இதுநாள் வரையில் ‘மலபார் கோல்ட்’ விளம்பரத்தில் நடித்து வந்த
இளையராஜாவின் ஒப்பந்தம் முடிந்து விட்டது. எனவே புதிதாக சூர்யாவை வைத்து
அந்த விளம்பரத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த விளம்பரத்தை தனது
பத்திரிகையின் பின் அல்லது உள் அட்டையில் பிரசுரித்து லட்சம் லட்சமாக
பணத்தை சுருட்ட இந்தப் பேட்டியின் வழியாக குமுதம் துண்டு போட்டிருக்கிறது.
அநேகமாக அந்த இதழின் விளம்பர மேலாளர், சூர்யாவின் பேட்டியை காண்பித்தபடி விளம்பர ஏஜென்சியிடம் இந்நேரம் பேசிக் கொண்டிருப்பார்.
சூர்யா பேட்டி வந்த குமுதம் பக்கங்களுக்கிடையிலேயே லலிதா ஜூவல்லரி, டானிஷ்க் நகை விளம்பரங்கள் வந்திருக்கின்றன. இதற்கு பொருத்தமாய் பேட்டியின் தலைப்பிலேயே நகை வந்துவிட்டது. இதற்கென அந்நிறுவனங்களிடம் அதிக தொகையோ, இல்லை கவர் ஸ்டோரி பேக்கேஜ் என்ற பெயரிலோ நடந்திருப்பது அப்பட்டமான வியாபாரம்.
குமுதத்தின் நோக்கம் இப்படி விளம்பரத்தை வாங்குவதாக இருக்கிறது என்றால், சூர்யாவின் குறிக்கோள் தனது சுயநல சுரண்டலை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. குறிக்கோளும், அதை அடைவதற்கான செய்கைகளை நியாயப்படுத்துவதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் அல்லவா? அதனால்தான் குமுதமும் சூர்யாவும் கைகோர்த்திருக்கிறார்கள்.
பேட்டியில் சூர்யா சொல்லியிருப்பதை கவனியுங்கள்…
”விளம்பரங்களில் மட்டுமே சம்பாதிக்க வேண்டும்னு ஆசைப்பட்டிருந்தால் மளமளன்னு வரிசையா பல விளம்பரங்களில் நடிச்சிருப்பேன். பொதுவா நான் விளம்பரங்களில் நடிக்கணும்னு முடிவெடுக்கும் போது குறிப்பிட்ட அந்த நிறுவனம் மக்களுக்கு ஏதாவது சமூக சேவை செய்யணும்னு எதிர்பார்ப்பேன். அப்படி சில பிரின்சிபல் வச்சிருக்கிற கம்பெனிகளுடன் மட்டுமே கைகோர்க்கிறேன். இப்படி விளம்பரங்களின் மூலமா கூடுதலா கிடைக்கிற வருமானத்தை ‘அகரம் ஃபவுண்டேஷ’னுக்கு செலவு பண்ணறேன். ஒரு நல்ல காரியத்திற்காக இப்படியான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் ஒரு மனநிறைவு இருக்கு…”இந்தப் பூனையும் பால் குடிக்குமா என எவ்வளவு வெள்ளந்தியாக பேசியிருக்கிறார்?
விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டியிருக்கிறது சரவணா ஸ்டோர்ஸ். போதுமான பாதுகாப்பு இல்லாததால் சென்ற ஆண்டு அந்தக் கடையில் தீ விபத்து ஏற்பட்டு தொழிலாளார்கள் இறந்திருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் இருந்து ப்ளஸ் 2 படித்த இளைஞர்கள், இளைஞிகளை அழைத்து வந்து கொத்தடிமைகளாக வேலை வாங்குகிறது சரவணா ஸ்டோர்ஸ். இதன் விளம்பரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். என்ன சமூக சேவையை அந்நிறுவனம் செய்திருக்கிறது அல்லது செய்கிறது? பேசாமல் கல்லூரிக்கு செல்ல முடியாமல் தினமும் 14 மணிநேரங்களுக்கு மேல் உழைத்துக் கொண்டிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களை தனது ‘அகரம் பவுண்டேஷன்’ வழியாக இவர் படிக்க வைக்கலாமே? இந்த அகரத்தைப் பற்றி வினவில் விரிவான கட்டுரை வந்திருக்கிறது. படித்துப் பாருங்கள்.
இது ஒரு சோறு பதம்தான். இப்படியே பெப்சி, நெஸ்கபே, டிவிஎஸ், பாரதி சிமெண்ட்ஸ், ஏர்செல், க்ளோசப்… என சூர்யா நடிக்கும் அனைத்து விளம்பரங்கள் குறித்தும் பட்டியலிடலாம். இந்த உலகமயமாக்கல் சூழலில் அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தும், மக்களின் ரத்தத்தை உறிந்தும்தான் லாபம் சம்பாதிக்கின்றன.
ஒரு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஓராண்டு இருப்பதற்கு கிட்டத்தட்ட ரூபாய் 5 கோடி வரை சூர்யா வாங்குகிறார். விளம்பர படப்பிடிப்பு ஓரிரு நாட்கள் மட்டுமே நடைபெறும். இதற்காகத்தான் இவ்வளவு பணத்தை வாங்குகிறார்.
கூடுதலாக பணம் கொடுத்தால், ஈமு கோழி விளம்பரங்களில் நடிக்கவும் தயாராக இருக்கும் இவர்தான், அன்றாடக் கூலியில் காலம் தள்ளும் உழைக்கும் மக்களை பார்த்து, ‘விளம்பரங்களில் நடித்துத்தான் நான் சம்பாதிக்கணும்னு அவசியமில்லை…’ என சொல்கிறார்.
உலகெங்கும் நிலத்தடி நீரை உறிஞ்சி, குடிநீர் குடிக்கும் பழக்கத்தையே ஒழித்துவிட்டு, இயற்கை வளமான நீரை வர்த்தகமாக்கி சுரண்டும் பெப்சி கம்பெனி சமூக சேவை செய்கிறதாம். அந்த சமூக சேவையை ஆதரிக்கும் பொருட்டு சூர்யா ஐந்து கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு பெப்சி விளம்பரங்களில் நடிக்கிறாராம். இதற்கும் சூர்யா உங்கள் முகத்தில் துப்புவதற்கும் என்ன வேறுபாடு?
கேட்பவர்களை முட்டாளாக நினைத்து சூர்யா வேண்டுமானால் இப்படி கதை விடலாம். குமுதமும் தன் வாசகர்களை அறிவிலிகளாக நினைத்து பேட்டியை பிரசுரித்து ஆதாயம் அடைய முயலலாம்.
ஆனால், தாங்கள் ஏன் முட்டாள்களாக இருக்கிறோம் என மக்கள் உணரும்போது, புத்திசாலித்தனமாக பேசுபவர்கள்தான் அறிவிலிகளாக காட்சித் தருவார்கள்.
சூர்யாவும், குமுதமும் இப்போது காட்சியளிப்பது மாதிரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக