புதன், 26 செப்டம்பர், 2012

பொருட்காட்சிக்கு வாலிபருடன் சென்ற 2 இளம்பெண்களுக்கு அடி, உதை, அபராதம்

பாட்னா: பீகாரில் ஒரு வாலிபருடன் பொருட்காட்சிக்கு சென்றதற்காகவும், பான் மசாலா சாப்பிட்டதற்காகவும் 2 இளம்பெண்களை பஞ்சாயத்து உத்தரவின்பேரில் மக்கள் அடித்து உதைத்து அவர்களின் முடியையும் நறுக்கியுள்ளனர்.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள பிரபல்பூரைச் சேர்ந்தவர்கள் கலா(15), ரதி(17)(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). அவர்கள் கடந்த 20ம் தேதி மீனு(21) என்ற வாலிபருடன் சேர்ந்து பொருட்காட்சிக்கு சென்றுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் பான் மசாலா சாபிட்டுள்ளனர். இதை அந்த பொருட்காட்சிக்கு சென்ற பிரபல்பூர்வாசிகள் பார்த்துவிட்டு வந்து கிராம பஞ்சாயத்தில் தெரிவி்த்துள்ளனர்.

இதையடுத்து பஞ்சாயத்தைக் கூட்டி அப்பெண்கள் மற்றும் அந்த வாலிபரின் குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும் அப்பெண்களின் பெற்றோர்கள் தலா ரூ.21,000 அபராதம் கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதில் ஒரு பெண்ணின் பெற்றோர் பணத்தை கட்டிவிட்டனர். இன்னொரு பெண்ணின் பெற்றோர் மிகவும் ஏழை என்பதால் அபராதத் தொகையை கட்ட வேண்டாம் என்று கூறப்பட்டது.
இத்தனை தண்டனையும் கொடுத்த பிறகு அந்த 2 பெண்களையும் பஞ்சாயத்தார் உத்தரவின்பேரில் மக்கள் அடித்து உதைத்துள்ளனர். மேலும் அவர்களின் முடியையும் நறுக்கிவிட்டுள்ளனர். இதற்கிடையே அந்த 2 பேரையும் பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்ற வாலிபர் பீகாரை விட்டே ஓடிவிட்டார்.
இளம்பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பி்ன்னர் இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக