வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ரஜினி:வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்... ஜெயலலிதா.. எம்எஸ்வி!

சென்னை: வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட, காலத்தை வென்ற மனிதர்கள் ஒரு சிலர்தான். அப்படிப்பட்டவர்கள் மறைந்த காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர். அந்த வரிசையில் என் ஆருயிர் நண்பர் கலைஞர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா, எம்எஸ்வியும் இடம்பெற்றுள்ளனர், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஜெயா டிவியின் 14வது ஆண்டு விழாவில் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்தியை கவுரவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, உலகநாயகன் கமல்ஹாஸன், இயக்குநர் கே பாலச்சந்தர், தயாரிப்பாளர் ஏவி எம் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவின் ஹைலைட்டாக அமைந்தது ரஜினியின் பேச்சு. அந்தப் பேச்சு முழுவதுமாக:
"இந்த விழாவின் நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி சார் அவர்களே, இந்த விழாவுக்கு தலைமை தாங்க வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களே, கே.பி. சார் அவர்களே, சரவணன் சார் அவர்களே, இசைஞானி இளையராஜா அவர்களே, என்னுடைய அருமை நண்பர் கமல் ஹாசன் அவர்களே, (கீழே பார்த்து) விழாவுக்கு வந்திருக்கும் சோ சார் அவர்களே, சிவக்குமார் அவர்களே, திரையுலக பெரியவர்களே, அமைச்சர்களே, பத்திரிக்கை நண்பர்களே, என்னை வாழ வைக்கும், வாழ வைத்த தமிழக மக்களே அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

சிஎம்மா பதவியேற்ற பிறகு அவருக்கு திரையுலகின் சார்பில் பாராட்டு விழா நடத்தணும்னு சொல்லி நிறையபேர் விரும்பினாங்க. ஆனா முதல்வர் இப்போதைக்கு வேணாம்னு சொன்னதா கேள்விப்பட்டேன்.
இப்போ, அவங்களே வந்து இங்கே, எம்எஸ்விக்காக பெரிய பாராட்டு விழா நடத்துறாங்கன்னு சொன்னா.. அது ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்ச மாதிரிதான். இது திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் கூட பெரிய வாய்ப்பு. பெரிய விஷயம். உங்களை பாராட்ட இப்போ எங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.
ஜெயா டிவி 13 ஆண்டுகள் முடிந்து 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அந்த சாதனைக்காக அங்கே பணியாற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சிக்கிறேன்.
எனக்கும் ஜெயா டிவி பிடிக்கும். பல நல்ல நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பேன். காலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எனக்கும் பிடிக்கும். அதேபோல, செய்திகளுக்கு முன்னாடி வரும் வரலாற்றுச் சுவடுகள் மிகவும் அருமையாக இருக்கும்.

அப்புறம் சோவின் எங்கே பிராமணன், தொடரை நான் விரும்பிப் பார்ப்பேன். சோ கொடுக்கிற விளக்கங்கள் நல்லா இருந்தது. ஆனா அதுக்கப்புறம் நின்னுடுச்சி. நான்கூட சோ கிட்ட, ஏன் நிறுத்திட்டீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்னார், 'சிஎம் கூட என்கிட்ட கேட்டாங்க்.. ஆனா எனக்குத்தான் நேரமில்லே'ன்னார். இந்த தமிழ்நாட்ல, சிஎம் சொல்லியும் கேட்காத ஒரு ஆள் இருக்கார்னா அது சோ சார்தான்...
ஒரு சின்ன செடியா இருந்த ஜெயா டி.வி. இன்னைக்கு கமல் சொன்ன மாதிரி ஒரு மரமா வந்திருக்கு தன்னோட சொந்த முயற்சியால.
இது எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா. இங்கே உள்ள எல்லாரை விடவும் நான்தான் ஜூனியர்னு நினைக்கிறேன் சினிமாவில். எம்எஸ்வி அவர்களைப் பாராட்ட இளையராஜா சார், கமல் போன்றவர்களே வார்த்தையில்லாமல் தயங்கும்போது, நான் மட்டும் என்ன சொல்லிடப் போறேன்.
அவருடன் நான் நிறைய படங்கள் கூட செய்யவில்லை. ஆனால் நான் பெங்களூரில் இருக்கும்போது, தமிழே தெரியாத கன்னடாக்காரங்க கூட, அர்த்தம் தெரியாமலே பாடும் பாட்டு போனால் போகட்டும் போடா... நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...
எனக்கு அப்போ மொழி தெரியலேன்னாலும் தமிழ்ப் படங்களுக்கு அதிகமா போவேன். அப்படி ஒருமுறை சர்வர் சுந்தரம் படத்துக்குப் போனேன். ஒரு சாதாரண சர்வர் சினிமா நடிகனாக எப்படி ஆகிறான் என்பது கதை. நானும் கண்டக்டரா இருந்து, சினிமா நடிகனாகணும்னு நினைச்சிக்கிட்டிருந்த காலம் அது.
அந்தப் படத்துல ஒரு பாட்டு, 'அவளுக்கென்ன அழகிய மனம்..'. அதுல ஒரு சீன்ல மட்டும் எல்லோரும் கைத் தட்டறாங்க. எம்.ஜி.ஆர். ஒரு சிவாஜி இவங்களோட படங்கள்ல அறிமுகக்காட்சிக்கு எப்படி கைத்தட்டல், விசில் கிடைக்குமோ.. அப்படி ஒரு ரெஸ்பான்ஸ். எனக்கு புரியவேயில்லை. எதுக்கு எல்லாரும் இதுக்கு இப்படி கைத்தட்டுறீங்கன்னு பக்கத்துல இருந்தவரைக் கேட்டேன்.
'அங்க கோட் போட்டுக்கிட்டு மியூசிக் கம்போஸ் பண்ற மாதிரி ஒருத்தரைக் காட்டறாங்களே... அவர்தான் இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர் எம்எஸ் விஸ்வநாதன். அவருக்காகத்தான் இந்தக் கைத்தட்டல்,' என்றார்.
ஒரு இசையமைப்பாளருக்கு இவ்வளவு வரவேற்பா.. ரசிகர்களா... இத்தனை மதிப்பான்னு ஆச்சர்யமா இருந்தது.
நான் இங்கே வந்த பிறகு, அபூர்வ ராகங்கள் சமயத்துலதான் நேர்ல பார்த்தேன். நான் சினிமாவுல பார்த்ததுக்கும் நேர்ல பார்க்குறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. நான் பார்க்கும்போது... என்ன அவர் காவி உடை போடல... மத்தபடி நெத்தியில நீறு, குங்குமம் வெச்சிக்கிட்டு சாதாரணமா இருந்தார்.
மூன்று முடிச்சு படத்துல நான் பாடற மாதிரி ஒரு பாட்டு, அந்த போட் ஸாங். 'மண வினைகள் யாருடனோ..' எனக்கு தனித்துவமான முகம்.. அதுக்கேத்தமாதிரி Peculier வாய்ஸ் வேணும்னு கேட்டபோது, எம்.எஸ்.வி.சார்தான் எனக்காக குரல் கொடுத்தார்.
சினிமாவில் எனக்கு முதன் முதலா பாடினது எம்.எஸ்.வி சார்தான். அதுக்கப்புறம் நினைத்தாலே இனிக்கும் படத்துல 'சம்போ சிவ சம்போ...' பாட்டு பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க.
எம்.எஸ்.வி. - ராமமூர்த்தி மாதிரி சாதனையாளர்களைப் பத்தி பேசும்போது, எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது.
இந்த மரணம் என்பது இயற்கையானது. எல்லாருக்கும் வரக் கூடியது. இந்த மரணம் ஒரு தடவைதான் என்றில்லை... ரெண்டு முறை நிகழும். நிறைய பேருக்கு அதாவது தொன்னூறு சதவீத மக்களுக்கு மரணம் ஒரு தடவைதான். அதாவது உயிர் உடலைவிட்டு போனா முடிஞ்சது... பினிஷ்.. அவ்வளவுதான்.
இன்னொரு வகை... மிகப் பெரிய பேரும் புகழும் பெற்றவர்கள். அந்த பேரையும் புகழையும் தோல்வியாலேயோ இல்லே வேற சில காரணங்களாலேயோ இழந்துட்டா, அப்போ அவங்களுக்கு முதல் மரணம் வருது. அதற்கடுத்து இயற்கையாக உயிர் பிரியும்போது ரெண்டாவது முறையாக மரணம் நிகழும்.
ஆனா மரணமே இல்லாத சில பேர் இருக்காங்க. அவங்க ஒரு பர்சன்ட்தான். அவங்க வாழும்போதும் சரி, இறந்து போன பிறகும் சரி, அவங்க பேரும் புகழும் எப்பவுமே நிலைச்சிருக்கும். அவங்கள்லாம் சாகாவரம் பெற்றவர்கள். தனிப்பிறவி.
என் ஆருயிர் நண்பர் டாக்டர் கலைஞர்...
வடக்கில் பார்த்தீங்கன்னா... சினிமாவில வி.சாந்தாராம், தாதா சாகேப் பால்கே, எஸ்.டி.பரமன், நம்ம தமிழ்நாட்டுல பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி சார், கண்ணதாசன்... இவங்க எல்லாரும் மறைந்தாலும் அவர்கள் பெயரும் புகழும் மறையவில்லை. இன்னும் அவர்கள் நம்மோடு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.
இன்று அரசியலில் என்னுடைய ஆருயிர் நண்பர் மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள், விஸ்வநாதன் ராமமூர்த்தி... இவங்களுக்கெல்லாம் வெற்றி தோல்வி போன்றவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இவங்களைப் பொறுத்தவரை வெற்றியடைஞ்சா சந்தோஷம் இருக்கும். தோல்வியடைஞ்சா மனசு கொஞ்சம் வருத்தப்படும். ஆனா அவங்க பேருக்கும் புகழுக்கும் எந்த பாதிப்பும் வராது.
ஏன்னா... அதையெல்லாம் தாண்டிய நிலையில் இருப்பவர்கள் இவர்கள். வெற்றி, தோல்விகளை தாங்கிக்கொள்ளும் சமமான மனநிலையில இருப்பாங்க.
அவங்க வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்திருக்கேன். அவங்க கூட பழகியிருக்கேங்கிற சந்தோஷத்தோட,இந்த விழாவுல எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு, முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள் இன்னும் மக்களுக்கு நிறைய சேவை செய்து, இந்தியா மட்டுமில்லே உலக அளவில் அவர் பேரும் புகழும் பெறவேண்டும், அதற்கு தேவையான நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் இறைவன் அவருக்கு வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வணங்கி விடைபெறுகிறேன்."
-இவ்வாறு பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக