செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அன்னா குழு முடிவு

புதுடெல்லி: அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள அன்னா குழுவினர் மக்களவை தேர்தலுக்கு முன்பு டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். ஜன்லோக்பால் நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் 3 முறை உண்ணாவிரத போராட்டங்களை நடத்தினர். கடைசியாக கடந்த மாதம் சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தினர். இதற்கு அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து ஊழலுக்கு எதிராக அரசியல் கட்சி தொடங்கப்படும் என்ற அறிவிப்புடன் உண்ணாவிரத போராட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டனர்.


புதிய கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்து பொது மக்கள் ஆன்லைனில் ஆலோசனை வழங்கலாம் என உண்ணாவிரத கடைசி நாளில் அன்னா குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் தெரிவித்தார். இதை தொடர்ந்து அன்னா குழு கலைக்கப்படுவதாக அன்னா ஹசாரே அறிவித்தார். இந்நிலையில் புதிய கட்சி அமைப்பது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் குழுவினர் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இது குறித்து அவர்கள் சார்ந்த ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பு வட்டாரங்கள் கூறியதாவது:

வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று புதிய கட்சி தொடங்கப்படும். பாஜ ஆட்சி செய்யும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அன்னா கட்சி போட்டியிடாது. முதன் முதலாக காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் அன்னா கட்சி போட்டியிடும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக