திங்கள், 17 செப்டம்பர், 2012

கஸ்டமர் என்றால் கடவுளா?ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 9



ஒரு நிறுவனத்திடமிருந்து வெளிவரும் பொருளோ சேவையோ தரமாக இருக்க வேண்டியது கட்டாயம். ஒரு மகிழ்ச்சியான திருப்தியடைந்த வாடிக்கையாளர் நம்மைப்பற்றிப் பிறரிடம் நல்லவிதமாகப் பேசாமல் போகலாம். ஆனால் அதிருப்தியான வாடிக்கையாளர் நமது நிறுவனத்தின் புகழை, குறைவான நேரத்தில் அதிக அளவில் சேதப்படுத்திவிட முடியும்.
வாடிக்கையாளர்களை இரண்டாகப் பிரிக்கலாம். தனிநபர், நிறுவனம். நம் வாடிக்கையாளர் ஒரு நிறுவனம் என்னும் பட்சத்தில் நாம் பல விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். நிறுவனத்தின் பாலிசி என்ன? நடத்துபவர்களின் இயல்புகள் என்ன? அவர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது? இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு வாடிக்கையாளரின் அடிப்படைத் தன்மைகளை, தொழிலை நடத்துபவர் புரிந்து வைத்துக் கொள்ளுவது இன்றியமையாதது.
ஒவ்வொரு வாடிக்கையாளரையும் – genuine customer, reasonable customer, open customer, hidden customer, crooked customer, stable minded customer எனப் பலவகையாகப் பிரிக்கலாம்.
வாடிக்கையாளர் வெவ்வேறாக இருந்தாலும் அவர்கள் அனைவருமே, நாம் நடத்தும் நிறுவனத்துக்கு இன்றியமையாதவர்கள். அதேபோல் அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய கட்டாயம் தொழில் முனைபவருக்கு உண்டு. அதேசமயம், தேவைக்கு அதிகமாக நம் நிறுவனத்திடமிருந்து பலவற்றை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்கிறேன் என்று சிக்கல்களை உருவாக்காமல் இருப்பது அவசியம். நிறுவனத்தோடு தொடர்புடைய ஒவ்வொரு வாடிக்கையாளருமே இன்றியமையாத நபராக இருந்தாலும், அவரால் நிறுவனத்துக்குக் கிடைக்கும் வியாபாரத்தின் அளவையும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
அதே சமயம் நமக்கு விற்பனை செய்யும் நிறுவனங்களைப் பற்றியும் கவனத்தில் வைத்துக்கொள்ளுதல் இன்றியமையாதது. நமது உற்பத்திக்காக வாங்கப்படும் பொருள்களின் தரம், தன்மை, சிறப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வியாபாரத்தை விரிவாக்கவேண்டும். இதற்கு ஒவ்வொரு நிறுவனமும் தமக்குரிய வெண்டார் பாலிசி அல்லது சப்ளையர் பாலிசியை வரையறுத்துக் கொள்ளுதல் அவசியம். தர நிர்ணயம் மற்றும் நிர்வாகத்திறன் ஆகியவற்றை அடிப்படைக் கொள்கையாக வைத்துக் கொண்டு, ஒரு சீரிய கண்ணோட்டத்துடன் கொள்கையைத் தயாரித்துக் கொள்ளுதல் நலனைத்தரும்.
இந்த வரையறுக்கப்பட்ட திட்ட வரைவு அணுகுமுறை விற்பனையாளர்களிடமிருந்து நேரத்துக்கு கச்சாப் பொருள்கள் பெறுவதற்கும், அதனால் உரிய நேரத்தில் நமது நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருள்கள் காலதாமதமாகாமல் குறிப்பிட்ட நேரத்துக்கு வாடிக்கையாளர்களை அடையவும் வழி வகுக்கும்.
விற்பனையாளர்களிடம் திட்ட வரைவு செயல்முறை போல், வாங்கப்படும் உபரி மற்றும் கச்சாப் பொருள்களுக்கு விலை மதிப்பீடு ஆகியவற்றை முதலிலேயே பேசித் தீர்மானித்தல் மிக அவசியமாகும். குறிப்பிட்ட பொருளின் விலை ஏற்றம், சந்தை நிலவரம் ஆகியவற்றை அறிந்து கொண்டு, சப்ளையர்களுடன் கலந்தாலோசித்து திட்டமிடுதல் மிகவும் சிறந்த முறையாகும். இதனால், கட்டுக்கோப்பான செயல்முறைத் திட்டங்கள் நடைமுறையாக்கப்பட்டு விரைவான, தரமான மற்றும் கண்ணியமான உறவுமுறை சப்ளையர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் இடையே உருவாக வழி செய்யும்.
மேலும், தொழில் முனைவோர் தமது வாடிக்கையாளரிடமிருந்து எப்படி தாம் விற்பனை செய்யப்படும் பொருளின் வருவாயை எதிர்நோக்குகிறாரோ அதேபோன்று தமது சப்ளையரின் எண்ணத்தைக் கருத்தில் கொண்டு, அவரது பொருள்களுக்கான விலையை உரிய முறையில் காலதாமதமின்றித் தருவது மிக முக்கியமாகும். விற்பனையாளரின் திருப்தியும், நம்பிக்கையும்கூட நமது வாடிக்கையாளர்களின் மன நிறைவுக்குச் சமமானதே. இதனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதால் நிச்சயமாக தரமான மற்றும் கண்ணியமான உறவுமுறையை ஏற்படுத்த முடியும்.
தொழில் முனைவோர் சிறிய, குறுந்தொழில் நிறுவனமாகச் செயல்பட்டாலும் (Private, Partnership, Proprietor concern) தனது நிறுவனத்திடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை, தனது மாத ஊதியமாக நிர்ணயித்து எடுத்துக் கொள்ளுதல் சிறந்தது. தொழில் தொடங்கி ஒரு வருட காலத்துக்குள் வருவாய் மற்றும் செலவினங்கள் சமன்நிலை அடைந்து, எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். இதனால் பலர் தமது நிறுவனத்தின் வளர்ச்சியை முதன்மையாகக் கொண்டு, தனக்கென்று வருவாயை எடுத்துக்கொள்ள முயல்வதில்லை. இதனைத் தொடர்ந்து செய்வதால் சுயதொழில் முனைவோரின் சுய மதிப்பீட்டையும் தமது குடும்ப நபர்களின் ஆதரவையும் இழக்க நேரிடலாம். கடலில் போட்ட பெருங்காமாக அவரது மூலதனம் ஆகிவிடலாம். இதனைத் தவிர்க்கும் பொருட்டு, தொழில் தொடங்கிய கால கட்டத்திலேயே தனது வருவாயினை ஊதியமாகக் கருதி எடுத்துக் கொள்வது சிறந்தது.
தொழில் முனைபவர் தனது பலம், பலவீனம் இரண்டையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்விரண்டு விஷயங்களை மேலோட்டமாகப் பார்க்காமல், தனி நபரின் குண நலன்கள், வருவாய், சக மனித ஆதரவு போன்ற அளவு கோல்களை வைத்து சீரிய முறையில் சுய ஆய்வு செய்வதால் பலவித இடையூறுகளை நேரிடையாக தைரியத்துடன் சந்திக்கலாம்.
தொழில் முனைபவர் எவராயினும் ஆணோ, பெண்ணோ தனது நடை உடை பாவனைகளை கவனத்தில் வைத்தல் நலம். தனது சுய வேலைவாய்ப்பினால் ஈட்டிய மரியாதையை கண்ணியமாகப் பாதுகாக்கும் பொருட்டு, அவரது ஆடை அணிகலன்களில் தனிக் கவனம் செலுத்துவது மிக அவசியம். தனி நபரின் தன்னம்பிக்கையினை வளர்க்கவும், சமூக மதிப்பில் உயரவும் அளிக்கவல்லதான இக்கருத்தினைப் பேணுவது மிகவும் அவசியமாகும். தொழில் முனைபவர் அநேக காலகட்டங்களில் பலரின் சந்திப்புகளையும், கூட்டங்களிலும் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். இத்தருணங்களில் வாடிக்கையாளரோ, விற்பனையாளர்களோ, சக தொழில் முனைவரோ ஒருவரின் நடை உடை பாவனையை வைத்து எடைபோடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். எனவே எக்காலக்கட்டங்களிலும் சுய தொழிலில் ஈடுபடுவோர் கண்ணியமாக உடை உடுத்தி, தனது வறுமை அல்லது இயலாமைகளின் சாயல் படியாத வண்ணம் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதற்காக படாடோபமாகவோ, தேவைக்கு அதிகமாகவோ உடைஉடுத்திக் கொள்ளுவதால் சமூகப் பார்வையில் மரியாதையினை இழக்க நேரிடும் அபாயமும் அதிகம்.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, பொருத்தமான ஆடை அணிகலன்கள், பேசும் திறன், தெளிவான சிந்தனை, சீரிய நோக்கம், நம்பகத்தன்மை ஆகியவை வெற்றி வாய்ப்பைப் பெறுக்கும்.
தொழில் முனைவோரின் நடத்தை, செயல்திறன் ஆகியவை சமூகப் பார்வையிலும், சக தொழில்முனைவோர் மத்தியிலும், அவரது வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியிலும், மிகவும் கூர்ந்து கவனிக்கப்படுவதால் ஒருவர் தனது திறமையின்மையையோ, பலவீனங்களையோ வெளிப்படுத்திக்கொள்ளக்கூடாது. இதில் கவனம் அவசியம்.
தனது தயாரிப்பில் உருவாகும் பொருளின் அடிப்படை விஷயங்களிலிருந்து, அதனைச் சார்ந்த தொழில் நுட்பம், வியாபார அணுகுமுறை முதலியவற்றைத் தெளிவாக அறிந்து வைத்திருப்பது தொழில் முனைவோரின் கடமையாகும். தற்போதைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு, தனது நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான, பன்முக அறிவினை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம்.
செய்யும் தொழில் பற்றிய உயர்வான கருத்து உங்களுக்கு இருக்கவேண்டியது அவசியம். என் நிறுவனம் செழிப்படையப்போகிறது, வளரப்போகிறது, வெற்றிபெறபோகிறது என்று சிந்தித்து வரவேண்டும். இத்தகைய பாசிட்டிவ் அணுகுமுறை உளவியல் ரீதியில் நல்ல பலனைப் பெற்றுத்தரும். உங்கள் தன்னம்பிக்கையும் வளரும்.
நிறுவனத்தின் உற்பத்தித் திறனை வளர்க்க நினைத்தால், அதன் செயல்திறன், உற்பத்தி அளவு, தொழில்நுட்ப நிலை, வசதி வாய்ப்புகள் ஆகியவற்றைக் கணித்து வைத்துக்கொள்ளுதல் நல்லது. புதிய வாய்ப்புகள் அல்லது ஆணைகள் அதிக அளவில் கிடைக்கலாம். அப்போதும்கூட, தமது நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் (Production capacity), மனித வளம் (Manpower) ஆகியவற்றின் அடிப்படையில் புதிய உற்பத்தி ஆணைகளை (Production Order) வாங்குவது குறித்து முடிவுகள் எடுப்பது நல்லது.
இவ்வாறு செய்வதன்மூலம் வாடிக்கையாளர்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்கமுடியும். ஒரு புதிய ஆர்டரை ஒப்புக்கொள்வற்கு முன்னால் அது சாத்தியமா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியுமா? ஒப்புக்கொண்ட தரத்தில் பொருளையோ சேவையையோ வழங்கமுடியுமா? இந்தக் கேள்விகளை உங்களுக்குள் நீங்கள் எழுப்பிக்கொள்ளாவிட்டால் வாடிக்கையாளர்களை நீங்கள் இழக்கவேண்டியிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக