புதன், 8 ஆகஸ்ட், 2012

Children of the Pyre காசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்!

 சிதையின் குழந்தைகள்  ஆவணப்படம் | Children of the Pyre
சுடுகாட்டுச்-சிறுவர்கள்“நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவராக இருந்தால்  தயவு செய்து இந்தப் படத்தை பார்க்க வேண்டாம், உடனே இந்த திரையரங்கை விட்டு வெளியேறிவிடுங்கள். உண்மையாகவே இந்த ஆவணப்படம் அதிர்ச்சியானது” என்று சிதையின் குழந்தைகள் (The Children of Pyre) ஆவணப்படத்தை அறிமுகப்படுத்தினார் அப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஜாலா.
குளிரூட்டப்பட்ட அந்த திரையரங்கத்தில் இது ஒரு விளம்பர யுக்தியாகவே பட்டது. ஆனால், ஆவணப்படம் ஆரம்பித்த சில நொடிகளில் அந்த திரையரங்கமே காசி நகரின் கங்கைக்கரையில் பிணங்கள் எரிக்கப்படும் சுடுகாடாக மாறிவிட்டது. உடல் முதல் உள்ளம் வரை வேர்த்து விறுவிறுத்துவிட்டது.  காரணம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த பிணங்களால் மட்டும் அல்ல, அந்த படம் முன் வைக்கும் அனல் தகிக்கும் உண்மைகளால்.
குழந்தைகள் என்றவுடன் ஹார்லிக்ஸ் பிள்ளைகளும் அமுல் பேபிகளும் நினைவுக்கு வந்தால் நீங்கள் இந்தப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். இது புனித பூமியான காசியில் இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு நேராக போய்ச் சேர உதவும் வகையில் பிணங்களை எரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்களின் வாழ்க்கையைப் பற்றியது.
www.vinavu.com

ஆவணப்படத்தின்  டிரைலர்

காசி நகரம்:
மாலை நேரம்:
மணிகார்னிகா சுடுகாடு:

பிணம் எரிப்பதற்கு முன் சடங்குகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுற்றிலும் சில சிறுவர்கள் உஷாராக நின்று கொண்டிருக்கிறார்கள்.  பிணத்தை சிதையின் மீது வைப்பதற்கு முன்பு அதன் மீது போர்த்தப்பட்டிருக்கும் பல வண்ண பளபளப்பான துணியை எடுக்கிறார் புரோகிதர். அவ்வளவுதான் அந்தத் துணியை நொடியில் கைப்பற்றிக் கொண்டு வேக வேகமாக அங்கிருந்து நகர்கிறான் ஒரு சிறுவன். பிணத்துடன் வந்தவர்களோ சிறுவர்களை திட்டியபடி துரத்துகிறார்கள். துணியை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கைமாற்றியபடி சிறுவர்கள் சிட்டாய் பறக்கிறார்கள்.
காசி ஹிந்துக்களுக்கு மிக முக்கிய புண்ணிய ஸ்தலம். தவறு செய்யும் கிறித்துவர்களுக்கு உடனடியாக சர்ச்சில் பாவமன்னிப்பு கிடைப்பது போல், ஹிந்துக்கள் என்ன பாவம் வேண்டுமானாலும் செய்து விட்டு காசியில் உள்ள கங்கையில் குளித்துவிட்டால் அவற்றை கரைத்துக் கொள்ளலாம்.
இன்னும் முக்கியமாக ‘காசியில் உயிரை விட்டு கங்கைக் கரையில் உடல் எரிக்கப்பட்டால் சொர்க்கத்திற்கு நேராக போய் விடலாம்’ என்ற நம்பிக்கையும் உண்டு. கடவுளின் நகரில் சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கும் துறைமுகமாக இருந்தாலும் சரி, அங்கு பிணங்களை எரிக்கும் வேலையை செய்பவர்கள் ‘தீண்டத்தகாதவர்கள்’தான். ‘நாங்க குளிச்சு சுத்த பத்தமாக வந்தாலும் எங்களைத் தொட மாட்டார்கள். பிணத்தையும் பிணத்தை மூடியிருக்கும் துணியையும் தொடுவதால் எங்களை தீண்டத்தகாதவர்கள் என்கிறார்கள்’ என்கிறான் ஒரு சிறுவன்.
காசியில் கங்கைக் கரையில் இருக்கும் மணிகார்னிகா சுடுகாட்டில் பல பிணங்கள் ஒரே நேரத்தில் எரிந்து கொண்டிருக்கின்றன. ஒரு காட்சியில் பார்க்கும் தூரத்தில் 14 பிணங்கள் எரிந்து கொண்டிருப்பதாக எண்ணுகிறான் ஒரு பையன். அனைத்து பிணங்களையும் தொழில்முறை வெட்டியான்கள் எரிக்க வேண்டும் என்றால் வரிசையில் பிணங்கள் வெயிட் செய்து நாறிவிடும். ‘நாங்கள் இல்லையென்றால் இந்த பிணங்களை நாய்கள்தான் இழுத்துக் கொண்டு போகும்’ என்று சொல்கிறான் ஒரு சிறுவன். ‘பிணம் சீக்கிரமா எரிஞ்சுடணும்னுதான் எங்க விருப்பம், அப்பதான் எங்க வேலை சீக்கிரம் முடியும், தூர தூரத்திலிருந்து வந்திருக்கும் சொந்தக்காரங்களும் சீக்கிரம் திரும்ப முடியும்’ என்று வாடிக்கையாளர்கள் மீது அக்கறையுடன் பேசுகிறான்.
‘இப்போ எனக்கு 15 வயதாகிறது, 5 வயதிலேயே இந்த வேலைக்கு வந்து விட்டேன்’ என்கிறான் ஒரு பையன். இன்னொருவனை 8 வயதுக்கு மேல் மதிக்க முடியாது.
ரவி, யோகி, சுனில், மனீஷ், ககன், ஆஷிஷ், கபில் என்ற ஏழு சிறுவர்களின் மூலமாக புண்ணிய நதிக் கரையில் இருக்கும் மயானத்தின் செயல்பாடுகளை காட்டுகிறது இந்த ஆவணப் படம்.
பிணங்களை எரிப்பதற்கு உதவி செய்யும் எடுபிடிகளாக இந்த சிறுவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக பிணத்தை மூடி வரும் அலங்காரங்கள் செய்யப்பட்ட, பல வண்ணத் துணியை எடுத்துச் சென்று விற்பதில்தான் அவர்களுக்கு வருமானம். அதைத் தவிர பிணத்தை எரிக்க வருபவர்களிடம் வசூலிக்க முடிந்ததை வசூலித்துக் கொள்கிறார்கள்.
பிணத்தை சிதையில் ஏற்றும் முன்பு துணியை உருவி அருகில் வைக்கிறார்கள். அந்த நேரத்தில் அருகில் பவ்யமாக நின்று கொண்டிருக்கும் சிறுவர்கள், லாகவமாக அதை கையில் எடுத்தபடி கவனத்தை ஈர்த்து விடாதபடி நடக்கிறார்கள், யாராவது கவனித்து விட்டால் ஓடுகிறார்கள். சில சமயம் பிணத்தை எரிக்க வந்திருப்பவர்கள் அல்லது வெட்டியான் பிடித்து துணியை பிடுங்கி கொள்கிறார்கள் ‘சில பேர் நல்லவங்க, துணியை கொடுத்திடுவாங்க, போய் காசு சம்பாதிச்சுங்க என்று. சில பேருக்கு பொறாமை நாங்க துணியை வித்து நிறைய சம்பாதிக்கிறோம்னு பிடுங்கிடுவாங்க, துணியை சிதையில் வைத்து எரித்துப் போடுவார்கள்’.
அந்தத் துணியை எடுத்துச் சென்று கடைகளில் விற்றால் ஒரு துணிக்கு 2.50 ரூபாய் கிடைக்கும். அதை துவைத்து, மடித்து, பையில் போட்டு கடைகளில் 25-30 ரூபாய் விலைக்கு மறுபடியும் விற்கிறார்கள் கடைக்காரர்கள்.
கிடைக்கும் துணி எல்லாவற்றையும் திரட்டி எடுத்துக் கொண்டு போய் விற்று பணத்தை பிரித்துக் கொள்கிறார்கள் இந்த சிறுவர்கள். இதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்காகத்தான் தங்கள் வாழ்நாளையே இங்கு கழிக்கிறார்கள். பிணம் ரோட்டில் கடக்கும் போது நாம் மூக்கை பொத்திக்கொள்கிறோம். நம் குழந்தைக்கு கூட சாவைப் பற்றி விளக்காமல் “சாமிகிட்ட போய்டாங்க” என்று தான் சொல்லுகிறோம். ஆனால் காசியில் இருக்கும் இந்த சிறுவர்கள் சாவை தினமும் எதிர்கொள்கிறார்கள்.
“ஆரம்பத்தில் இந்த வேலைக்கு போனா என் அம்மா என்னை அடித்து நொறுக்கி விடுவார். இனிமேல் சுடுகாட்டிற்கு சென்றால் கொன்று விடுவேன் என்பார். ஆனால் ஒரு நாள் 500 ரூபாய் நோட்டை கொண்டு கொடுத்த பிறகு ‘நீ தினமும் சுடுகாட்டிற்கே வேலைக்கு போ’ என்று சொல்லிவிட்டார்”
அவர்கள் கஞ்சா புகைக்கிறார்கள், புகையிலை சாப்பிடுகிறார்கள். ‘இத்தனை பிணங்களை எரிக்க வேண்டியிருக்கிறது, கஞ்சா பிடிச்சா இன்னும் நான்கு பிணங்களை எரிப்பதற்கு தயாராக மனது லேசாகி விடும்’ என்கிறான் ஒரு பையன்.
‘சின்ன பையனாக இருந்து கொண்டு இந்த வயதிலேயே புகையிலை சாப்பிடுகிறாயே’ என்று கேட்டதும்
‘அது சரி, இவ்வளவு சின்ன வயதில் வேலை செய்து சம்பாதிக்கிறேனே, அதில் உங்களுக்கு வெட்கம் இல்லையா! அவ்வளவு அக்கறை இருந்தா அரசாங்கத்திடம் சொல்லி மாசா மாசம் 5,000 ரூபாய் அனுப்பி வைக்க ஏற்பாடு செய். நான் இதை எல்லாம் விட்டு விடுகிறேன். அது முடியாதுன்னா என்னை என் போக்கில் விட்டு விடு’
ஆம், இவர்களின் வாழ்க்கை பரிதாபப்பட வேண்டிய ஒன்றல்ல, சமூகத்தின் மீது கோபம் கொள்ள வேண்டிய விடயம். நம் பரிதாபத்தை உதிரும் மயிருக்கு சமமாக கூட அவர்கள் மதிப்பதில்லை.
“இன்று ஒரு அரசியல் தலைவரின் பிணத்தை எரிக்கிறார்கள். எங்க தேசத்தின் மிகப்பெரிய தலைவராம் அவர்” என்கிறான். தூரத்தில் மூவர்ணக் கொடி போர்த்திய உடல் ஒன்று சிதையில் வைக்கப்படுகிறது.
“அரசியல் தலைவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்”
“தாயோளி எல்லாவனும் தாயோளிகதான்!. பணக்காரங்களுக்குத்தான் வேலை செய்கிறானுங்க, அதிலும் முதலில் அவங்க பையை நிரப்பிக் கொள்கிறானுங்க’
“நான் மட்டும் நாட்டின் தலைவரானால், எல்லாருக்கும் ஒரு வீடு கட்டிக் கொடுத்து விடுவேன். ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பு எரிய ஏற்பாடு செய்வேன். எல்லோருக்கும் நல்ல மருத்துவ வசதி செய்து கொடுப்பேன். ஆனா, ஏழைகளுக்கு மட்டும்தான். பணக்காரங்க எல்லாம் தாயோளிங்க’
“தலைவர்கள் பிணத்தின் மேல் மூவர்ணக் கொடி போர்த்தியிருக்கும். அதை எடுத்துச் சென்று போன முறை ஒரு படகுக் காரருக்கு 5 ரூபாய்க்கு விற்றேன்”. அந்த வகையில் ஒரு தலைவரின் மரணம் இந்த சிறுவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஓரிரு ரூபாய்கள் அதிக வருமானம் கிடைக்கும்.
ஆகஸ்ட் 15 அன்று மூவண்ணக் கொடி ஏற்றுகிறார்கள், தேசிய கீதத்தை பாடிக் காட்டுகிறான் ஒரு சிறுவன். மாலையில் ஓய்வு கிடைக்கும் போது தொலைக்காட்சி பார்க்கிறார்கள்.
பிணங்கள் அதிகமாக இருக்கும் நாட்களில் இரவெல்லாம் கூட வேலை செய்கிறார்கள்.  பிணங்கள் எரிந்துக்கொண்டே இருக்கும் என்பதால் பக்கத்திலேயே, அதாவது எரிந்துகொண்டிருக்கும் சிதைக்கு 5 அல்லது 10 அடிக்குள் உள்ள தரையில் அப்படியே படுத்துக்கொள்கிறார்கள். இரவில் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் தூங்குவதற்குள் ஏதாவது ஒரு பிணத்தை புரட்டிப் போடச் சொல்லி யாராவது எழுப்பி விடுகிறார்கள்.
வெயில் காலத்தில் சூட்டில் சிறுநீர் கூட வராது, உடம்பெல்லாம் வேர்க்குருக்களால் நிரம்பி விடுகிறது.
ககன் எனும் சிறுவனுக்கு 10 வயது தான். அவன்தான் எல்லோரையும் விட குறும்புக்காரன். தூக்கத்தில் ‘சிதைகள் எழுந்து நிற்கும், வாயைப் பிளந்து காட்டும்’ என்று சொல்கிறான்.  ”ஒரே கெட்ட கனவு பேய்கள் எல்லாம் வருகின்றன” என்கிறான்.
ந்தப்படத்தின் டிவிடியை என் நண்பர் ஒருவருக்கு கொடுத்தேன். உயர்  மத்திய வர்க்க நண்பரின் மனைவி இந்தப்படத்தை பார்த்துவிட்டு “நல்ல வேளை, என் பிள்ளைகள் புண்ணியம் செய்தவர்கள்”என்றார். பார்ப்பனிய தத்துவத்தின் வீரியத்தை புரிந்து கொள்ள நண்பரின் மனைவி ஒரு சாட்சி. ஆனால் காசியிலேயே பிறந்து தினமும் கங்கையில் காலை மாலை குளிக்கும் அந்த சிறுவர்களின் பாவம் கரையவில்லை என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். கங்கையுடன் துளியும் சம்பந்தமில்லாத நம் சென்னை குழந்தைகள் கூட புண்ணியத்துடன் பிறந்துவிடுகின்றன.
கண்ணுக்கு முன் நடக்கும் எந்த அயோக்கியத்தனத்தையும் கடந்து சூடு சொரணையற்று செல்ல நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆயிரமாண்டு காலம் அடிமையாக, அரை வயிற்றுக் கஞ்சி குடித்து ஆதிக்க சாதிக்கு உழைத்து, கேள்வி கேட்காமல் மடிந்த மனிதர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவத்தை எண்ணி, அடுத்த ஜென்மத்தில் ஆதிக்க சாதியில் பிறக்க வேண்டிக் கொண்டே, விதியை நொந்து இறந்தவர்கள் தான்.
அந்த தத்துவம் இன்று சுரண்டப்படுபவர்களை பாவம் செய்தவர்களாகவும், சுரண்டுபவர்களை புண்ணியம் செய்தவர்களாகவும் சொல்லுகிறது. அப்பொழுது கங்கையில் குளித்தால் பாவம் போகாது என்ற சிறு உண்மையையாவது ஒப்புகொள்வார்களா? தலித் ஒருவர் கங்கையில் குளித்துவிட்டு வந்தால் ‘பாவ’மெல்லாம் போய், நல்ல வாழ்க்கை அவருக்கு கிடைக்குமா?
சுடுகாட்டுச்-சிறுவர்கள்
இயக்குநர் ராஜேஷ்.எஸ்.ஜாலா
ஆனால் இந்தப் படத்தை எடுத்த ராஜேஷ் ஜாலா ஒரு தீர்வை சொல்கிறார். ‘இந்தப்படத்தை அரசியல்வாதிகள், ஆளுபவர்களுக்கு போட்டு காட்ட வேண்டும். இது தான் இந்தியா’ என்று அம்பலப்படுத்தி அவர்களை திருத்த வேண்டும் என்கிறார்.
‘ஆளுபவர்களும், அதிகாரிகளுக்கும் இந்த உண்மைகள் தெரியாது’ என்பது அபத்தம். சரி தெரியாது என்ற வைத்துக்கொண்டாலும், தினம் தினம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைக்கும் பொருளாதார கொள்கை, போராடும் மண்ணின் மைந்தர்களை தீவிரவாதிகள் என்று கொல்வது போன்ற சமூகப் பணி செய்துக்கொண்டிருக்கும் அவர்கள் இந்த படத்தை பார்த்து திருந்தி விடுவார்கள் எனும் வாதத்தை பற்றி என்ன சொல்வது! அவர்கள் என்ன விஜய்காந்த படத்தில் வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளா அல்லது எம்ஜி ஆர் படத்தில் வரும் நம்பியார்களா, நீண்ட நீதி நெறி வசனத்தின் பின் திருந்திவிட?
ஹார்லிக்ஸ் பிள்ளைகள் அல்ல, சமுகத்துடன் உறவாடும் பிள்ளைகள் தான் நேர்மையாகவும், இரக்கத்துடனும் இருக்கிறார்கள். இந்த சிறுவர்கள் ஒரு அனாதை பிணத்தை பார்த்தவுடன் அதற்கு ஈமச் சடங்குகள் செய்து அதை எரிக்கிறார்கள்.
அந்த சிறுவர்களுக்கு அழகுணர்ச்சி இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், ஆடிப்பாடுகிறார்கள். தங்களுக்குள் சிரித்து கேலி பேசி மகிழ்கிறார்கள். நவராத்ரா திருவிழா நேரத்தில் எரியும் சிதைகளின் பின்னணியில் மேடை போட்டு ஆட வரும் நாட்டிய பெண்களுடன் ககன் டான்ஸ் ஆடுகிறான். ‘நான் அவ்வளவு நல்லா ஆடலை’ என்று வெட்கத்துடன் புன்னகைக்கிறான். மழை பெய்யும் போது, எடுத்து வைத்திருந்த பிணத்தை போர்த்தும் துணியை கட்டிக் கொண்டு அழகு பார்க்கிறான் இன்னொரு சிறுவன்.
‘இந்தத் தொழிலை விரும்பி தான் செய்கிறோம் என்று அவர்கள் எங்குமே சொல்லவும் இல்லை. வேறு வழியில்லை, குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்ந்திருக்கிறார்கள்.
ஹிந்துத்வவாதிகளும், ஜெயமோகன்களும் ஜாக்கி ஏத்தி நிற்க வைக்கும் காசியின் புனிதத்தை இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கை அவற்றை கேள்வி கேட்டபடியே தான் இருக்கிறது. படத்தை பார்த்த பிறகு தீர்வை நோக்கி நகர வேண்டியது நாம் தான். என்ன செய்ய போகிறோம்? இவர்களுக்காக உச்சு கொட்டிவிட்டு நகரபோகிறோமா? அல்லது ஹிந்து மரபை எண்ணி கன்னத்தில் போட்டு கொண்டு முக்தியடைய போகிறோமா?
_________________________________________________
- ஆதவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக