திங்கள், 10 செப்டம்பர், 2012

வினாடிக்கு 2,500 கன அடி நீர் திறந்துவிட கர்நாடகம் ஒப்புதல்

டெல்லி: தமிழகம் கோரியபடி காவிரி நதிநீரை திறந்துவிட கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் சம்பா சாகுபடியைத் தொடங்க கர்நாடக அரசு தினந்தோறும் 2 டிஎம்சி நீரைத் திறந்து விட வேண்டும். பிரதமர் தலைமையில் காவிரி ஆணையக் கூட்டம் நடைபெறும் செப்டம்பர் 19-ம் தேதிக்கு முன்பாக இது தொடர்பான இடைக்கால உத்தரவைக் கர்நாடகத்துக்குப் பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீது கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது கர்நாடக அரசின் வழக்குரைஞர், ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்கினால்கூட கர்நாடகத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியின்றி பாதிக்கப்படும். அதனால் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றார். இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு மாதந்தோறும் கர்நாடகம் வழங்கிய நீரின் அளவு அடங்கிய பட்டியலை தமிழகம் தாக்கல் செய்தது.
இதையடுத்து நீதிபதிகள் டி.கே. ஜெயின், மதன் பி. லோகுர் அடங்கிய அமர்வு, கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பிலிகுண்டலு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகத்துக்கு இந்த ஆண்டு திறந்து விடப்பட்ட நீரின் அளவு தொடர்பான ஆவணங்களை கர்நாடகம் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது, இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது
இன்றைய விசாரணையின் போது கர்நாடக அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 2,500 கன அடி நீரைத் திறந்துவிட கர்நாடகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்துக்கு ஏற்கெனவே 7,500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக