புதன், 8 ஆகஸ்ட், 2012

சில நூறு பறவைகள். அதுவும் கொத்து கொத்தாய் செத்து இருந்தன.


பூமியின் வட துருவம் தன் நிலையில் இருந்து கொஞ்சம் நகர்ந்து விட்டது.
பூமியின் பரப்பில் உள்ள மின் காந்த தன்மையை நிச்சயிப்பது இந்த இரு துருவங்களில் இருக்கும் காந்த சக்தியே


அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் தம்பா விமான நிலையம் முந்தைய நாள் வரை அமைதியாக இருந்தது, கலகலப்பாக இருந்தது…. ஆனால் அன்று அதே விமான நிலையத்தை கலவரமும், பயமும் மழை மேகம் போல சூழ்ந்து கொண்டது. விமான நிலைய சிப்பந்தி தான் முதலில் அதை கவனித்தார்.
தூரத்தில் இருந்து பார்த்த போது, பிரதான ஓடுதளத்தில் குப்பைகள் சில இருந்தன. தொலை நோக்கு கருவியின் உதவியோடு, அருகில் பார்த்த போது கொஞ்சம் விபரிதமாக பட்டது. அவைகள் பறவைகள். ஒன்றல்ல இரண்டல்ல சில நூறு பறவைகள். அதுவும் கொத்து கொத்தாய் செத்து இருந்தன. மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. தன் மேலதிகாரிக்கு இதை தெரிவித்து விட்டாலும் கூட, இன்னும் அந்த சிப்பந்தி அதை குறித்து யோசித்து கொண்டுதான் இருந்தான். அந்த ஏர்போர்ட் பரபரப்பானது. இந்த மர்ம சாவு குறித்து பல வித ஊகங்கள், பல சிந்தனைகள் என்றாலும் எதுவும் ஒரு ஆணித்தரமான காரணத்துக்கு இட்டு செல்லவில்லை. பல திசைகளில் இதன் ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டன. அனைவரும் இது குறித்து கவலையானார்கள். இந்த மர்ம சாவு, தொடர்கதையாக நீண்டது. அது அவர்களை மேலும் கவலைக்குள்ளாக்கியது.
சம்பவம் நடந்து இருவாரங்களான பின் முதல் முறையாக, இன்று அதன் காரணம் பௌதியல் ரீதியாக விளக்கப்பட்டது.

பூமியின் வட துருவம் தன் நிலையில் இருந்து கொஞ்சம் நகர்ந்து விட்டது.
பூமியின் பரப்பில் உள்ள மின் காந்த தன்மையை நிச்சயிப்பது இந்த இரு துருவங்களில் இருக்கும் காந்த சக்தியே. துருவங்களின் இடம் சற்றே நகர்வதால், இரு துருவங்களில் இருக்கும் எதிர் எதிர் காந்த சக்தி மாற்றம் அடைகிறது. அதன் விளைவாக சில மாறுதல்கள் பூமியில் தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது. காந்த மின் அலை மாற்றம், ஸோலார் விண்ட் எனப்படும் சக்தியிலும் மாறுதல் கொண்டு வருகிறது. இச்சக்தி பூமியில் உள்ள பல அடிப்படைகளுக்கு அஸ்திவாரம்.

ஏன் பிரபஞ்சத்தில் உள்ள சில விஷ வாயுக்களை பூமியின் பரப்பில் வர விடாமல் தடுக்கும் ஒரு தடுப்பு சுவராக கூட இந்த சக்தி செயல்படுகிறது.

சமீபத்தில் வட துருவத்தில் ஏற்பட்ட சிறு இட மாறுதலே இந்த குழப்பங்களுக்கு காரணம். அப்படியென்றால், துருவங்கள் இப்படியெல்லாம் மாறுமா, பொதுக்குழு செயற்குழு கூட்டாமல் தாந்தோன்றியாய் பூமி முடிவெடுக்குமா என யோசிப்பவருக்கு… இல்லையாம் ஒவ்வொரு 1000 வருடங்களுக்கு ஒரு முறை இப்படி இடம் மாறுவது இயல்பாம். 1000 வருசத்துக்கு ஒருதடவை இப்படி ஆக்ஸில் அசைஞ்சு கொடுக்கிறது பைலாவில இருக்காம்… என்ன இப்படி மாறும் போது, சில விஷ வாயு கசிவு இருக்குமாம்,…

இப்போதைக்கு தம்பா விமான நிலையத்தின் பிரதான ஓடுதளத்தை மட்டும் ஒரு வாரம் மூடிவிட்டு, மாறிய வட துருவத்தை அனுசரித்து சில மார்க்கிங்கை மாற்றி வண்ணம் தீட்டி, நிலைமையை சரி செய்து விட்டார்கள். இதனால் பயணிகளுக்கோ, விமானத்துக்கோ எந்த ஆபத்தும் இல்லை எனவும் உத்திரவாதம் தந்துவிட்டதால், நாமும் பெருமூச்செறிந்து வரும் வாரத்திற்கு சினிமா டிக்கெட் கிடைக்குமா என நெட்டில் துளாவலாம்…. ஃபேஸ் புக்கில் லைக் போடலாம்.

அறிவியல் காட்டிய சில விளக்கங்கள் கேட்டு நம் மனம் ஆறுதல் அடைகிறது. சரி என சாதாரணமானாலும், ஒரு விசயத்தில் நாம் உஷாராக இருப்பது அவசியம். எது, உலகம் குறித்தா… காந்த சக்தி குறித்தா…. அல்ல அல்ல….. உலகம் முடிகிறது எனவே மனந்திரும்புங்கள் என பெந்தே கோஸ்தே வாதிகளும், யோகா குருமார்களும் சாமியார்கள், நம்மிடையே இதுபற்றி சொல்லி கிலி உண்டாக்கி தத்தம் கல்லா நிரப்பலாம்.

http://www.naturalnews.com/030996_bird_deaths_pole_shift.html#ixzz224zGzcuJ
http://phys.org/news/2011-01-tampa-airport-runways-renumbered-due.html

- லாரன்ஸ் பிரபா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக