ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

இந்தியாவில் மத கலவரம் ஏற்படுத்த பாக். உளவுத்துறை பரப்பும் பீதி

புதுடெல்லி, ஆக. 18-மும்பை தாக்குதல் போல மீண்டும் ஒரு பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயன்று வருகிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான அய்.எஸ்.அய். எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் கடந்த சில மாதங்களாக வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. இதனால் விரக்தி அடைந்துள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் முஜாகிதீன்கள் மூலம் நாடெங்கும் மத கலவரத்தை தூண்டி விடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
இந்தியாவில் உள்ள இந்துக்களையும், முஸ்லிம்களையும் மோத செய்து, பொருளாதாரத்தை சீர்குலைத்து குளிர்காயும் நினைப்பில் பாகிஸ்தான் தீவிரவாதிகளும், அய்.எஸ்.அய்யும் மத கலவரத்தை தூண்டும் போலி எம்.எம். எஸ்., எஸ்.எம்.எஸ். தகவல்களை பரப்புகிறார்கள். குஜராத் முஸ்லிம்களிடம் கலவரம் ஏற்படுத்த அவர்கள் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தை கையில் எடுத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு அதை பின்னணியாக வைத்து போலி எம்.எம்.எஸ். தயாரித்து வடகிழக்கு மாநில மக்களிடம் தாக்குதல் பீதியை ஏற்படுத்தி விட்டது. பெங்களூரில் இந்த பீதியை கிளப்புவதன் மூலம் இந்திய தகவல் தொழில் நுட்ப துறையில் முடக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது அய்.எஸ்.அய்யின் திட்டமாகும்.
பெங்களூரில் பறிமுதல் செய்த எம்.எம்.எஸ். காட்சிகளை ஆய்வு செய்த மத்திய உளவுத்துறையினர், இதில் அய்.எஸ்.அய். பின்னணியில் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். எனவே எம்.எம்.எஸ்., எஸ்.எம்.எஸ். தகவல்களை பரப்பி, அய்.எஸ்.அய். சதிக்கு யாரும் உதவிட வேண்டாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்தே ஒரே சமயத்தில் ஏராளமான எம்.எம்.எஸ்., எஸ்.எம்.எஸ். அனுப்புவதை 15 நாட்களுக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக