புதன், 8 ஆகஸ்ட், 2012

இந்திக்கு எதிராக, இந்திக்கு ஆதரவாக

மொழிப்போர் / அத்தியாயம் 3
இந்தியாவின் பொதுமொழியாக இந்தி என்ற காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற காங்கிரஸ் செய்த காரியங்களில் ஒன்று இந்தி மாநாடு நடத்துவது. ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது அகில இந்திய இந்தி மாநாட்டையும் சேர்த்து நடத்தும் நடைமுறை 1924ல் இருந்து அமலுக்கு வந்தது. இந்தியின் பெருமை, தேசிய மொழியாக இந்தி ஆகவேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை பற்றி இந்தி மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. முக்கியமாக, நாடு தழுவிய இந்திப் பிரசாரம் பற்றி.
அந்த வகையில் நான்காவது அகில இந்திய இந்தி மாநாடு 1927 ஆம் ஆண்டு சென்னையில் கூடியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் சரோஜினி நாயுடு. இந்திப் பிரசார இயக்கம் என்பது ஒரு கட்சியின் அல்லது ஒரு வகுப்பாரின் வேலை அல்ல; இது நாட்டிலுள்ள அனைத்து மக்களின் – கட்சிகளின் – வகுப்பாரின் ஒற்றுமை உணர்வின் அடையாளம் என்ற சரோஜினி நாயுடுவின் பேச்சுக்கு மாநாட்டில் நல்ல வரவேற்பு.
காந்தி முன்மொழிந்த இந்தியை இதர காங்கிரஸ் தலைவர்களும் வழிமொழிந்தனர். முக்கியமாக, இந்திய அரசுப்பணி தேர்வாணையத்தின் தலைவராக இருந்த சர். டி. விஜயராகவாச்சாரி. பள்ளி, கல்லூரிகளில் இந்தியை இரண்டாவது மொழிப்பாடமாக வைக்கவேண்டும். அதன்மூலம் இந்தி கற்றுக்கொடுக்கும் பணிகள் கல்வித்துறைக்கு எளிமையாகும்; மக்களுக்கும் பலன் தரும் என்றார் இவர். இந்தி என்பது மிக எளிமையான மொழி. ஆறே மாதங்களில் ஒருவர் வட இந்தியர் புரிந்துகொள்ளும் அளவுக்குக் கற்றுக்கொள்ள முடியும் என்று சொன்ன விஜயராகவாச்சாரி, இந்தித் தேர்வில் ஒருவர் வெற்றிபெற முடியவில்லை என்றால் அவரைப் படித்தவராகவே கருதமுடியாது என்றார்.

இந்தப் பின்னணியில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தியைக் கற்பிக்கவேண்டும் என்ற கருத்து எழுந்தது. இந்தியை ஐந்தாம் வகுப்பு தொடங்கி உயர்நிலைப் பள்ளிகளிலும் விருப்பப்பாடமாக வைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை சென்னை மாநகராட்சி மன்றத்தில் கொண்டுவந்தார் சுயராஜ்ஜியக் கட்சி உறுப்பினர் எஸ். சத்தியமூர்த்தி. இந்திக்குப் பதிலாக இந்துஸ்தானியை வைக்கவேண்டும் என்றார் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர். இருப்பினும், சென்னை மாநகராட்சி மன்றத்தில் நீதிக்கட்சி பெரும்பான்மையுடன் இருந்ததால் சத்தியமூர்த்தியின் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
ஆனாலும் தன்னுடைய முயற்சிகளை எஸ். சத்தியமூர்த்தி கைவிடவில்லை. இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பிரசாரம் செய்வது மட்டும் போதாது. இந்தியைக் கற்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தவேண்டும். ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாய மொழிப்பாடமாக ஆக்கவேண்டும். அதைச் செய்தால் இன்னும் பதினைந்தே ஆண்டுகளில் இந்தியா இந்தி நாடாகிவிடும் என்று பேசினார்.
இந்தப்பேச்சு 12 ஜூலை 1934 தேதியிட்ட மெட்ரால் மெயில் ஏட்டில் வெளியானது.
காந்தி, சத்தியமூர்த்தியைத் தொடர்ந்து ராஜாஜியும் இந்திப் பிரசாரப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். இந்தியப் பள்ளிகளில் பிரிட்டிஷாரின் வரலாறு ஆங்கில மொழியில் சொல்லித்தரப்படவேண்டும்; இந்திய வரலாறு இந்தியில் சொல்லித்தரப்படவேண்டும் என்ற கருத்தை திருநெல்வேலியில் நடந்த பள்ளிவிழா ஒன்றில் முன்வைத்த அவர், தென்னிந்தியர்களுக்கு இந்தி அறிவைப் புகட்டுவதன்மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற வழிவகுக்கும் என்றார்.
காந்தி, சத்தியமூர்த்தி, ராஜாஜி உள்ளிட்ட தலைவர்கள் இந்திப் பிரசாரப் பணிகளில் தீவிரமாக இயங்கியபோது இந்திக்கான எதிர்க்குரல்களும் எழுந்துகொண்டிருந்தன. முக்கியமாக, காங்கிரஸ் கட்சியின் அலுவல் மொழியாக இந்தி ஆகவேண்டும் என்ற கருத்து எதிர்க்கப்பட்டது.
‘இந்திக்கு முதலிடம் அளிப்பது நமது அடிமைத்தனத்தை வேறொரு உருவத்தில் நிலைநாட்டுவதாகவே முடியும். ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பெற்றால் தென்னாட்டவருக்குத்தான் மிகுந்த கேடு உண்டாகும். தாய்மொழியே மக்களின் உயிர்நிலை. வேற்றுமொழி ஒன்றைப் படிக்கவும் அதுவழியாக நமது கருத்துகளைத் தெரிவிக்கவும் நாம் கட்டாயப்படுத்தப்பட்டால் நமது உண்மையான முன்னேற்றத்துக்குத் தடை ஏற்படுவதுடன், நமது மனநிலையும் வளர்ச்சி அடையாது தேய்ந்துவிடும். ஆகவே, இந்தியைப் பொதுமொழி ஆக்குவது பற்றி மிகமிக விழிப்பாக இருக்கவேண்டும் என்று நமது அரசியல்வாதிகளை எச்சரிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது!’ என்று 1923 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சியின் செயலாளர்களுள் ஒருவராக இருந்த கோபால கிருஷ்ணமய்யா பேசினார்.
கிருஷ்ணமய்யா எதிர்ப்பு தெரிவித்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் அலுவல் மொழியாக இந்தி அங்கீகரிக்கப்பட்டது. அப்போது பெரியார் ஈ.வெ.ராவின் குடி அரசு ஏடு கண்டனம் தெரிவித்தது. 1926 மார்ச் மாதம் குடி அரசு இதழில் வெளியான கட்டுரையில், ‘பழையன கழிந்து, புதியன புகுவதாக இருந்தால் நமக்குக் கவலை இல்லை. ஆனால் புதியவைகள் வந்து பலாத்காரமாகப் புகுந்துகொண்டு, பழையவைகளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதானால் அதையும் சகித்துக்கொண்டு அதற்கு வக்காலத்து பேசுவது என்பது பாஷைத் துரோகம்; சமூகத்துரோகம்’ என்று எழுதப்பட்டிருந்தது.
தாய்மொழி தவிர்த்த பொதுமொழி என்றால் அது ஆங்கிலமாகத்தான் இருக்கவேண்டும் என்று குடி அரசின் எழுதினார் பெரியார். ‘இன்றைய தினம் மக்களுக்கு அவரவர்கள் சொந்த பாஷை தவிர வேறு பாஷை தெரியவேண்டுமானால் அது ஆங்கில பாஷை என்றே நாம் தைரியாமாகச் சொல்லுவோம். உலகமே தங்கள் கிராமந்தான் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறி, இப்போது நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு முழுவதும் தெரிந்து, இருநூறு கோடி மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்போது உலகச் செலாவணி பாஷை எதுவோ அதை மனிதன் அறியாமல், கபீர்தாஸ் ராமாயணத்தைப் படிக்கவேண்டிய இந்தி பாஷையை எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.’
காங்கிரஸ் கட்சியின் இந்தி ஆதரவு நடவடிக்கைக்கு பதில் தரும் வகையில் 1931 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தின் மாகாண மாநாடு கூடியது. பழைய புராணக் கதைகளைச் சொல்வதைத்தவிர வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி மொழியை நமது மக்கள் படிக்கும்படி செய்வது பார்ப்பனீயத்துக்கு மறைமுகமாக ஆக்கத்தேடும் முயற்சி என்று அறிவித்த சுயமரியாதை மாநாடு (1931), தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடையே பரப்பவும் புத்தம் புதிய தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும் மற்ற நாடுகளில் எழுந்திருக்கும் சீர்திருத்த உணர்ச்சியை நமது மக்களிடையே தோற்றுவிக்கவும் உலகமொழியாக விளங்கும் ஆங்கிலத்தையே தாய்மொழிக்கு அடுத்தபடியாக நமது இளைஞர்கள் கற்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் மட்டும் இந்தித் திணிப்பு முயற்சிகளை எதிர்க்கவில்லை. சுத்தானந்த பாரதியார், மறைமலை அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களும் எதிர்த்தனர். இந்தி மொழியை நாட்டின் முதன்மையான மொழியாக ஆக்க சிலர் முயல்வது போல தமிழ்நாட்டின் முதன்மை மொழியாக தமிழைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பது சுத்தானந்த பாரதியாரின் விருப்பம்.
‘பிறமொழிகளின் முன்னேற்றத்துக்குத் தக்கவாறு தமிழ் முன்னேறியாகவேண்டும். அதற்கு மாறாக, நமது பள்ளிச்சிறார் தமிழைப் புறக்கணித்து, வேறொரு மொழிக்கு ஆக்கம் தேடும்படியான எத்தகையை முயற்சியும் தமிழுக்கு ஆக்கம் தராது. முதலில் ஒவ்வொருவரும் தமது தாய்மொழியை நன்கு கற்கவேண்டும். பிறகு தொழில் நடத்துவதற்கும் உலகுடன் பழகுவதற்கும் உலகெங்கும் நன்கறிந்த ஒரு மொழியைக் கற்றறியவேண்டும். அத்தகையை மொழி இப்போது ஆங்கிலமே.. இந்தியை நாம் வெறுக்கவில்லை. கற்பவர் கற்கட்டும்; கட்டாயம் கற்றே தீரவேண்டும். இன்றேல், வாழமுடியாது என்று தடபுடல் செய்யவேண்டாம்’ என்று எழுதினார் சுத்தானந்த பாரதியார்.
பெரியார் ஆங்கிலத்துக்கு ஆதரவாகவும் சுத்தானந்த பாரதியார் தமிழுக்கு ஆதரவாகவும் நிலைப்பாடு எடுத்தபோது, இந்தியாவின் பொதுமொழியாக இருப்பதற்கு இந்திக்குத் தகுதியில்லை என்ற கருத்தை முன்வைத்தார் மறைமலையடிகள்.
‘பொதுமொழி என்பது மக்களால் பேசப்படுகிறது. வாழும் மொழியாக இருந்தால் மட்டும் போதாது. அம்மொழி பண்டைய மொழியாக இருக்கவேண்டும். தொடர்ச்சியாக நெடுங்காலம் பேசப்பட்டு, இப்போதும் பேசும்மொழியாக இருக்கவேண்டும். அந்த மொழி உயரிய இலக்கிய வளம் நிரம்பியதாக இருக்கவேண்டும். அந்த மொழியைப் பேசுகின்ற மக்களின் அரசியல் கொள்கைகள், சிந்தனை சார்ந்த சமயக் கொள்கைகள், சமூக நெறிகள் போன்ற
மக்கள் மனமுவந்து ஏற்கத்தக்க பல்துறை அறிவுசார்ந்த இலக்கியங்கள் சொந்தப் படைப்பிலக்கியங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வகையில் இந்தி மொழிக்கு பழமைச் சிறப்பும் இல்லை; இலக்கிய வளமும் இல்லை. வட இந்தியாவில் இந்தி பேசப்படுவதிலேயே பலவித வேறுபாடுகள் உள்ளபோது தமிழர்களை இந்தியைக் கற்றுக் கொள் என்று வற்புறுத்துவது சக்தியையும் முழு நேரத்தையும் வீணாக்குவதாகும்’ என்றார் மறைமலை அடிகள்.
ஆக, இந்திக்கு ஆதரவாக காந்தி, காங்கிரஸ், சுயராஜ்ஜியக் கட்சியினர் ஆகியோர் ஒருபக்கமும் இந்தித்திணிப்புக்கு எதிராக பெரியார், மறைமலை அடிகள், சுத்தானந்த பாரதியார் உள்ளிட்டோர் இன்னொரு பக்கமும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அந்தத் தேர்தலின் முடிவு மொழிப்போராட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக