திங்கள், 6 ஆகஸ்ட், 2012

அமெரிக்க, குருதுவராவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

 Gunman goes on rampage in Wisconsin Gurudwara; 7 dead
வாஷிங்டன்: அமெரிக்காவில், சீக்கியர்களின் கோயிலான குருதுவாராவில் ,மர்மநபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவன் உள்பட 7 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து போயினர்.
அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் சினிமா தியேட்டரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் சுவடு மறைவற்குள் ‌சீக்கிய கோயிலான குருதுவாராவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்கர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாகாணத்தின் ஓ-கிரீக் நகரின் மில்வயூக்கி பகுதியில் சீக்கியர்களின் ‌கோயிலான குருதுவாரா உள்ளது. இக்கோயிலில் நேற்று அமெரிக்க உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் இரு நபர்கள் துப்பாக்கியுடன் தி‌டீ‌ரென புகுந்து அங்கிருந்தவர்கள் மீது சராமாரியாக சுட்டனர்.
இதில் 20 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த தாக்குதலில் 7 பேர் பலியாயினர். எனினும் தொடர்ந்து ‌கோயிலுக்கு எஞ்சியிருந்த மர்ம ஆசாமி, துப்பாக்கி முனையில் பலரை பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ளான்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசார் வ‌ரவழைக்கப்பட்டு கோயிலுக்குள் எஞ்சி உள்ளவர்களை உயிருடன் மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.சம்பவம் அறிந்த இந்தியா - தொடர்ந்து அமெரிக்க தூதரகத்துடன் தொடர்பில் உள்ளது. சீக்கிய அமைப்புகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.சம்பவம் குறித்து விஸ்கோன்சியஸ் மாகாண கவர்னர் ஸ்காட் வாக்கர் , பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 23-ம் தேதி , அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் டென்வர் நகரில், அரோரா என்ற இடத்தில் உள்ள திரையரங்கில், நுழைந்த ஜேம்ஸ்ஹோம்ஸ் என்ற 24 வயது இளைஞன் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 12 பேர் பலியாயினர். 58 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த இருவாரங்களுக்குள் , விஸ்கோன்சிஸ் மாகாணத்தில் சீக்கிய கோயிலில் மற்ற‌ொரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
பஞ்சாப் முதல்வர் கோரிக்கை: பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் கூறுகையில், அமெரிக்காவில் குருதுவாரா கோயிலில் நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தி்ல ஏற்படாமல் மத தலங்களுக்கு அமெரிக்கா தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
எப்.பி.ஐ. விசாரணையை துவக்கியது: விஸ்கோன்சின் மாகாண துப்பாக்கிச்சூடு சம்பவம் குறி்த்து அந்நாட்டு புலனாய்வு அமைப்பு விசாரணையை துவக்கியுள்ளது. அமெரிக்காவின் புலானய்வு அமைப்பான எப்.பி.ஐ. , சம்பவ இடத்தினை பார்வையிட்டு தனது முதல்கட்ட விசாரணையை துவக்க உள்ளது.


ஒபாமா கண்டனம்: குருதுவாரா கோயில் துப்பாக்கிச்சூட்டிற்கு அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த இரு வாரங்களில் இரண்டாவதுமுறையாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது வருத்தத்திற்குரியது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக