புதன், 18 ஜூலை, 2012

காற்றாலைகள் 'காலை' வாரிவிட்டுவிட்டது, மின்சார வாரியம்

சென்னை: காற்றாலைகள் மூலம் மிகவும் குறைந்தபட்ச மின்சாரம் மட்டுமே பெறப்படுவதால் தமிழகத்தில் கூடுதல் மின்தடை செய்யப்படுகிறது, இதனை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மின்சார வாரியம் கூறியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சரியாகப் பெய்யாததால் இந்த ஆண்டு நீர் மின் உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் மின் தடை மேலும் கடுமையாகியுள்ளது.
இந் நிலையில் காற்றாலை மின்சாரமும் குறைந்துவிட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு காற்றாலைகள் மூலம் சராசரியாக 3500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்த நிலையில் நேற்று 125 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதால் காற்றாலை, மின்வாரியத்தின் காலைவாரி விட்டது. இதனால் ஏற்படும் கூடுதல் மின்தடையை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த வருடம் காற்றாலை மின் உற்பத்தியில் ஆயிரம் மெகாவாட்டாக இருந்த ஏற்ற, இறக்க வேறுபாடு இந்த ஆண்டு ஜுலையில் 2,400 மெகாவாட்டாக அதிகரித்துவிட்டது.
தமிழகத்துக்கு தேவையான மின்சாரம் அனல் மின் நிலையம், புனல் மின் நிலையம், காற்றாலைகள், டீசல் மின்சார உற்பத்தி நிலையம் உட்பட பல்வேறு வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 12,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இது மேற்கண்ட மின்சார உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில், ஆரல்வாய்மொழி, முப்பந்தல், தூத்துக்குடி, கயத்தாறு, உடுமலைப்பேட்டை போன்ற பகுதிகளிலுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் முக்கிய பங்கை வகித்து வருகிறது. நமக்கு தேவையான மின்சாரத்தில் சராசரியாக 3,500 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் நமக்கு அளித்து வந்தன.
ஆண்டு தோறும் ஜுன் முதல் ஆகஸ்டு முடிய மூன்று மாதங்களில் காற்று அதிகம் அடிப்பதால் அதிகபட்ச மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் இந்த மூன்று மாதங்களையும் "பீக் லோட்'' மாதமாக அறிவித்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியது.
காற்றாலைகள் மூலம் கடந்த 11ம் தேதி 7.5 கோடி யுனிட் உற்பத்தியானது. தொடர்ந்து 12ம் தேதி 7 கோடி, 13ம் தேதி 7.1 கோடி, 14ம் தேதி 5.3 கோடி, 15ம் தேதி 3.2 கோடி, நேற்று 16ம் தேதி வெறும் 1.6 கோடி யுனிட் மட்டுமே மின்சாரம் பெறப்பட்டது. நடப்பாண்டு பீக் லோட் மாதத்தில் அதிகபட்ச மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது காற்றாலைகள் உள்ள பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மின்சார உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக