செவ்வாய், 31 ஜூலை, 2012

நிதியமைச்சரானார் ப.சிதம்பரம்- உள்துறைக்கு ஷிண்டே, மொய்லிக்கு மின்சாரம்

டெல்லி: நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்து அவர் குடியரசுத் தலைவராகிவிட்ட நிலையில் இன்று சிறிய அளவிலான மாற்றத்தை பிரதமர் மன்மோகன் சிங் செய்தார்.
இதுவரை உள்துறை அமைச்சராக இருந்து வந்த ப.சிதம்பரத்திடம் மீண்டும் நிதித்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ப.சிதம்பரம்தான் அதைக் கவனித்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சிதம்பரத்தைப் பொறுத்தவரை உள்துறை அமைச்சகப் பொறுப்பில் அவர் சர்ச்சைகளைத்தான் அதிகம் சந்தித்திருக்கிறார். மாவோயிஸ்டுகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல், வடகிழக்கும் மாவோயிஸ்டுகள் வேரூன்றியது, தேசிய அளவிலான பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க முடியாமல் போனது, அசாம் இன மோதலைத் தடுக்கத் தவறியது என பல குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்தி வருகின்றனர். தனிப்பட்ட முறையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் சிதம்பரம் மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன.
தற்போதைய நாட்டின் பொருளாதர நிலை மோசமாக இருக்கும் சூழலில் நிதியமைச்சராக சிதம்பரம் பொறுப்பேற்றுள்ளார். என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஷிண்டேவுக்கு உள்துறை
அதேபோல சுஷில் குமார் ஷிண்டேவுக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மின்துறை அமைச்சராக இருந்து வருகிறார். ஷிண்டே மீதும் கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் பல மணி நேர மின்வெட்டை வடமாநிலங்கள் கண்டு வருகின்றன.
கிட்டத்தட்ட 12 மாநிலங்களில் மின்சாரம் இல்லாமல் கடந்த 2 நாட்களாக அலறிப் போய் விட்டனர். இதன் மூலம் சுமார் 2 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்கின்றனர். இதற்கு முழுக் காரணமும் ஷிண்டேதான் என்கினறனர். இந்த நிலையில் கூட்டத்தோடு கூட்டமாக ஷிண்டேவைத் தூக்கி உள்துறைக்கு மாற்றியுள்ளனர்.
மொய்லிக்கு மின்சாரம்
புதிய மின்துறை அமைச்சராக வீரப்ப மொய்லி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆரம்பத்தில் சட்ட அமைச்சராக இருந்தார். தற்போது கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக