தாம்பரம்: தனியார் பள்ளி பஸ் சீட்டில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து,
பின் சக்கரத்தில் சிக்கி இரண்டாம் வகுப்பு மாணவி இறந்த சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை எரித்ததோடு,
பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியல் செய்தனர்.
சென்னை, சேலையூர், இந்திரா நகரில் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
இயங்கி வருகிறது. இங்கு 6,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளிக்கு
சொந்தமாக, 50க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவற்றில் தினமும் மாணவர்களை
அழைத்து வருவதும், விடுவதும் நடக்கிறது. இதற்காக, தனிக் கட்டணம்
வசூலிக்கப்படுகிறது. நேற்று மாலை வழக்கம் போல், முடிச்சூர் மற்றும் அதனை
சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு, ஒரு பஸ் சென்றது.நசுங்கியது: இந்த பஸ்சில், டிரைவர் இருக்கைக்கு பின்னால் ஐந்தாவது இருக்கை அருகே பெரிய ஓட்டை இருந்தது. ஆனால், அதை சரி செய்யாமல் குழந்தைகளை ஏற்றிச் சென்றனர். நேற்று மாலை முடிச்சூர் பஸ் நிறுத்தம் அருகே வளைவில் திரும்பிய டிரைவர் சீமான் பஸ்சை நிறுத்தினார். அங்கு சில மாணவர்கள் இறங்கினர். பின், அங்கிருந்து பஸ் புறப்பட்ட சற்று நேரத்தில், ஐந்தாவது இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டாம் வகுப்பு மாணவி முடிச்சூர், பி.டி.சி., குடியிருப்பை சேர்ந்த சேதுமாதவன் மகள் ஸ்ருதி, 4, என்ற சிறுமி, ஓட்டை வழியாக விழுந்து, பஸ் பின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி இறந்தார். ஸ்ருதி ஓட்டை வழியாக விழுந்ததை பார்த்து, சக மாணவர்கள் சத்தம் போட்டனர். இதற்கிடையில் பஸ் அரை கி.மீ., தூரம் சென்று விட்டது. மாணவி பலியானதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை பின் தொடர்ந்து சென்று, மடக்கி, டிரைவரை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து அங்கு வந்த ஒரு போலீசும், பொதுமக்களிடம் இருந்து, டிரைவரை காப்பாற்ற முயன்றார். ஆனால், பொதுமக்கள் விடவில்லை.
ஆத்திரம் குறையாத மக்கள், கம்பி, கல்லால் பஸ்சை அடித்து நொறுக்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முடிச்சூர் சாலையில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சமாதானம்: இதற்கிடையில், சிறுமி உடல் கிடந்த இடத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 40 நிமிடம் கழித்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள், பேருந்துக்கு தீ வைத்தனர். அது கொழுந்து விட்டு எரிந்ததால், பதட்டம் அதிகரித்தது. தாம்பரம், சேலையூர் உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பஸ்சின் டீசல் டேங்க் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால், அருகே இருந்த வீடுகளையும், கடைகளையும் பூட்டி விட்டு பொதுமக்கள் ஓடினர். முடிச்சூர் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் வேகமாக திரும்பிச் சென்றன. நீண்ட நேரம் கழித்து, அங்கு வந்த தீயணைப்பு படையினர், போராடி தீயை அணைந்தனர். இதில், பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. அதன் பின்னும் ஆத்திரம் குறையாக பொதுமக்கள், சீயோன் பள்ளி உரிமையாளரையும், பஸ்சிற்கு தகுதிச் சான்று வழங்கிய தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி சாலை மறியல் செய்தனர்.
போலீஸ் தாமதம்: பொதுமக்கள் பஸ்சை மடக்கி, டிரைவரை தாக்கியவுடனேயே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் போலீசார் அங்கு வரவில்லை. அதன்பின் வந்த, ஒரு போலீசும் நிலைமை மோசமானதை அடுத்து, பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாததால், சென்று விட்டார்.
பஸ் பராமரிப்பில் அலட்சியம்: புறநகரில் உள்ள தனியார் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனத்தையும் தினசரி சோதனை செய்ய வேண்டும். ஆனால், ஒரு பள்ளியில் கூட, வாகனத்தை முறையாக பராமரிப்பதில்லை. தனியார் பஸ்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறவேண்டும். அதுபோன்ற நேரங்களில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வாகனங்களை முறையாக சோதனை செய்யாமல் சான்றிதழ் கொடுத்து விடுவதாக பொது மக்கள் புகார் கூறினர்.
அது எங்க பஸ் இல்லை: பள்ளி முதல்வர் மறுப்பு: பள்ளி பஸ்சில் ஓட்டை இருந்தது குறித்து சீயோன் பள்ளி முதல்வர் விஜயன் கூறியதாவது: சம்பவத்திற்கு உள்ளான பஸ், சீயோன் பள்ளிக்கு சொந்தமான பஸ் இல்லை. தனியார் டிராவல்ஸ் பஸ். தனியார் டிராவல்ஸ் பஸ்கள், பள்ளி மாணவர்களை அழைத்து வந்து, கொண்டு போய் விடுகின்றன. இதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த பஸ்களை பராமரிக்க வேண்டியது அவர்களுடைய பணி. பத்து நாட்களுக்கு முன்பு தான், தனியார் டிராவல்ஸ் பஸ் டிரைவர்களை அழைத்து, போக்குவரத்து விழிப்புணர்வு நடத்தினோம். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தனியார் டிராவல்ஸ் பஸ்களை ரத்து செய்வது குறித்த முடிவு செய்யப்படும். இவ்வாறு விஜயன் கூறினார்.
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பாப்பப்பசாமியிடம் கேட்டபோது, "தனியார் பள்ளி பஸ் ஒன்று, தகுதிச் சான்றிதழ் பெற வந்தால் பிளாட்பார்ம், புட்போர்ட், மர்காட் சரியாக இருக்க வேண்டும். இரண்டு கதவுகள் போடப்பட்டிருக்க வேண்டும். இடது, வலது ஜன்னல்களில் கம்பிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவசர கால வழி, டயர் மற்றும் மெக்கானிக்கல் நிலைமை சரியாக இருக்க வேண்டும். இதில், ஒன்று கூட சரியில்லை எனில் சான்றிதழ் தரப்படாது. குறிப்பிட்ட பஸ் எப்.சி.,க்கு வந்தபோது, ஓட்டை இருந்திருந்தால், கண்டிப்பாக சான்றிதழ் கொடுத்திருக்க மாட்டோம்,' என்றார்
நம் நாட்டு மக்களை திருத்த முடியும்னு தோண்றவில்லை. ஸ்ருதியோட அப்பா ஒரு ஆட்டோ டிரைவர். மூன்று மாதத்துக்கு ரூ 7500 பஸ்ஸுக்கு கட்டியிருக்கிறார்.பஸ் ஓட்டையில் விழுந்து உயிர் போச்சு.
பதிலளிநீக்குஅதே நாளில் அரியலூரில் எல்.கே.ஜி பையன் சேதுராமன் வேன் நசுக்கி செத்துப் போயிருக்கிறான். அவன் அப்பா சாலைப் பணியாளர். அன்றே பெண்ணாகரத்தில் ஒரு ஏழாம் வகுப்பு பெண் குழந்தை ஆசிரியரிடம் அடி வாங்கி ஆஸ்பத்திரியில் அனுமதி. இதன் அப்பா என்ன வேலை செய்கிறார் என்று போடவில்லை. இவ்வளவு குறைந்த சம்பளத்தில் ஏன் மெட்றிகுலேஷனுக்கு அனுப்பி துன்பப் படுகிறார்கள் என்று புரியவில்லை. இன்ஜினியரிங்க் காலேஜ் பைத்தியம் பிடித்து இப்படிக் குழந்தைகளைக் கொல்ல வேண்டாம்