சென்னை: பொறியியல் படிப்பில், மெக்கானிக்கல், சிவில் ஆகிய இரு பாடப்
பிரிவுகளை, தமிழ் வழியில் படிக்க வாய்ப்பு இருந்தபோதும், தமிழில் படித்தால்
வேலை கிடைக்காது என்ற எண்ணம் உள்ளதால், இதில் சேர மாணவர்கள் தயக்கம்
காட்டுகின்றனர்.
சேர்க்கை குறைவு: முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொறியியல்
படிப்பை, தாய்மொழியான தமிழில் வழங்க வேண்டும் என்று முயற்சி எடுத்து,
முதற்கட்டமாக மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை, தமிழ் வழியில்
அறிமுகப்படுத்தினர். இந்தப் பிரிவில் சேர்ந்த மாணவர்கள், தற்போது நான்காம்
ஆண்டு படிக்கின்றனர். இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து, இதர பாடப்
பிரிவுகளையும் தமிழ் வழியில் அறிமுகப்படுத்த, முந்தைய ஆட்சி
திட்டமிட்டிருந்தது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், 40, 50 மாணவர் மட்டுமே, இந்த
பிரிவில் சேர்ந்து வருகின்றனர்.கவலை: இந்த ஆண்டு, சிவில் பிரிவில் இதுவரை, 18 மாணவர்களும்; மெக்கானிக்கல் பிரிவில், 22 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். மேலும், அண்ணா பல்கலை கல்லூரியில், மெக்கானிக்கல் பிரிவில் நான்கு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மொத்தத்தில், 24ம் தேதி நிலவரப்படி, 44 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஆங்கில வழி பாடப் பிரிவுகளில், ஆயிரக்கணக்கில் மாணவர் சேரும்போது, தமிழ் வழியில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர் சேர்ந்து வருவது, அரசை மட்டுமல்லாமல், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மொழி தடை கிடையாது: கல்வியாளர் பாலகுருசாமி இதுகுறித்து கூறியதாவது: தமிழ் மொழியை, வெறும் கவிதை, கட்டுரை, பாட்டு என்ற அளவில் மட்டும் வளர்த்துவிட முடியாது. அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் வளர்க்க வேண்டும். அப்படி செய்தால் தான், மொழி வளரும். இந்த நோக்கில் தான், பொறியியலில் சோதனை அடிப்படையில், தமிழ் வழி பிரிவை அரசு கொண்டு வந்தது. பொறியியல் பயில, மொழி ஒரு தடையே கிடையாது. தமிழில் படித்தாலும், ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பாலகுருசாமி கூறினார்.
"ஆய்வு செய்யப்படும்!' தமிழ் வழி சேர்க்கைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது: தாய்மொழியில் பொறியியலை படிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், ஆங்கிலத்தில் படித்தால், மாணவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். சைக்கிளுக்கு, "மிதிவண்டி' என, எழுதப் படுகிறது. அதுவே, சைக்கிள் உதிரி பாகங்களின் பெயர்களை தமிழில் எழுதினால், யாருக்குமே புரிவது சிரமம் தான். இதுபோன்ற நடைமுறைச் சிக்கலும், மாணவர் சேர்க்கைக்கு தயக்கமாக இருக்கலாம். எனினும், அண்ணா பல்கலைக்கு துணைவேந்தர் நியமிக்கப்பட்ட பின், தமிழ் வழி சேர்க்கையை வலுப்படுத்த, என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக