புதன், 8 ஆகஸ்ட், 2012

மதுரையில் அம்பேத்கர் சிலைகள் உடைப்பு

 Ambedkar Immanuel Sekaran Statues Vandalised
 மதுரையில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்ததால் அங்கு பதட்டம் நீடித்து வருகின்றது.
மதுரை அவ‌னியாபுர‌ம் அருகே உள்ள பெருங்குடியில் விமான நிலையம் செல்லும் வழியில் உ‌‌ள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையை நேற்று (7ம் தேதி) நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி உள்ளனர். இதே போன்று பெருங்குடி அருகே சின்னஉடைப்பு கிராமத்தில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன், டாக்டர் அம்பேத்கர் சிலைகளையும் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்திவிட்டு தப்பிவிட்டனர்.

இந்த இர‌ண்டு இடங்களில் அம்பேத்கர் சிலைகள், மாவீரன் இமானுவேல்சேகரன் சிலை ஆகியவை சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இ‌ந்த ச‌ம்பவ‌ம் அவனியாபுரம், பெருங்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு தீ போலப் பரவியது.
இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல் ‌தலைவ‌ர்க‌ளி‌ன் ‌சிலைகளை சேத‌ப்படு‌த்‌தியவ‌ர்களை உடனடியாக கைது செ‌ய்ய‌க் கோ‌ரி பெருங்குடி ரிங் ரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு, மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் நாசவேலையில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி மனு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் சிலை உடைப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இரவு நேர பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அரசு பேருந்துகளும், சில தனியார் பேருந்துகளும் ஓடவில்லை.
சிலை உடைப்பு சம்பவத்தால் தென் மாவட்டங்களில் பதட்டம் நீடித்து வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக