ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

சஹானாஸ் பெங்களூரில் நேற்றிரவு கைது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை :பல இளைஞர்களை மயக்கி திருமணம் செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கல்யாண ராணி சஹானாஸை பெங்களூரில் நேற்றிரவு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை இரவோடு இரவாக சென்னை அழைத்து வந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் கேசவபுரத்தை சேர்ந்தவர் சஹானாஸ். இவருக்கு பெற்றோர் இல்லை. 
சித்தீஷ் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சில ஆண்டுகளில் கணவன், குழந்தைகளை பிரிந்து, திருச்சூரை சேர்ந்த வாலிபரை 2வது திருமணம் செய்துள்ளார். அவரிடம் பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவானார். இதுபோல் கேரளாவில் மட்டும் 5 வாலிபர்களை திருமணம் செய்து பணம், நகைகளை சுருட்டி உள்ளார். அதன்பின், சென்னைக்கு வந்துள்ளார். வாலிபர் ஒருவரின் போட்டோவை காட்டி, Ôஇவர் என் தோழியை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார். இவரை பற்றிய தகவல் தெரியுமாÕ என கண்ணில் தென்படும் இளைஞர்களிடம் அப்பாவியாக விசாரிப்பார். பரிதாபப்பட்டு பேசுபவர்களிடம் தன் செல்போன் நம்பரை கொடுப்பார்.
அவர்களிடம் தொடர்ந்து பேசி மயங்க வைத்த சஹானாஸ், திருமண ஆசையை தூண்டி விட்டுள்ளார். அதில் சிக்கும் வாலிபரை திருமணம் செய்து கொண்டு சில நாள் குடும்பம் நடத்தி பணம், நகையை சுருட்டி தலைமறைவாகி உள்ளார். இதுபோல், சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சரவணனிடம் (33), ரூ.50 ஆயிரம் அபேஸ் செய்தார். அடையாறு செல்போன் கடையில் வேலை செய்யும் மற்றொரு சரவணனிடம் (28) ஒன்றரை பவுன் நகை வாங்கி ஏமாற்றி உள்ளார். தி.நகர் பிளாட்பாரத்தில் கடை வைத்திருக்கும் ராஜாவிடம் பணம், நகையை அபேஸ் செய்து ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து 3 பேரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் 21ம் தேதி புகார் அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். இந்நிலையில், போரூர் முகலிவாக்கம் எஸ்எஸ் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டனை (25) திருமணம் செய்து, ஐஏஎஸ் படிப்பதாக கூறி ரூ.1.85 லட்சம் சுருட்டி உள்ளார்.

அவரை கைகழுவிவிட்டு, புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா (28) என்பவரை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். இந்த புகார்கள் குறித்து அடையாறு உதவி கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. சஹானாஸ், பல போலீஸ் அதிகாரிகளை தனக்கு தெரியும் என்று ஆண்களிடம் கூறியுள்ளார். ஏமாறியவர்கள் போன் செய்தால், அந்த போலீஸ் அதிகாரி எனக்கு மாமா உறவு முறை. அவரிடம் சொல்லி பொய் வழக்கு போட சொல்வேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் பல வாலிபர்கள் பயந்து ஒதுங்கி உள்ளனர். இதற்கிடையில் சஹானாசை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நிரந்தர இருப்பிடம் இல்லாததால் அவரை கைது செய்வதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில் போலீசில் புகார் செய்தவர்களை போனில் தொடர்பு கொண்டு சஹானாஸ் மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்த போலீசார், செல்போன் நம்பர்களை ஆராய்ந்தனர். அப்போது, பெங்களூரில் உள்ள தோழி வீட்டில் அவர் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. தனிப்படை போலீசார் உடனடியாக அங்கு விரைந்து நேற்றிரவு சஹானாஸை கைது செய்தனர். பின்னர் இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. போலீசாரின் பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆனால், போலீஸ் அதிகாரிகள் பலரை தெரியும் என்று சஹானாஸ் கூறியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் சிவகாசி ஜெயலட்சுமி போல இவரிடமும் போலீஸ் அதிகாரிகள் யாரும் சிக்கியுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. ஐம்பது பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக வெளிவந்துள்ள தகவல்கள் பொய். ஆடம்பர வாழ்க்கைக்காக 4 பேரை மட்டும்தான் திருமணம் செய்துள்ளேன் என்று போலீசாரிடம் சஹானாஸ் கூறியுள்ளார். ஆனால், எவ்வளவு பணம், நகைகளை பறித்தார், அவற்றை என்ன செய்தார் என்ற விவரங்களை தெரிவிக்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக