திங்கள், 24 செப்டம்பர், 2012

ஜெயிக்கலாம் தோழி / சுயதொழிலில் ஈடுபட இப்போது வாய்ப்புகள்



அத்தியாயம் 10  http://www.tamilpaper.net/
பலர் வருவாயைப் பெருக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். நிறுவனத்தின் செலவுகளில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதாவது செலவைத் தள்ளிப்போட முயற்சி செய்வார்கள் அல்லது போதுமான அளவுக்குச் செலவழிக்காமல் இருந்துவிடுவார்கள். இத்தகைய செயல்முறைகளால் நிறுவனத்தின் வளர்ச்சி பாதிப்படையும்.
ஒரு நிறுவனத்துக்கு வரவேண்டிய வருவாய் பாக்கியை வசூலிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு, அடிப்படைச் செலவினங்களுக்குச் செலவிடுவதும் முக்கியம். சிலர் தொலைபேசிக் கட்டணத்தைக் கூடச் சரிவர செலுத்தாமல் இருப்பார்கள். விரைவு தபால் சேவை, நிறுவனத்தின் வாடகை, குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான சேவைகளின் செலவினங்களை காலதாமதமின்றிச் செலுத்துவதால், தொழில் முனைவோரின் நிறுவனம் நல்லவிதமாக இடையூறின்றிச் செயல்படும். வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் போதே, நிறுவனத்தின் அடிப்படை செலவுகளை நிர்ணயித்து அதற்குரிய தொகையினை காலதாமதமின்றிச் செலுத்துவது அவசியம்.

0
சாதாரணமாக பெரிய நிறுவனங்களில் பணியாளர் நியமனங்களில் எந்த நிபந்தனைகள் இருந்தாலும், அதற்கு கட்டுப்பட பலர் தயாராக இருப்பார்கள். ஆனல் சிறிய நிறுவனங்களில், சிறு தொழில்களில் பெரும்பாலும் அவ்வளவு எளிதில் பணியாளர் நியமனம் செய்ய முடியாமல் போகலாம். அதன் நிலைமை, வளர்ச்சி, நம்பகத்தன்மை ஆகியவற்றைப் பணியாளர்கள் பரிசீலிக்கும் காரணமாக, எளிதில் பணியிடங்கள் நிரம்புவதில்லை. இக்கருத்திலிருந்து நாம் அறிவது யாதெனில், ஒரு தொழில் முனைவோர் தமது நிறுவனத்தினை எவ்வாறு வழி நடத்திச் செல்லுகிறார் என்பதை பலதரப்பட்ட மக்கள், அவர்கள் நிலையிலிருந்து கண்காணிக்கிறார்கள் என்பதுதான்.
ஒரு வாடிக்கையாளர் ஒரு நிறுவனத்திடமிருந்து பொருள் வாங்கும்போது அதன் தரம் குறித்து அக்கறை செலுத்துவார். அதேபோல, நிறுவனத்தில் வேலை தேடி வருபவர்கள் தாங்கள் சேர விரும்பும் நிறுவனத்தின் செயல்பாடுகளில் அக்கறை செலுத்துவார்கள். எனவே, தொழிலதிபர்கள் தமது கண்ணியமான செயல்பாட்டின் மூலம், நிறுவனத்தின் தரத்தை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.
இன்றைய வியாபாரச் சூழ்நிலையில் நம்பகத்தன்மை உடைய பணியாளர் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்க நேரிட்டால் அவரையும், அவரது செயல்திறன்கள் பற்றியும் நன்கு ஆராய்ந்து, அதற்குத்தக்க வளர்ச்சியினை வழிவகுத்தல் அவசியமாகிறது. இப்படிச் செய்வதால் தனி நபர் வளர்ச்சி, நிறுவனத்தின் வளர்ச்சியாகவும் மலர்கிறது. படித்து பண்புடன் விளங்கும் பல இளைஞர்கள் நல்ல வேலை வாய்ப்புக்காக இன்று காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு திறமைக்கேற்ற வேலை அளிக்கவேண்டும்.
தொழில் முனைவோர் முதலில் தம்முடைய பணியாளர் தேவை எவ்வளவு என்று சரிவர நிர்ணயித்துக் கொள்ளுதல் அவசியம். தமது நிறுவனத்தின் தன்மையைப் பொறுத்து, துறைகளாகப் பிரித்து, எத்தனை நபர்கள் தேவை என்று தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.
பணியாளர்களை நியமனம் செய்த பின்னர், தொழில் முனைவோரின் பொறுப்பு கூடுதலாகிறது. தமது நிறுவனத்தின் செயல்பாட்டினை சிறந்த முறையில் செயலாக்க இருக்கும் பணியாளர்களை, கண்ணியமாக நடத்துவது மிக அவசியம். அதிகாரமாகவும் அகந்தையாகவும் செயல்படுவதைவிட, அரவணைத்து, அனுசரித்து மனிதநேயப் பண்புகளுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த பலன்களைவிட பலமடங்கு உயர்வைப் பெறலாம். பணியாளரின் பார்வையில் நிறுவனம் பற்றிய நல்ல கருத்தை உருவாக்குவது, நேர்மையாகவும், திறமையாகவும் செயல்பட வழி செய்யும்.
நிறுவனத்தின் தேவைக்கேற்ப பணியாளர்களுக்குப் பயிற்சி முகாம்கள் அமைக்கலாம். உபகரணங்களை உபயோகிப்பதில் பயிற்சிகள் தரலாம். பணியாளர் வளர்ச்சி தொடர்பாக கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்த்தலாம். அடிப்படை வசதிகளை சீர்செய்யலாம். அவர்களுடைய செயல்பாட்டில் காணப்படும் மாற்றங்களை ஆராய்ந்து அறிந்து மேம்படுத்தலாம். அவ்வப்போது உரையாடி அறிவுறுத்தலாம். தவிரவும், அக்கறையுடன் பணியாளர்களின் பிரச்னைகளை அணுகுவதன்மூலம் அவர்களுடைய முழுமையான நம்பிக்கையை வென்றெடுக்கலாம். இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நேரடியாக உதவும்.
தொழில் முனைவோர் பணியாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டியது அவசியம்.
0
பெண்கள் சுயதொழிலில் ஈடுபட இப்போது வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.எனவே துணிச்சலுடன் பெண்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அரசாங்கப் பணியிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ பணிபுரியும் பெண்களுக்கு அலுவலக நேரம், விடுமுறை நாட்கள், விடுப்புச் சலுகைகள் ஆகியவை வரையறுக்கப்பட்டிருக்கும். ஆனால் சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு குறிப்பிட்ட கால நேரம், விடுமுறை நாட்கள் போன்றவை அநேகமாக இருக்காது. எனவே ஒரு பக்கம் குடும்பத்தின் தேவைகளையும் மற்றொரு பக்கம் சுயதொழிலின் தேவைகளையும் உணர்ந்து பேலன்ஸ் செய்ய பழகிக்கொள்ளவேண்டும்.
முடிந்தவரை, சுயதொழில் தன்மை, நேரம், செயல்பாடுகள் ஆகியவற்றை குடும்ப உறுப்பினர்களுக்கு உணர்த்த முயற்சி செய்யவேண்டும். வாடிக்கையாளர் சந்திப்பு, விற்பனையாளர்களின் விசாரணைகள், காலதாமதம் ஆகியவற்றை புரியவைக்கவேண்டும். தொழில் தொடர்பான பின்னணி தகவல்கள், அடிப்படைப் பிரச்னைகளை ஆகியவற்றை ஓரளவுக்கு கணவருக்கோ சக குடும்ப உறுப்பினர்களுக்கோ தெரியப்படுத்துதல் நல்லது. இதற்கு மேலும், சொந்த பந்தங்களிடையே எழும் விமரிசனங்களைப் புறந்தள்ளி, கண்ணியத்துடன், நேர்மையுடன் செயல்படவேண்டும். அடிப்படையில் சுயக் கட்டுப்பாடும், நன்நெறிகளைப் போற்றிப் பேணும் குணநலன்களும், தெளிந்த நீரோடை போன்ற தூய்மையான சிந்தனைகளும் கொண்டு சுய மரியாதையுடன் பயணம் செய்தால் வெற்றி உறுதி.
பெண் தொழில் முனைவோர், சிறந்த தாயாகவும் செயல்பட வேண்டியது அவசியமாகும். எனவே, தனது வீட்டுக்கு அருகிலேயே தொழில்கூடத்தையோ, நிறுவனத்தையோ அமைத்துக் கொள்வதன் மூலம் வீடு, அலுவலகம் இரண்டையும் கவனித்துக்கொள்ளமுடியும். பல சமயங்களில், 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அப்படிப்பட்ட சமயங்களில் வீடும் அலுவலகமும் அருகருகே இருப்பது மிகுந்த பயனையும் நிம்மதியையும் தரும்.
பணியிடம் தனியாக உள்ள நிறுவனமாக இருந்தால், ஒரு அறையைத் தனது குழந்தைகளுக்காக ஒதுக்கிவைக்கலாம். பள்ளியிலிருந்து மாலை திரும்பும் வேளையில் உடன் இருந்து, உணவு அளித்து, வீட்டுப் பாடத்தில் உதவி, விளையாட வைக்கலாம். அதற்கேற்றவாறு அடிப்படைத் தேவைகளான பால் குக்கர், காஸ் அடுப்பு, மின்சாரக் குக்கர் ஆகியவற்றை உடன் வைத்திருப்பது நல்லது. இந்த ஏற்பாட்டால், குழந்தைகளுக்கும் மனநிறைவும் களிப்பும் தாயின் பராமரிப்பும் கிடைக்கிறது.
சுயத்தொழில் ஆரம்பித்து அது ஒரு நிலைக்கு வருவதற்குள் பல பிரச்னைகள் உருவாகலாம். வாய்ப்புகளும் திடீர் திடீரென்று அதிகரிக்கலாம். அனைத்தையும் அணுகி சீர் செய்ய வேண்டும். இதனால் ஆரம்பக்கட்டங்களில் பணிகள் அதிகமான அளவில் இருக்கலாம். பின்னர் படிப்படியாக சமன் செய்யப்பட்டு, முக்கியப் பொறுப்புகளைப் பிறரிடம் பகிர்ந்துகொடுத்து செயல்படத் தொடங்கினால், வேலையும் வாழ்க்கையும் பழகிவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக