடன், இங்கு தொண்டர்கள் வருகின்றனர். கட்சி நிர்வாகிகள் மீது, சிலர் புகார்களையும் கொண்டு வருகின்றனர். மருத்துவ உதவி, ஊர்ப் பிரச்னைகள் குறித்து, மாவட்டச் செயலர்கள் அல்லது மாவட்ட நிர்வாகிகளின் ஒப்புதலோடு வரும் கடிதங்களை ஏற்றுக் கொண்டு, அவற்றை சம்பந்தப்பட்டவர்களிடம், அலுவலக மேலாளர் அனுப்புகிறார். இல்லாவிட்டால், "மாவட்டச் செயலரை பாருங்கள்' என திருப்பி அனுப்பிவிடுகின்றனர் "கட்சியில் ஆட்டம் போடும் நிர்வாகிகள் குறித்த புகார்களை, தலைமை அலுவலகத்தில் கொடுத்தால், அது சம்பந்தப்பட்டவர்களுக்கே திரும்பி வந்து விடுகிறது. இதுதான், தலைமை அலுவலகத்தின் நிலை' என்று, குமுறுகின்றனர் அ.தி.மு.க., தொண்டர்கள்.தி.மு.க., அலுவலகமான, அறிவாலயத்தில் கட்சித் தலைவர் கருணாநிதியை, "மரியாதை நிமித்தமாக பார்க்கிறேன்' என்ற பெயரில் பலர் வருகின்றனர். அவர்களின் விவரங்களைக் கேட்டபின், மிகுந்த கட்டுப்பாடுகளுக்குப் பின்னரே, அனுமதிக்கப்படுகின்றனர். புகார்கள், உதவி தேவை என வருவோரிடம், கட்சி அலுவலக நிர்வாகிகள், மனுக்களைப் பெற்றுக் கொள்கின்றனர். கருணாநிதி அறிவாலயம் வரும்போது, கட்சியின் மூத்த நிர்வாகிகள், உடன் இருப்பதால், அவர்களைத் தாண்டித் தான், அவரைச் சந்திக்க முடியும். மிக முக்கியம் என, அலுவலக நிர்வாகிகள் கருதினால் தான், அந்த கோரிக்கைகள், தலைமைக்கு செல்கின்றன. தனியார் நிறுவனம் போல, கட்சி அலுவலகம் இயங்குவதாகக் கூறும் தி.மு.க.,வினர், வசதியுள்ள நிர்வாகிகளுக்கு மட்டும்தான், எப்போதும் மரியாதை கிடைக்கிறது என்கின்றனர். மத்தியில் ஆட்சியில் உள்ளதால், காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வரும் தொண்டர்கள், வங்கிக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றுக்கு உதவிகேட்டு வருகின்றனர். மாநிலத் தலைவர் வெளியூர் சென்றுவிட்டால், அலுவலகத்தில் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். கட்சி தலைவர் ஞானதேசிகன் அலுவலகத்தில் இருந்தாலோ, இதர கோஷ்டி தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தால் மட்டுமே கலகலப்பாய் இருக்கிறது காங்கிரஸ் அலுவலகம். வாயிற்கதவில் நிறுத்தி... கோயம்பேடு தே.மு.தி.க., அலுவலகத்தில், சென்னையில் இருக்கும் நாட்களில், காலை, 11:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை, கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் விஜயகாந்த். முன்பெல்லாம், மற்ற நிர்வாகிகள் மீது, புகார் கொடுக்கவரும் கட்சியினர், வாயிற்கதவிற்கு வெளியே நிறுத்தப்பட்டு அலைகழிக்கப்படுவர். இப்போது, இதுபோன்று வரும் கட்சியினரை சந்தித்து புகார்களை பெறுவதற்காக, மாநில நிர்வாகிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், முன்பைபோல தொண்டர்கள், நிர்வாகிகள் கூட்டமும் அதிகம் வராததால், வெறிச்சோடியே காணப்படுகிறது. வேலையோ, உதவியோ கேட்டு வருபவர்கள் யாரையும், ம.தி.மு.க., வின் தலைமை அலுவலகத்தில், பார்க்க முடிவதில்லை. கட்சிப் பிரச்னைகள் மற்றும் கட்சி செயல்பாடுகளுக்கு அனுமதி கேட்டுத் தான் பெரும்பாலானவர்கள் வருகின்றனர். மத்திய, மாநில ஆட்சிகளில் எந்த அங்கமும் இல்லாமல் இருப்பதால், "தாயகம்' வரும் கட்சித் தொண்டர்கள் மிகக் குறைவாக உள்ளனர்.நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக