புதன், 18 ஜூலை, 2012

Violence கட்சிகளின் அங்கீகாரத்தை, ரத்து செய்யலாமா?

புதுடில்லி:"வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும், அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை, ரத்து செய்யலாமா?
 இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான பிரகாஷ் சிங், உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் கோரும் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "அரசியல் கட்சிகள், போராட்டத்தில் ஈடுபடும் போது, பெரிய அளவில் வன்முறைகள் நிகழ்கின்றன. பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றன. சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் மறியலில் ஈடுபடுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பெரிய அளவில், பொதுச் சொத்துக்களுக்கு, சேதம் விளைவிக்கும் வகையில், நடக்கும் போராட்டங்களை தடுக்க, வழிகாட்டிக் குறிப்புகளை உருவாக்கும்படி, மத்திய அரசுக்கு, உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், "வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும், அரசியல் கட்சிகளை, தற்போதைய சட்ட விதிகளின் கீழ், தடை செய்ய முடியுமா? அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா. இது தொடர்பாக, மத்திய அரசு, ஒரு வாரத்திற்குள், பதில் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக