சனி, 11 ஆகஸ்ட், 2012

சுசி ஈமு நிறுவனம் மீது 2 ஆயிரம் பேர் புகார்



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஈரோடு: சுசி ஈமு நிறுவனம் மீது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார்களை அளித்துள்ளனர். நிறுவன உரிமையாளர் குருசாமியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.  
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக செயல்பட்டு வந்த சுசி ஈமு நிறுவனத்தில்  12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், சுமார் ரூ.350 கோடி முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்தவர்களுக்கு கடந்த மாதம் வழங்க வேண்டிய ஊக்கத்தொகை, ஈமு கோழிகளுக்கான தீவனத்தொகையை இந்நிறுவனம் வழங்கவில்லை. திடீரென இந்நிறுவனம் மூடப்பட்டது. இதையடுத்து நிறுவனத்தை தொடர்ந்து முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டுவருகின்றனர்.

முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை வைத்து சத்தியமங்கலம் தாளவாடி, ஆசனூரில் சுமார் 100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனம், ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் இந்நிறுவனம் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
நிறுவன உரிமையாளர் குருசாமிக்கு சொந்தமான சொத்துக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவற்றை விரைவில் ஜப்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. குருசாமி உள்ளிட்ட 8 பேர் மீது பெருந்துறை போலீசார் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். குருசாமியை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குருசாமி செல்போன்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பதால் அவரை பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் குருசாமிக்கு சொந்தமான ஈமு பண்ணை மற்றும் சொகுசு பங்களா இருப்பதால் அங்கும் தனிப்படை கண்காணித்து வருகிறது. சுசி நிறுவனத்துக்கு புரோக்கர்களாக செயல்பட்டு வந்தவர்களை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு வருவதால், அவர்களும் தலைமறைவாகி வருகின்றனர்.

5 நாளில் 2147 புகார் பதிவு: நேற்று முன்தினம் வரை சுசி ஈமு நிறுவனம் மீது 1,348 புகார் பெறப்பட்டுள்ளது. நேற்று 802 புகார் பெறப்பட்டது. மோசடி நடைபெற்று 5 நாளில் மட்டும் 2147 புகார் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே பெருந்துறையில் செயல்பட்டு வரும் குயின் ஈமு நிறுவனம் மீதும் புகார்கள் குவிய துவங்கியுள்ளது. பல்வேறு ஈமு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக