திங்கள், 6 ஆகஸ்ட், 2012

மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வாலிபர் மர்ம சாவு

 Youth Who Tried Attack Matha Amirthanandamayi Dead
 கொல்லம் ஆசிரமத்தில் மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பீகார் வாலிபர் திருவனந்தபுரத்தில் உள்ள  மருத்துவமனையில் மர்மமான முறையில் பலியானார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி அருகே உள்ள வள்ளிகாவு பகுதியில் மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம் உள்ளது. கடந்த 1ம் தேதி ஆசிரமத்தில் மாதா அமிர்தானந்தமயி பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டு இருந்தார். இதையொட்டி ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அப்போது திடீரென ஒரு வாலிபர் மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்றார். உடனடியாக பாதுகாவலர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனால் ஆசிரமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கருணாகப்பள்ளி போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் சத்னாம் சிங்மான் என்றும், பீகார் மாநிலம் காயா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. பீகாரில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படித்து வந்த அவர்  படிப்பை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வாலிபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் கேரளா வந்த அவர் கொல்லம் ஆசிரமத்தில் வைத்து மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார். கருணாகப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கொல்லம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கொல்லம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் திருவனந்தபுரம் போரூர் கடை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு  மருத்துவமனையில் உள்ள குளியலறையில் மயக்கமடைந்த நிலையில் சத்னாம் சிங் கிடந்தார். உடனடியாக அவரை திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து
திருவனந்தபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயனற வாலிபர் மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக