புதன், 11 ஜூலை, 2012

திருப்பதியில் அமைகிறது Brain Washing புராண இலக்கிய பூங்கா

கோவில் நகரமான திருப்பதியில், புராண இலக்கிய பூங்கா அமையவுள்ளது. நாட்டில் உள்ள முக்கியமான 108 கோவில்களின் மாதிரிகளும் இதில் இடம் பெறும். திருப்பதிக்கு வரும் பக்தர்கள், அங்கிருந்தவாறே காசி விஸ்வநாதர், அயோத்தி ராமர் கோவில், பூரி ஜெகன்நாதர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோரை தரிசிக்க முடியும். தனியார் பங்களிப்புடன் அமையவுள்ள இந்தப் பூங்கா, பக்தர்களின் நீண்ட நாள் கனவினை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.

அதிக வருவாய் :

திருப்பதி, திருமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கு, இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் நாள் ஒன்றுக்கு, சராசரியாக 60 ஆயிரம் பக்தர்களும், பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில், லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து, சாமி தரிசனம் செய்கின்றனர். இதன்மூலம், நாட்டிலேயே அதிகப்படியான வருவாய் கிடைக்கும் கோவில் என்ற பெருமை திருமலைக்கு உண்டு. இத்தகைய புகழ் பெற்ற திருப்பதியில், புராண இலக்கிய பூங்காவை அமைக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மாநில சுற்றுலாத் துறை மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த பூங்காவை அமைக்கவுள்ளன.

நவீன பூங்கா:திருமலை அருகேயுள்ள அலிபிரியில், 38 ஏக்கர் பரப்பளவில், 355 கோடி ரூபாய் மதிப்பில், இந்த பூங்கா அமையவுள்ளது.
இது குறித்து திருமலை, திருப்பதி தேவஸ்தான செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, மற்ற பக்தி ஸ்தலங்களுக்கு சென்ற திருப்தியும் ஏற்பட வேண்டும் என்கிற நோக்கில், எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநில சுற்றுலாத் துறை மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த வைஷ்ணவி இன்பரா வென்சுர்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த பூங்காவை அமைக்கவுள்ளன.இதில், தொல்பொருள் பூங்கா, வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம், நட்சத்திர ஓட்டல், வணிக வளாகம், கலாசார மையம், குழந்தைகள் பூங்கா மற்றும் உணவகங்கள் ஆகியவையும் அமையவுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் நிறுவனத்தை சேர்ந்த இயக்குனர் சாகர் கூறியதாவது:
யாத்ரீகர் தலைநகரம்:பிரசித்தி பெற்ற முக்கிய கோவில்களின் மாதிரிகளை உருவாக்குவதற்காக ஓவிய கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள் ஆகியோர் தேவஸ்தானத்திலிருந்தும், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திலிருந்து தொழில் நுட்ப நிபுணர்களும் சம்பள அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர். மாதிரி கோவில்களை உருவாக்குவற்கான ஆதாரப் பொருட்களான மணல், செங்கல், கட்டைகள் ஆகியவை வாங்கப்பட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படும். மொத்தத்தில், இந்திய யாத்ரிகர்களின் தலைநகரமாக திருப்பதியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

வேலை வாய்ப்பு:
இத்திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், திருமலையில், வர்த்தகமும், வியாபாரமும் பல்கிப் பெருகும். அத்துடன், 5 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.இவ்வாறு சாகர் கூறினார்.

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் கூறுகையில், "திருமலையில் குற்றங்களை தடுக்க, பக்தர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள பகுதிகளில், 40 கோடி ரூபாய் செலவில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக