புதன், 26 செப்டம்பர், 2012

வைத்தியசாலையில் ஓடும் எலியையே ஒழிக்க முடியாத அரசு”

அ.தி.மு.க.-வில் ‘கிலி கொள்ளும்’ அமைச்சர்கள் வழங்கிய, ‘எலி கொல்லும்’ உபாயம்!

Viruvirupu
“தமிழக அரசின் ‘ஆபரேஷன் எலி வேட்டை’ சக்ஸஸ். ஆனால், எலி நாட் அவுட்” என்று தெரிவித்துள்ளார் தமிழக அரசின் எலி ஒழிப்பு கான்ட்ராக்ட் பெற்ற நிறுவன அதிகாரி.
சென்னை அரசு வைத்தியசாலையில் இறந்த குழந்தையை எலி கடித்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.
எலி அரசு ஊழியர் அல்ல ஆகையால், எலியை விட்டுவிட்டு,  இரு டாக்டர்கள் சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார் முதல்வர் அம்மா அவர்கள்.
கடித்தது டாக்டர்கள் அல்ல ஆகையால், தொடர்ந்தும் வைத்தியசாலையில் கடி விழுந்து கொண்டிருந்தது. ஊடகங்கள், தாறுமாறாக எழுதின. “வைத்தியசாலையில் ஓடும் எலியையே ஒழிக்க முடியாத அரசு” என்ற விமர்சனம் எழுந்தது. முதல்வருக்கு அவமானமாக போய்விட்டது.
இதையடுத்து, அமைச்சர்களை அழைத்தார் முதல்வர்.
முதல்வரின் அழைப்பு என்றதும், ‘கிலி கொள்ளும்’ அமைச்சர்களிடம், ‘எலி கொல்லும்’ உபாயம் பற்றி முதல்வர் கலந்து ஆலோசித்தார்.
32 அமைச்சர்களும் ‘ஆபரேஷன் எலி வேட்டை’யில் இறக்கி விடப்பட்டனர்.
ஏற்கனவே நம்ம அமைச்சர்கள் பற்றி வெளியே கேவலமாக பேசுகிறார்கள். சட்டசபை போட்டிகோவில் அம்மா காருக்கு பின்னால் தொந்தி குலுங்க ஓடும் அமைச்சர்கள், கிராமங்களில் சினிமா கொட்டாயி அறிவிப்பு வண்டிக்கு பின்னால் ஓடும் சிறுவர்களை ஞாபகப்படுத்துகிறார்கள்.

இந்த கேவலத்தில், எலியை துரத்திக்கொண்டு அமைச்சர்கள் ஓடினால், படு கேவலமாக இருக்கும் அல்லவா?
எனவே, எலி வேட்டையை மற்றொரு இடைத் தேர்தலாக கருதி, உபாயங்களை வகுத்தார்கள் அமைச்சர்கள். அந்த உபாயம் என்ன?

ஆனால், எலியென்ன இடைத்தேர்தல் தொகுதி வாக்காளரா, மூக்குத்தி வாங்கிக்கொண்டு ஓட்டு போட? எலி ஒழிப்புக்கு, கான்ட்ராக்ட் கொடுக்க முடிவு செய்தார்கள்.
எலிக்கு எலியுமாச்சு, கமிஷனுக்கு கமிஷனுமாச்சு.
சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் எலிகளை ஒழிக்க, சிட்டி பெஸ்ட் கன்ட்ரோல் சர்வீஸ் என்ற நிறுவனத்துக்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. மாதத்திற்கு ரூ.26,460 என்ற வீதம் ஓர் ஆண்டுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது.
ஒரு மருத்துவமனையில் எலிகளை ஒழிக்க, வருடத்துக்கு ரூ.3 லட்சத்தைவிட அதிக தொகை!
இந்த ரூ 3 லட்சத்தில், நிறுவனத்துக்கு எவ்வளவு, அமைச்சருக்கு எவ்வளவு, எலிக்கு எவ்வளவு என்ற கணக்கு சரியாக தெரியவில்லை.
அமைச்சர்களின் கான்ட்ராக்ட் பெற்ற சிட்டி பெஸ்ட் கன்ட்ரோல் சர்வீஸ் நிறுவனத்தை சேர்ந்த 5 ஊழியர்கள் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் நர்சிங் மாணவிகள் தங்கும் விடுதியில் உள்ள சுமார் 200 எலி பொந்துகளில் புரோமோ டயலின் ரோபான் ரேட் கேக் என்ற எலி மருந்தை பொறியில் கலந்து வைத்தனர்.
ஆனால், நேற்று காலை சென்று பார்வையிட்ட போது ஒரு எலி கூட இறக்கவில்லை.
மருந்தை சாப்பிட்ட எலிகள் வெளியே சென்று இறந்திருக்க வாய்ப்பு இருப்பதால், மருத்துவமனை வளாகத்தை சுற்றி பார்த்தனர். அங்கும் எலிகள் இறக்கவில்லை. அதனால், மீண்டும் பொந்துகளில் எலி மருந்தை ஊழியர்கள் வைத்துள்ளனர்.
மேலும், மருத்துவமனையை சுற்றிலும் மரம், செடிகள், கார் மற்றும் பைக் பார்க்கிங் என அனைத்து இடங்களிலும் எலி மருந்து பாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாக சொன்னால், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர்களின் கோட் பாக்கெட் தவிர்ந்த அனைத்து இடங்களிலும், எலி மருந்து பாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்களின் கான்ட்ராக்ட் பெற்ற சிட்டி பெஸ்ட் கன்ட்ரோல் சர்வீஸ் நிறுவன அதிகாரி கூறுகையில், “இந்த புரோமோ டயலின் ரோபான் ரேட் கேக் என்ற எலி மருந்து ஸ்லோவாகதான் வேலை செய்யும். இதனை எலிகள் சாப்பிட்ட பிறகு, இறப்பதற்கு குறைந்தது 3 நாட்களாவது ஆகும். அதன்பின், இறந்து கிடக்கும் எலிகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்துவோம். தொடர்ந்து பொந்துகளில் எலி மருந்தை வைப்போம்’’ என்றார்.
இப்போது எமக்கு ஒரேயொரு சந்தேகம் மட்டுமே உள்ளது.
“3 நாட்களில் எலிகள் நிஜமாகவே ஒழிக்கப்படுமா” என்பதுதான் எமக்கு எழுந்த சந்தேகம் என்று நீங்கள் அவசரப்பட்டு நினைத்தால்… நீங்கள் விறுவிறுப்பு.காம் வாசகரே அல்ல. எமக்கு ஏற்பட்டுள்ள நியாயமான சந்தேகம், வேறு. அது-
புரோமோ டயலின் ரோபான் ரேட் கேக் என்ற எலி மருந்தை எந்த அமைச்சரின் பினாமி தயாரிக்கிறார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக