வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

உரிமையாளர்கள் ஓட்டம் உணவின்றி ஈமு கோழிகள் இறக்கும் பரிதாபம்

ஈரோடு:பெருந்துறை, "சுசி' ஈமு நிறுவனம் மூடப்பட்டதன் தொடர்ச்சியாக, பெருந்துறையில் இயங்கி வந்த, ஐந்துக்கும் மேற்பட்ட, ஈமு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், உணவு, தண்ணீரின்றி இந்நிறுவனங்களில் உள்ள ஈமு கோழிகள் பரிதாபமாக இறக்க ஆரம்பித்துள்ளன.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அதிக அளவு ஈமு கோழி நிறுவனங்களும், பண்ணைகளும் உள்ளன. கவர்ச்சிகரமான அறிவிப்புகளால், ஈமு வளர்ப்பு திட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், "சுசி' ஈமு நிறுவனத்தில், கடந்த மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படாததால், முதலீட்டு தொகையை திருப்பி கேட்டு, முதலீட்டாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
"சுசி' ஈமு கோழி நிறுவன உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தை, மூன்று நாட்களாக முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு வருவதால், பெருந்துறை பகுதியில் இயங்கி வந்த, பிற ஈமு நிறுவனங்களும், மூடுவிழா காணத் துவங்கி உள்ளன.


தலைமறைவு:"சக்தி டிரேடர்ஸ், சக்தி ஈமு பார்ம்ஸ், ஸ்ரீ ஈமு பார்ம்ஸ், நிதி ஈமு பார்ம்ஸ், குயின் ஈமு பார்ம்ஸ்' உட்பட, 10க்கும் மேற்பட்ட ஈமு கோழி நிறுவனங்களில், நேற்று அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதனால், பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் தலைமறைவாகி உள்ளனர்.பெருந்துறை, "குயின்' ஈமு பார்ம்ஸ் அலுவலகத்தில், நேற்று காலை முதலீட்டாளர்கள் குவிந்தனர். அந்நிறுவனத்தின் அனைத்து தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களும் துண்டிக்கப்பட்டு விட்டதாக முதலீட்டாளர்கள் தெரிவித்தனர். நேற்று அதிகாலை முதல் மாலை வரை, "குயின்' ஈமு அலுவலகத்தில், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.

உணவில்லை...இதே போல், பெருந்துறை - குன்னத்தூர் ரோடு, கிரே நகரில் உள்ள, "குயின்' ஈமு பண்ணையில் பராமரிப்பாளர்களும் மாயமாகி விட்டனர். இதனால், தண்ணீர், உணவின்றி அங்குள்ள, 1,000க்கும் மேற்பட்ட ஈமு கோழிகள், இறக்கும் நிலையில் உள்ளன; 15க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து கிடக்கின்றன.உணவு வழங்கப்படாததால், இறந்த கோழிகளின் உடலை, மற்ற கோழிகள் கொத்தித் தின்று பசியாறும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கோழிகள் இறந்து கிடப்பதால், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக