செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

பார்லிமென்டில் கோரிக்கை பாகிஸ்தான் இந்துக்களுக்காக எல்லைகளை திறந்து விடுங்கள்

பாகிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இதனால், அடைக்கலம் கேட்டு இந்தியாவுக்கு வர விரும்புகின்றனர். எனவே, பூட்டி வைக்கப்பட்டிருக்கும், எல்லைகளைத் திறக்க வேண்டும். 
பாகிஸ்தான் இந்துக்களை, இந்தியாவுக்குள் அனுமதித்து, அவர்களுக்கு குடியுரிமையும் வழங்க வேண்டும்' என, பார்லிமென்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.


கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாட்கள் என, மூன்று நாட்கள் கழித்து, நேற்று பார்லிமென்ட் மீண்டும் கூடியது. காலையில் லோக்சபா கூடியதும், வழக்கம் போல கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இதை பா.ஜ., எம்.பி.,க்கள் பலரும் கடுமையாக ஆட்சேபித்தனர்.
கோஷம்:"பாகிஸ்தானில் குடியிருக்கும், இந்துக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்; அந்நாட்டு இந்துக்களுக்கு பெரிய ஆபத்து வந்துள்ளது; எனவே, அது குறித்து விவாதம் நடத்த வேண்டும்' என, கோஷங்கள் எழுப்பினர். 15 நிமிடங்களாக எழுந்த கோஷங்களால், சபையில் அமளி நிலவியது.இதையடுத்து, ஒத்தி வைக்கப்பட்ட சபை, ஒரு மணி நேரத்திற்குப் பின் மீண்டும் கூடியது. அப்போது, பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து, பா.ஜ., மூத்த தலைவரான ராஜ்நாத் சிங்கை பேசும்படி, சபாநாயகர் அழைத்தார்.

அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது:பாகிஸ்தானின் சிந்து மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில், இந்துக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கு சிறுபான்மை சமூகத்தினராக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக் குறியாய் மாறிக் கொண்டிருக்கிறது. தற்போது, அந்த மக்களின் பாதுகாப்புக்கு பேராபத்து உருவாகியுள்ளது.

கண்ணீர்:உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, துன்புறுத்தப்படுகின்றனர். நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இந்துக்கள் இவ்வாறு பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டு, கண்ணீர் சிந்துவதை நினைக்கும் போது கேவலமாக உள்ளது.இந்து பெண்கள் பலரும் கடத்தப்படுகின்றனர். கடத்தப்பட்ட அவர்கள், பின், முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து கொள்ளப்படுகின்றனர். குழந்தைகளும் கடத்தப்படுகின்றனர். இது குறித்து, போலீசாரிடம் பல முறை புகார் மனு அளித்தும் கூட, முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால், இந்துக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லாமல் போய்விட்டது.கிராமங்களில் வசித்து வந்த சற்று வசதி படைத்த இந்துக்கள் கூட, நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்து, அருகில் உள்ள, கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்து குடியேறி வருகின்றனர். வசதி இல்லாத இந்துக்களால், தங்களை தற்காத்துக் கொள்ள முடியவில்லை. வழி ஏதும் இல்லாத அந்த ஏழை இந்துக்கள் பலரும் இந்தியாவுக்கு வரத் துடிக்கின்றனர். இந்தியா தான் தங்களை பாதுகாக்கும் என, நம்புகின்றனர்.ஆனால், இந்திய எல்லைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருப்பதால், உள்ளே நுழைய முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும். இந்தியாவுக்குள் வர விரும்பும் இந்துக்களை, உள்ளே வர அனுமதிக்க வேண்டும். எல்லைகளைத் திறந்து, அவர்கள் வர அனுமதிக்க வேண்டும். அவர்களின் வாழ்வுக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

குடியுரிமை:அவ்வாறு வரும் இந்துக்களுக்கு, அடைக்கலம் அளித்து காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, அவர்களுக்கு இந்திய குடியுரிமையும் அளிக்க, மத்திய அரசு முன்வர வேண்டும்.தற்போது, நிலைமை விபரீதமாக இருப்பதால், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை, பிரதமர் மன்மோகன் சிங் அழைத்துப் பேச வேண்டும். "இந்துக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது' என்று கூறி, அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும்.இந்துக்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு உள்ளதென்பதை, அவரிடம் எடுத்துக் கூறி, இனியும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

இதே விவாதத்தில் கலந்து கொண்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் பேசினார். அவர் கூறியதாவது:

எச்சரிக்கை செய்யுங்க:பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படுவது வருத்தமளிக்கும் விஷயம். அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு அங்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அதற்காக, அந்த இந்துக்களின் பிரச்னைகளுக்கு, இந்தியாவில் தீர்வு காணப்பட வேண்டுமென்பதை ஏற்க முடியாது. பாகிஸ்தான் தூதரை அழைத்து பிரதமர் பேச வேண்டும். இந்துக்கள் தாக்கப்படும் நிலை தொடரக்கூடாது என, மத்திய அரசு எச்சரிக்கை செய்ய வேண்டும்.இவ்வாறு முலாயம் சிங் கூறினார்.

பிஜூ ஜனதா தள எம்.பி.,யான மகதாப் பேசும்போது, ""சுதந்திரத்தின் போது பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் சேர்த்து, மொத்தம் 26 சதவீத இந்துக்கள் வசித்து வந்தனர். அது படிப்படியாகக் குறைந்து, இந்துக்களின் சதவீதம் மிகவும் சுருங்கிப் போய்விட்டது. இப்போது வெறும் 2 சதவீத இந்துக்களே பாகிஸ்தானில் உள்ளனர். அவர்களும் நிம்மதியாக இல்லை. எனவே, பாதிக்கப்படும் இந்துக்களுக்காக எல்லையை திறந்திட ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார்.

வெள்ளை அறிக்கை தேவை:இந்திய கம்யூனிஸ்ட் தலைவரான குருதாஸ் தாஸ் குப்தா நேற்று லோக்சபாவில் பேசியதாவது:இந்தியாவின் பொருளாதார நிலைமை, படுகேவலமான நிலைக்கு சென்று விட்டது. பொருளாதார வளர்ச்சி என்று கூறி, நாட்டில் வறுமையும், வேலை வாய்ப்பின்மையும் தான் பெரிதாக வளர்ந்துள்ளது.மற்ற நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், இந்தியா மிகவும் பின்தங்கி விட்டது. பொதுவாக பணவீக்கம் இருந்தால், வளர்ச்சி இருக்கும் என்பது வழக்கமான கருத்து. ஆனால், இங்கு வளர்ச்சி இல்லை. பணவீக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. எதற்கெடுத்தாலும், சர்வதேச பொருளாதார விவரங்களை பேசுகிறது அரசு. ஆனால், அரசின் தவறான கொள்கைகள் தான், பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். தற்போது, நாடு முழுவதும் மக்கள் அவதிப்படுகின்றனர். சாதாரண மக்கள் படும் அவஸ்தைகள், பார்லிமென்டில் விவாதிக்கப்பட வேண்டும். எனவே, பொருளாதார நிலைமைகள் குறித்து வெள்ளையறிக்கையை சமர்ப்பிக்க, அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு குருதாஸ் தாஸ் குப்தா பேசினார்.

உடனே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், தானும் இதை ஆதரிப்பதாகக் கூறினார். இதேபோல, மார்க்சிஸ்ட் எம்.பி.,யான பாசுதேவ் ஆச்சார்யாவும், தாஸ் குப்தா கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

-நமது டில்லி நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக