ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

விஜயகாந்த்:பத்மா சேஷாத்ரி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?


சென்னை :ஜேப்பியார், சீயோன் பள்ளி உரிமையாளரை கைது செய்த அரசு, பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று விருகம்பாக்கத்தில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, எல்லா மாவட்டங்களிலும் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்துக்கான விழா, விருகம்பாக்கத்தில் நேற்று நடந்தது. மேற்கு சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் ஏ.எம்.காமராஜ் தலைமை தாங்கினார். பிரேமலதா விஜயகாந்த், மாநில அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். விழாவில் விஜயகாந்த் பேசியதாவது: ஜெயலலிதா ஆட்சியில்தான் அதிக அளவு ஊழல் நடந்து வருகிறது.
ஏழை மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். சட்டசபையில் அறிவித்த அறிவிப்புகளையே தினமும் அறிக்கையாக கொடுத்து வருகிறார். தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரத்துக்கு ஒரு லட்சம் வீடுகளை கட்டித் தருவோம் என்கிறார். இதெல்லாம் ஏற்கனவே அறிவித்ததுதான். தமிழகத்தில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதை ஒரு குறிப்பிட்ட நபரே செய்து வருகிறார். இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி, இந்த ஆட்சி ஒளிமயமான எதிர்காலத்தை தரும் என்கிறார். ஆனால், உண்மையில் எலி மயமான ஆட்சியாகத்தான் இருக்கிறது. அதிமுக ஆட்சியில் தமிழகமே இருண்டு கிடக்கிறது. பிரதமர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை 8 நாட்களாக நடத்தவிடாமல் முடக்கி வருகின்றன. இதுதொடர்பாக அறிக்கைகளும், பேட்டிகளும் தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் மீது எந்த வழக்கும் போடுவதில்லை. ஆனால், ஜெயலலிதா கோடநாட்டில் ஓய்வெடுக்கிறார் என்று பேசியதற்காக என் மீதும், பத்திரிகைகள் மீதும் வழக்கு போடுகிறார்கள். எத்தனை அவதூறு வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். சிறைக்கு செல்லவும் தயார். கல்லூரியில் கட்டிடம் இடிந்து விழுந்ததற்காக ஜேப்பியாரை கைது செய்தனர். மற்றொரு சம்பவத்தில் சீயோன் மெட்ரிக் பள்ளி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஆனால், நீச்சல் குளத்தில் மாணவன் பலியான சம்பவத்தில், பத்மா சேஷாத்ரி பள்ளி உரிமையாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு காழ்ப்புணர்வுடன் செயல்படுகிறது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார். கூட்டத்தில் இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், மாவட்ட செயலாளர்கள் வி.என்.ராஜன், செந்தாமரைக்கண்ணன், யுவராஜ், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நல்லதம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மருத்துவமனையில் இறந்த குழந்தையை எலி கடித்ததாக புகார் எழுந்தது. அந்த குழந்தையின் தந்தைக்கு ரூ.25,000 நிதியை விஜயகாந்த் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக