ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

புதிய கூட்டணி உருவாக்க முலாயம் மும்முரம்

காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குப் பெரும் தலைவலியாக வெடித்துள்ள, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரம், பார்லிமென்டை முடக்கியதோடு, அரசியல் ரீதியான திருப்பங்களுக்கும் வழிவகுத்துள்ளது. இந்த விவகாரத்தை பயன்படுத்தி, லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ், பா.ஜ., அல்லாத ஒரு அணியை, இடதுசாரிகளோடு சேர்ந்து, உருவாக்குவதில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், காங்கிரஸ் மீது, கசப்பில் உள்ள தி.மு.க., மூன்றாவது அணியில் சேருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடு முழுவதும், அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், எட்டு நாட்களாக, பார்லிமென்டை முடக்கியுள்ளது. "பிரதமர் பதவி விலக வேண்டும்' என பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி போர்க்கொடி தூக்கியுள்ளது. ஆனால், "சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்' என, சமாஜ்வாதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பார்வர்டு பிளாக், தெலுங்குதேசம் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள், திடீர் கோஷம் எழுப்பியுள்ளன.

அரசியல் காய்நகர்த்தல்:

இவர்களோடு, அ.தி.மு.க.,வும் சேர்ந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் தோழமையாக செயல்பட்ட, பிஜு ஜனதாதளம், இந்த ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்த கட்சிகளைக் கொண்டு, மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அணியை உருவாக்கும் நோக்கோடு, முலாயம் சிங், தன் அரசியல் காய் நகர்த்தலை துவங்கியுள்ளார் என்கிறது, டில்லி வட்டாரம். பார்லிமென்ட் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ,, வுக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சிகள் ஆதரவுடன், பிரதமராகலாம் என, முலாயம்சிங் கருதுகிறார். அதற்காக, மூன்றாவது அணிக்கு ஆள் திரட்டுவதோடு, காங்கிரசுடனும் மறைமுக இணக்கமும் காட்டி வருகிறார். பா.ஜ., மற்றும் மதசார்பற்ற கட்சிகளை சமமாக கருதி, அக்கட்சிகளின் ஆதரவுடன், மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என, முதல்வர் ஜெய லலிதா கருதுகிறார். அதற்காகவே, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் களில், பா.ஜ., வோடு இணக்கம் காட்டிய, அ.தி.மு.க., தற்போது, மூன்றாவது அணியோடு இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த இருவரின் அரசியல் கணக்குகள் தான், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில், மாறுபட்ட குரல் ஒலிக்க காரணமாக மாறியுள்ளது. பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் யார் என்ற குழப்பமும், அதற்கான மோதலும் இப்போதே துவங்கி விட்டது. மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க, அக்கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் மறுத்து விட்டார். சரத் யாதவ் போன்றவர்களும், பா.ஜ.,வுடன் முழு இணக்கமாக இல்லை.
வாய்ப்புகள் அதிகம்:

காங்கிரசில் ராகுலை முன்னிறுத்துவதை ஏற்க மம்தா, சரத்பவார் உள்ளிட்ட கட்சிகள் தயாராக இல்லை. சோனியாவின் கட்டுப்பாட்டில் இருப்பவர் பிரதமர் பதவியில் தொடர்வதையே, தங்களுக்கு சாதகமாக அவர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், மூன்றாவது அணி பலம் பெற்றால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறி, அவர்களோடு இணைய வாய்ப்புள்ளது.
கசப்பில் தி.மு.க.,:

லோக்சபா தேர்தலில் மாநில கட்சிகள் பலம் பெறுகின்றன என்றால், தி.மு.க.,வும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரசுடன் கசப்பு காட்டி வரும், தி.மு.க., இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மூன்றாவது அணியில் இணைந்து, காங்கிரசுக்கு எதிர்ப்பு காட்டலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மொத்தத்தில், மூன்றாவது அணியை துவக்குவதில் முலாயம் மும்மரம் காட்டினாலும், அதில் முதன்மை பெறப்போவது, அ.தி.மு.க.,வா அல்லது தி.மு.க.,வா என்பது லோக்சபா தேர்தல் நேரத்தில் முடிவாகும்.
- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக