புதன், 18 ஜூலை, 2012

தலைமை பிடிக்காவிட்டால் சென்று விடலாம் என்று பெஸ்ட் ராமசாமி

காங்கேயம்: கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையும், கொங்குநாடு முன்னேற்ற கழகமும் தொடர்ந்து செயல்படும். என்னை தலைவராக ஏற்றுக் கொள்பவர்கள் இதில் இருக்கலாம். எனது தலைமை பிடிக்காவிட்டால் சென்று விடலாம் என்று பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.
கொங்குநாடு முன்னேற்ற கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும், பொதுச் செயலாளர் ஈஸ்வரனுக்கும் இடையே முற்றி வருகிறது.
கொமுக அறக்கட்டளையில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை ஈஸ்வரன் மோசடி செய்துள்ளதாக பெஸ்ட் ராமசாமி சில தினங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந் நிலையில் கொங்குநாடு முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், தற்போது கட்சியில் உள்ள பிரச்சனைகளை குறிப்பிட்டு, பொதுச் செயலாளர் வேண்டாம் என்று பலரும் இங்கு பேசினார்கள். கொ.மு.கவின் நிறுவன தலைவர் நான் தான். கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் நிறுவன துணைத் தலைவரும் நான் தான்.
மேலும் இந்த இயக்கத்துக்கு பொதுச் செயலாளரை கொண்டு வந்ததும் நான் தான். அவரை நம்பி கட்சியில் செயல்பட விட்டேன். ஆனால் அவர் கட்சியை கைப்பற்ற முடிவு செய்ததோடு, என்னை கட்சியை விட்டு நீக்கவும், என்னை எதுவும் செய்யவும் துணிந்து விட்டார்.
மேலும் அவர் ஏதோ குறிப்பிட்ட சிலரை வைத்துக் கொண்டு கட்சியை நடத்தலாம் என்று நினைக்கிறார். அது நடக்காது. அவருக்கு கொங்கு மண்டலத்தின் வரலாறு தெரியாது. கோவை செழியனை அவர் நேரில் பார்த்ததுண்டா? பேசியதுண்டா?. கட்சியின் மூலம் தன்னை வளர்த்துக் கொள்ள நினைக்கிறார். மாறாக கட்சியை பற்றியோ, கொங்கு சமுதாயம் பற்றியோ அவருக்கு எந்த கவலையும் கிடையாது.
கொங்கு அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.10 லட்சத்தை தலைவரோ, பொருளாளரோ கையெழுத்து போடாத நிலையில் தன்னிச்சையாக செயல்பட்டு பொதுச் செயலாளர் முறைகேடாக எடுத்துள்ளார். அதற்கு அவர் முதலில் பதில் சொல்ல வேண்டும். மேலும் அவர் கொங்கு நாட்டில் வாழ்பவர் இல்லை. எனவே கொங்கு நாடு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமசாமி, கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையும், கொங்குநாடு முன்னேற்ற கழகமும் தொடர்ந்து செயல்படும். என்னை தலைவராக ஏற்றுக் கொள்பவர்கள் இதில் இருக்கலாம். எனது தலைமை பிடிக்காவிட்டால் சென்று விடலாம். பொதுச் செயலாளரும் இருந்தால் இருக்கட்டும். என்னை பிடிக்காவிட்டால் வெளியேறி விடலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக