சனி, 25 ஆகஸ்ட், 2012

Tamilnadu அரசை எதிர்த்து பேரணி, ஆர்ப்பாட்டம்

சென்னை: "அ.தி.மு.க., அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், பொதுமக்களின் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தியும், மாவட்ட அளவில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.
மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கான பணிகள் துவங்கவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் வறட்சியால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு, விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். சிமென்ட் விலை உயர்வு காரணமாக, கட்டடத் தொழிலாளர்களுக்கும் பணிகள் கிடைக்கவில்லை. சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில், ஆளுங்கட்சியினர், ஒவ்வொரு மாவட்டத்திலும், வாங்குவதை வாங்கிக் கொண்டு பரிந்துரை செய்வதாக, தொடர்ந்து அடுக்கடுக்கானப் புகார்கள் வருகின்றன. நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், மூன்றே மாதங்களில் மின் தட்டுப்பாட்டைப் போக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்த போதிலும், நாளுக்கு நாள் மின் தட்டுப்பாடு அதிகமாகிக் கொண்டே போகிறது. முதல்வர் விவாதம் நடத்துகிறாரே தவிர, நாள்தோறும் உத்தரவிடுகிறாரே தவிர, அவரது உத்தரவுக்குப் பணிந்து, மின்வெட்டு நின்றபாடில்லை. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு என்று தான் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வருகின்றன. இவைகளைப் பற்றியெல்லாம் ஆட்சியில் இருப்போர் அணுவளவும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு பத்து ஆயிரம் ரூபாய் நிவாரணமாக தரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்திஉள்ளனர். இந்த ஆட்சியில் நடைபெறும் அராஜகங்களையும், முறைகேடுகளையும் எடுத்துச் சொன்னால், உடனே அவதூறு வழக்கு என்ற பெயரால் வழக்குகளைப் போட்டு, வாய்ப்பூட்டு மாட்டி பழி வாங்கப் பார்க்கின்றனர். இதைக் கண்டித்தும், பொதுமக்களின் பிரச்னைகளை முன்னெடுத்துச் செல்லும் முறையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தி.மு.க.,வினர் பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்த வேண்டும். பொதுப் பிரச்னைகளை தவிர, உள்ளூர் பிரச்னைகளையும் இணைத்துக் கொண்டு போராட்டங்கள் நடைபெற வேண்டும். அந்தப் போராட்டங்களுக்கு தலைமை வகிப்பது யார்? முன்னிலை வகிப்பது யார்? என்பதை மாவட்ட நிர்வாகமே பேசி முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக