செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

மதுரை ஆதீனத்திலிருந்து 2 நித்தியானந்தா ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு!

மதுரை: மதுரை ஆதீன மடத்தில் திடீரென புதிய பிரளயம் கிளம்பியுள்ளது. இதுரை சாதுவாக இருந்து வந்த மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர் டென்ஷனாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரது உத்தரவுப்படி ஆதீன மடத்தில் தங்கியிருந்த நித்தியானந்தாவின் 2 தீவிர ஆதரவாளர்கள் மடத்தை விட்டு வெளியே விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை ஆதீன மடத்தின் அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர் அறிவித்தது முதலே பெரும் பஞ்சாயத்தாக இருந்து வருகிறது. அடுத்தடுத்து நித்தியானந்தா சர்ச்சையிலும், வழக்குகளிலும் சிக்க அருணகிரிநாதர் கையைப் பிசைந்தபடிதான் உள்ளார். இருப்பினும் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில்தான் அவரும் உள்ளார்.

இந்த நிலையில் நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் மதுரை ஆதீன மடத்தில் தங்கியிருப்போர் செய்யும் செயல்களால் சமீப காலமாக ஆதீனகர்த்தர் கடும் கோபமடைந்து வந்ததாக செய்திகள் தெரிவித்தன. குறிப்பாக முந்தைய ஆதீனங்கள், தற்போதைய ஆதீனத்தின் தந்தை உள்ளிட்டோரின் பெரிய பெரிய போட்டோக்களை தூக்கி விட்டு நித்தியானந்தாவின் படங்களை அவரது ஆதரவாளர்கள் மாட்டி வைத்ததால்தான் பெரும் பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில் திடீரென புதிய திருப்பமாக நித்தியானந்தாவின் இரண்டு முக்கிய ஆதரவாளர்களை மடத்தை விட்டு விரட்டியடித்துள்ளார் மதுரை ஆதீனம். அவர்களது பெயர்கள் சொரூபானந்தா மற்றும் பாண்டிச் செல்வம். இவர்களில் சொரூபானந்தா ரொம்ப நாட்களாக நித்தியானந்தா கூடவே இருப்பவர். எனவே இவர் ஒரிஜினல் ஆதரவாளர். அதேசமயம், பாண்டிச்செல்வம் இடையில் சேர்ந்தவர் என்று தெரிகிறது. நித்தியானந்தாவின் பிஆர்ஓ போல இவர் செயல்பட்டு வந்தார்.
இந்த இரண்டு பேரையும் ஏன் மதுரை ஆதீனம் மடத்தை விட்டு விரட்டியடித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் உள்ளுக்குள் ஏதோ பெரிய அளவில் கசமுசா நடந்து விட்டதாகவே கருதப்படுகிறது.
தற்போது மதுரையில் இல்லை நித்தியானந்தா, கொடைக்கானலுக்குப் போய் முகாமிட்டு உட்கார்ந்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். ஒருவேளை அவர் மதுரைக்குத் திரும்பியதும் சொரூபாவும், பாண்டியம் மறுபடியும் மடத்துக்குள் வந்தாலும் வந்து விடலாம்.. என்ன செய்வது, மதுரை ஆதீனத்தின் செயல்கள்தான் ஆரம்பத்திலிருந்தே புரியாத புதிராக இருக்கிறதே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக