சனி, 25 ஆகஸ்ட், 2012

கர்நாடகாவில் BJPக்கு பெரும் சரிவு ஊழலோ ஊழல்

கர்நாடகாவில், முதன் முறையாக ஆட்சியில் அமர்ந்த பா.ஜ., அமைச்சர்களில் எட்டு பேர் ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவி இழந்ததால், மக்களிடையே, பா.ஜ.,வின் செல்வாக்கு சரிந்துள்ளது.
 . அடுத்தாண்டு மீண்டும் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தில், பா.ஜ., உள்ளது. ஆனால், அமைச்சர்களில் பலர் ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவியை இழந்ததோடு, சிலர் சிறையிலும், சிலர் நீதிமன்றத்துக்குமாக அலைந்து கொண்டிருக்கின்றனர். பல எம்.எல்.ஏ.,க்கள் மீதும் ஊழல் புகார்கள் எழுந்துள்ளன.

முன்னாள் முதல்வர் எடியூரப்பா:
மறு உத்தரவு மூலம் நிலம் ஒதுக்கியது, விதிமுறைகளை மீறி சுரங்க ஒதுக்கீடு போன்ற லோக் ஆயுக்தா, சி.பி.ஐ., வழக்குகளால், முதல்வர் பதவியை இழந்ததோடு, 28 நாள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ளார்.
தொழில் துறை அமைச்சர் முருகேஷ் நிரானி:
முறைகேடாக நில ஒதுக்கீடு செய்ததன் மூலமாக லாபமடைந்து, பிஜாப்பூரில் செயல்படாத நிறுவனம் ஒன்றுக்கு நில ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் இவரது குடும்பத்தினர் பெற்ற உதவிகள் குறித்து, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயர் கல்வி அமைச்சர் சி.டி.ரவி:
விதிமுறைகளை மீறி பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்தி, குடியிருப்புகளைக் கட்டியது போன்ற வழக்குகளில், இவர் மட்டுமின்றி, இவரது மனைவி, மைத்துனரையும் சேர்த்து, லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முன்னாள் அமைச்சர் கிருஷ்ணய்ய ஷெட்டி:
ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மறு உத்தரவு மூலம் நில ஒதுக்கீடு செய்தது போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறை வாசத்துக்கு பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ளார்.
சபாநாயகர் போப்பையா:
ஏரி புனரமைப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் சுரேஷ்குமார்:
முதல்வர் ஒதுக்கீட்டில், "ஜி' பிரிவு நிலத்தைப் பெற, தவறான தகவல்களை அளித்த குற்றத்துக்காக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போது, தன் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், முறைகேடு எதுவுமில்லை என்று அட்வகேட் ஜெனரல் கொடுத்த ஒப்புதலின் பேரில், ராஜினாமாவை திரும்பப் பெற்றார்.
அமைச்சர் யோகேஷ்வர்:
பலரை ஏமாற்றியதாக, இவர் மீது பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குடியிருப்பு நகரங்களை கட்டித் தருவதாக பலரிடம் பணத்தை வசூலித்து, பணம் கொடுத்தவர்களுக்கு திரும்பவும் கொடுக்காமல் நில ஒதுக்கீடு செய்யாமல் ஏமாற்றியதாக சி.ஐ.டி., துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
அமைச்சர் சோமண்ணா:
பெங்களூரு தெற்கு பகுதி நாகதேவனஹள்ளியில் மறு உத்தரவு மூலம் நில ஒதுக்கீடு செய்ததாக, இவர் மீது புகார் எழுந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி:
முறைகேடான சுரங்கத்தொழில், ஊழல், சி.பி.ஐ., நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தது போன்ற பல வழக்குகளால், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஜீவராஜ்:
இவர்களுக்கு அரசு ஒதுக்கிய வீட்டு மனையில், குடியிருப்பு வீடு கட்டியதற்கு பதிலாக, வணிக வளாகம் கட்டியதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.
அமைச்சர் ராம்தாஸ்:
மைசூருவில், இவர் மீதுள்ள நில அபகரிப்பு வழக்கு, சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு, எம்.பி., ராகவேந்திரா, எம்.எல்.ஏ.,க்கள் சம்பங்கி, சுரேஷ்பாபு, விஸ்வநாத், முனிராஜ் ஆகியோர் மீதும், ஊழல் உட்பட பல விவகாரங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்களைத் தவிர, சட்டசபை கூட்டத்தொடரின் போது, ஆபாசப் படம் பார்த்ததாக லட்சுமண் சவதி, பாட்டீல், கிருஷ்ண பலேமர் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், பல பா.ஜ., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சிறப்பு லோக் ஆயுக்தா சி.பி.ஐ., நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.

இந்த நிலையில், அடுத்து வரும் சட்டசபை தேர்தலில், கட்சியின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஊழல் புகாரில் சிக்கியவர்கள், சிறை சென்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கக்கூடாது என்ற எதிர்ப்பும், கட்சிக்குள் எழுந்துள்ளது. "தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்போது, இது குறித்து கட்சி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதன்படி நடக்கலாம்' என, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார். இருப்பினும், எடியூரப்பாவை பொறுத்தவரை, மாநில பா.ஜ.,வில் வலுவான நபராக உள்ளார். அவரை ஒதுக்கி விட்டு, தேர்தலை சந்திக்க முடியுமா என்ற ஐயமும் எழுந்துள்ளது. மாநிலத் தலைவர் ஈஸ்வரப்பாவும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு டிக்கெட் வழங்குவதில் ஒப்புதல் இல்லை என்று கூறியுள்ளார். "தெரிந்தோ, தெரியாமலோ, 2008ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்தது முதல் பா.ஜ.,வுக்குள் ஏற்பட்ட உட்கட்சி குழப்பம், அடுத்தடுத்து பலர் ஊழல் புகார்களில் சிக்கியது போன்றவை, மக்களிடையே வெறுப்பை வளர்த்துள்ளது' என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமய்யா கூறியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, ஜாதி அடிப்படையில் டிக்கெட் வழங்கியது, ரெட்டி சகோதரர்களின் பண பலத்தால், காங்கிரஸ், ம.ஜ.த.,விலிருந்து எம்.எல்.ஏ.,க்களை இழுத்தது போன்ற தவறுகளை, பா.ஜ.,வினரே தற்போது ஒப்புக் கொண்டுள்ளனர். வரும் தேர்தலிலும், இதே முயற்சி நடக்க இனி வாய்ப்பில்லை. ஏனெனில், இந்த முறை பண பலமும் இல்லை; மக்கள் எதிரில் முன் நிறுத்த சரியான தலைவர்களும் இல்லை என, பா.ஜ., தலைவர்களும், தொண்டர்களும் புலம்புகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக