செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

செவ்வாயில் Rover விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியது

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட "ரோவர்' விண்கலம், எட்டு மாதப் பயணத்துக்கு பின், நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது.
சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த சிவப்பு நிற கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறித்து, அமெரிக்காவின் "நாசா' விஞ்ஞானிகள், பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆராய, சில விண்கலங்கள் அனுப்பப்பட்டன. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக, சில தடயங்கள் கிடைத்தன.
"கியூரியாசிட்டி': இந்த கிரகத்தைப் பற்றி மேலும் ஆராய, கடந்த நவம்பர் மாதம், "ரோவர்' விண்கலம் செலுத்தப்பட்டது; 250 கோடி டாலர் செலவில் இந்த விண்கலம் தயாரித்து, செவ்வாய் கிரகத்தில் நேற்று தரையிறங்கியது. "ரோவர்' விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த, "கியூரியாசிட்டி' என்ற "ரோபோ' வாகனம், செவ்வாயின் நிலப்பரப்பில், நேற்று காலை, இறக்கி விடப்பட்டது.
"பாராசூட்' மூலம் மெதுவாக, செவ்வாயின் புவி பரப்பைத் தொட்ட, "கியூரியாசிட்டி', தரையிறங்கியதற்கு ஆதாரமாக, சில படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

மகிழ்ச்சி: ரோவர் விண்கலம் தொடர்பாக, 10 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த "நாசா' விஞ்ஞானிகள், "கியூரியாசிட்டி' செவ்வாயில் இறங்கியதும், கட்டுப்பாட்டறையில் இருந்தபடி, ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

96 மைல் பரப்பளவு: ஆறு சக்கரங்களுடன் கூடிய, "கியூரியாசிட்டி' "ரோபோ' வாகனத்தில், செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல், மண் அமைப்பு உள்ளிட்டவை ஆராயக்கூடிய வசதி உள்ளது. செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்ட பின், ஒரு மாதம் கழித்து, "கேலே' பள்ளத்தாக்கில் தரையிறங்கியுள்ள "கியூரியாசிட்டி' ஆய்வுகளை துவங்கும். செவ்வாய் கிரகத்தில் 96 மைல் பரப்பளவில் சுற்றி வந்து, "கியூரியாசிட்டி' ஆய்வுகளைச் செய்யும். புளூடோனியம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பேட்டரி, இந்த ரோபோவில் உள்ளது. "கியூரியாசிட்டி'யுடன் இணைக்கப்பட்டுள்ள ஆன்டெனா, ஸ்கேனர் கருவிகள், ஒரு வாரத்துக்கு பிறகு செயல்பாட்டுக்கு வர உள்ளன.

நேரடி ஒளிபரப்பு: ரோவர் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கும் நிகழ்ச்சி, நியூயார்க்கின், "டைம்ஸ்' சதுக்கத்தில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ""ஓரிரு நாட்களில் "ரோவர்' விண்கலத்திலிருந்து துல்லியமான படங்கள் கிடைக்கும்,'' என, "நாசா' மைய தலைமை இன்ஜினியர் ராபர்ட் மேனிங் தெரிவித்துள்ளார்.

அமிதாப் கோஷ்: ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய நாசா விஞ்ஞானிகள் குழுவில் இந்தியர் அமிதாப் கோஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக