செவ்வாய், 18 செப்டம்பர், 2012

எடியூரப்பா:BJP மேலிட தலைவர்கள் ஆதரவு தேவையில்லை

பெங்களூர்: ‘கர்நாடகாவில் மீண்டும் முதல்வர் ஆக பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் ஆதரவு தேவையில்லை; மக்கள் ஆதரவு இருந்தால் போதும்’ என முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
நிலக்கரி சுரங்க ஊழல் புகார் காரணமாக கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா கடந்த ஆண்டு முதல்வர் பதவியை இழந்தார். இதை தொடர்ந்து அவர் மீது 9 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கில் அவர் 24 நாள் சிறைவாசம் சென்றார். நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான லோக்அயுக்தா அறிக்கையை ஐகோர்ட் நிராகரித்த நிலையிலும் நில மோசடி வழக்குகள் காரணமாக அவர் மீண்டும் முதல்வராவதில் சிக்கல் நீடித்தது.

முதல்வர் பதவி கேட்டு பல முறை மேலிட தலைவர்களுக்கு அவர் கெடு விதித்தார். இருப்பினும் அனைத்து வழக்குகளிலும் இருந்து அவர் விடுவிக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படும் என பாஜ மேலிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
எடியூரப்பாவை சமாதானப்படுத்தும் வகையில் சதானந்தா கவுடா மாற்றப்பட்டு ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வரானார். இதன் பின்னர் கடந்த 2 மாதமாக மேலிட தலைவர்களுக்கு எதிராக எவ்வித கருத்தையும் எடியூரப்பா தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் ஹவேரியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடியூரப்பா பேசினார்.

அப்போது மேலிட தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். மீண்டும் முதல்வர் ஆக மேலிட தலைவர்கள் ஆதரவு தேவையில்லை என்றும் மக்கள் ஆதரவுடன் நான் மீண்டும் முதல்வராவேன் என்றும் ஆவேசமாக பேசினார். ஒரு சில தலைவர்களின் சூழ்ச்சியால் முதல்வர் பதவியை இழந்ததாகவும் அவர்களின் சதி திட்டத்தை விரைவில் முறியடிப்பேன் எனவும் அவர் சூளுரைத்தார். மீண்டும் முதல்வரானால் கர்நாடகாவை முன்மாதிரி மாநிலமாக உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்தார் எடியூரப்பா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக