புதன், 18 ஜூலை, 2012

டாஸ்மாக்' கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம்

சென்னை:தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று தமிழகம் முழுவதும், பா.ம.க.,வினர் "டாஸ்மாக்' கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை, "டாஸ்மாக்' கடைகளுக்கு அருகில் விடாமல் பாதி வழியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி, பூட்டுப் போடாதபடி பார்த்துக் கொண்டனர். இப்போராட்டம் காரணமாக, "டாஸ்மாக்' கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
சென்னையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், காஞ்சிபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர், போராட்டத்தில் பங்கேற்று கைதாகி, பின் விடுதலை செய்யப்பட்டனர். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் இப்போராட்டத்தில், பெண்கள் பங்களிப்பு குறைவாகவே இருந்தது.
டிசம்பர் வரை கெடு:சென்னை தி.நகரில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடந்தது.

அப்போது அவர் பேசியதாவது:
மது என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த தமிழகத்தில், 1971ம் ஆண்டு கருணாநிதி மதுக்கடைகளை திறந்தார். அப்போது, ராஜாஜி நேரில் சென்று மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்றார். அதை, கருணாநிதி கேட்கவில்லை. இந்த ஆண்டு, மதுக்கடைகள் மூலமாக, 18 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் குடும்பங்களுக்கு ஏற்படும் இழப்புகளாலும், நோய் தாக்குதல்களிலும் அரசுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது.

இரவோடு இரவாக:
மதுவால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இன்னும் ஆறு மாதம் அவகாசம் தருகிறோம். அதற்குள் நடவடிக்கை எடுக்கா விட்டால், இதுபோல் வீதிக்கு வரமாட்டோம். வரும் டிசம்பர் மாதம் இரவோடு இரவாக, மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடுவோம். விழுப்புரத்தில் உள்ள கடைகளுக்கு நானே பூட்டுப் போடுவேன். யாருக்கும் பயப்பட மாட்டேன்.இவ்வாறு அவர் பேசினார்.

போராட்டத்தில் பங்கேற்ற ராமதாஸ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உட்பட, 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மதுவின் பாதிப்பால் கணவர்களை இழந்த, 15 பெண்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரையும் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று, பின் விடுதலை செய்தனர்.

காஞ்சிபுரம் காமராஜர் தெரு பஸ் நிலையம் அருகே, நடந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி தலைமை வகித்தார். ஈரோட்டில், பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தலைமையில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும், உடனே விடுதலை செய்யப்பட்டனர்.

அசலுக்கு பதில் நகல்:
ராமதாஸ் அறிவித்தப்படி, ஒரிஜினல் பூட்டுகளை தொண்டர்கள் எடுத்து வரவில்லை என்ற குறையும் நிலவியது. ஆனால், அட்டை பூட்டுகளை ஆங்காங்கே தொண்டர்கள் தூக்கிக் கொண்டு வந்தனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், "டாஸ்மாக்' கடைகளை நெருங்குவதற்கு, பல அடி தூரம் முன்பாக தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதை தெரிந்து தான் என்னமோஒரிஜினல் பூட்டுகளை எடுத்துவரவில்லை போலும். மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கையும், பல இடங்களில் குறைவாக இருந்தது.மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை, தமிழக அரசில் கட்சிகள் மத்தியில் தீவிரமாக எழுந்துள்ளது.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்டோர் பூரண மதுவிலக்கு கோரி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர்.இந்நிலையில், மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடுவோம் என அறிவித்த போராட்டத்திற்கு, பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக, பெண்கள் மத்தியில் ஆதரவு இருந்தது. ஆனால், போராட்டத்தில் அதன் பிரதிபலிப்பு அவ்வளவாக இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக