செவ்வாய், 31 ஜூலை, 2012

சே : ஹிட்லர் முதல் மார்க்ஸ் வரை


மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 2
பதினேழு வயது எர்னஸ்டோவின் பள்ளி சான்றிதழ், ‘வெரி குட்’, ‘அவுட்ஸ்டாண்டிங்’ போன்ற மதிப்பீடுகளைக் கொண்டிருந்தாலும், சகமாணவர்கள் எர்னஸ்டோவை அப்படியொன்றும் ஒரு பிரமாதமான படிப்பாளியாகக் காணவில்லை. விளையாட்டு, அரட்டை, கிண்டல், ஊர் சுற்றல் என்று மிக இயல்பான ஒரு எர்னஸ்டோவைத்தான் அவர்கள் அறிந்திருந்தனர். எப்பொழுதும் நம்முடன் சுற்றிக்கொண்டிருக்கும் எர்னஸ்டோ தேர்வுகளில் மட்டும் எப்படி நல்ல மதிப்பீடுகளைப் பெற்றுவிடுகிறான் என்று அவர்கள் வியந்திருக்கவேண்டும்.
வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் எர்னஸ்டோ புத்தகங்களை அபாரமாக நேசித்தார். செலியாவும் எர்னஸ்டோ சீனியரும் சேகரித்து வைத்திருந்த மூவாயிரத்து சொச்ச புத்தகங்கள் எர்னஸ்டோமீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தின. ஆயிரத்தோரு இரவுகள், பாப்லோ நெருடாவின் கவிதைகள், பிராய்ட், ஜேக் லண்டன், அனடோல் பிரான்ஸ் என்று வாசிக்கத் தொடங்கினார். சுருக்கப்பட்ட கார்ல் மார்க்ஸின் மூலதனமும் கிடைத்தது. (ஆனால், அப்போது எனக்கு அதில் எதுவுமே புரியவில்லை!) எர்னஸ்டோவின் நண்பர் ஒருவர் நினைகூர்ந்தபடி, ‘பேரார்வத்துடன் எர்னஸ்டோ புத்தகங்களை அணுகினான். வயதுக்கு மீறிய கனமான தலைப்புகளை அவன் வாசிப்பது தெரிந்தது.’

எர்னஸ்டோ தனது முதல் ‘தத்துவ அகராதியை’ உருவாக்க ஆரம்பித்திருந்தார். 165 பக்க கையெழுத்துப் பிரதி அது. எழுத்தாளர்கள், தலைப்புகள் என்று வரிசைக்கிரமமாக விவரங்கள் திரட்டப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் பக்க எண்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கடவுள், இசை, பொன்மொழிகள், நம்பிக்கை, நீதி, மரணம், உல்லாசம், சாத்தான் என்று குறிப்புகள் விரிவடைகின்றன. ஆச்சரியமளிக்கும் வகையில், மார்க்சியம் பற்றிய குறிப்புகளை எர்னஸ்டோ, அடால்ஃப் ஹிட்லரின் மெயின் காம்ஃப் நூலில் இருந்து திரட்டியிருப்பதாக ஜான் லீ ஆண்டர்சன் தனது நூலில் (Che  Guevara – A Revolutionary Life) குறிப்பிடுகிறார். யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் ‘ஒன்றிணைந்து சதி வேலைகளில் ஈடுபடுவது’ பற்றிய ஹிட்லரின் குறிப்புகளை எர்னஸ்டோ தன் குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறார்.
ஹெச்.ஜி. வெல்ஸின் உலக வரலாற்றில் இருந்து அரிஸ்டாடில் மற்றும் புத்தர் பற்றிய குறிப்புகளை எடுத்தாண்டிருக்கிறார். காதல், நேசம், தேசப்பற்று, பாலியல் அறம் ஆகியவற்றுக்கு பெட்ரண்ட் ரஸ்ஸல் (Old and New Sexual Morality) உதவியிருக்கிறார். நினைவாற்றல் பற்றிய பிராய்டின் கோட்பாடுகள் எர்னஸ்டோவைக் கவர்ந்திருக்கின்றன. சமூகம் பற்றி ஜேக் லண்டன் (லெனின் இறுதியாக ஜேக் லண்டனின் கதைகளையே வாசித்ததாக நதேஷ்தா குரூப்ஸ்கயா குறிப்பிடுகிறார்), மரணம் பற்றி நீட்ஷே எழுதியவற்றின் சாரம் எர்னஸ்டோவின் குறிப்பேட்டில் காணப்படுகிறது.
அடுத்த பத்தாண்டுகளில், எர்னஸ்டோ மேலும் ஆறு குறிப்பேடுகளை உருவாக்கினார். வாசிப்பு ஆழத்துக்கும் புதிய புரிதல்களுக்கும் ஏற்ப குறிப்புகள் திருத்தியமைக்கப்பட்டன. ஹிட்லரை நிராகரித்துவிட்டு, கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் படைப்புகள்மூலம் மார்க்சியத்தை அணுகத் தொடங்கினார் எர்னஸ்டோ. ஜவாஹர்லால் நேருவின் எழுத்துகளில் இருந்து சில பத்திகளையும் எர்னஸ்டோ குறித்து வைத்துக்கொண்டார்.
இலக்கியம், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகள் என்று எர்னஸ்டோவின் ஆர்வம் பரவியது. தன்னால் நேரில் காணமுடியாத நாடுகளையும் சந்திக்கமுடியாத மக்களையும் இலக்கியத்தின் மூலம் எர்னஸ்டோ தரிசித்தார். கண்கள் மூடி கனவு கண்டார். அவர் பார்க்க விரும்பியவை, புகை மூடிக் கிடக்கும் உல்லாசப் பிரயாணிகளுக்கான இடங்கள் அல்ல. மயக்கும் தொலைதூர தேசங்கள் அல்ல. அவர் கனவு கண்டது லத்தீன் அமெரிக்கா குறித்து.
பிடிநோஸ்ட் (Osvaldo Bidinost Payer) என்னும் நண்பர் குறிப்பிடுவது போல், எர்னஸ்டோவின் லத்தீன் அமெரிக்கக் கனவு விரிவடைந்ததற்கு மற்றொரு காரணம் அவர் வீட்டுக்கு வருகை தரும் விருந்தினர்கள். பல்வேறு விதமான பின்னணி கொண்ட மனிதர்களையும் செலியா தன் வீட்டுக்கு வரவழைத்து, உபசரித்து, உரையாடி மகிழ்ந்தார். சில சமயம் ஈக்குவடாரில் இருந்து சில கவிஞர்கள் வந்திருப்பார்கள். கவிதைகள் பற்றிய சுவையான, காரசாரமான விவாதங்கள் நடைபெறும். சில சமயம், கல்லூரிப் பேராசிரியர்கள் வந்து போவார்கள்.
எர்னஸ்டோ சீனியருக்கு இப்படிப்பட்ட ‘அறிவார்ந்த உரையாடல்களில்’ ஆர்வம் இருக்காது. தடதடக்கும் தனது இருசக்கர வாகனத்தை (La Pedorra) ஓட்டியபடி அவர் வெளியேறிவிடுவார். கலை, இலக்கியம், வரலாறு, சமூகம் என்று விரிவாக விவாதிக்கும் செலியாவின் ஆற்றலை எர்னஸ்டோ ரசித்துக்கொண்டிருப்பார். ‘அவர்களுடைய வீடு ஒரு மனித மிருகக்காட்சி சாலை போல் காட்சியளித்தது’ என்கிறார் பிடிநோஸ்ட். எப்பொழுது சென்றாலும் ஏதாவதொரு விவாதம், அனல் பறக்கும் சண்டை அல்லது கவிதை வாசிப்பு. அன்றைய தினம் உணவு மேஜையில் எத்தனை பேர் கூடுவார்கள், எத்தனை பேருக்கு உணவு பகிர்ந்தளிக்கப்படும், விவாதத்தின் திசை என்ன என்பது ஒருவருக்கும் தெரியாது. ‘உலகத்தின் வரவேற்பறை போல் அந்த வீடு காட்சியளித்தது.’
சில சமயங்களில், விருந்தினர்களின் தொடர் வருகைகளால் எர்னஸ்டோவின் வாசிப்பு தடைபடுவதும் உண்டு. பொறுக்கமுடியாமல் குளியலறைக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு மணிக்கணக்கில் வாசித்துக்கொண்டிருப்பார். வாழ்க்கை முழுவதும் நீடித்த பழக்கமாக இது மாறிவிட்டது.
1946ல் எர்னஸ்டோவின் பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்தது. ஜூன் மாதம் தனது பதினெட்டாவது பிறந்த நாளை எர்னஸ்டோ கொண்டாடினார். தன் கல்லூரி படிப்பைத் தொடர்ந்துகொண்டே சாலை அமைக்கும் அரசு நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்யத் தொடங்கினார். மண்ணின் தரத்தை அறிவதில் எர்னஸ்டோ நிபுணத்துவம் பெற்றதைக் கண்ட நிறுவனம், தனியார் நிறுவனங்கள் சாலை அமைக்க பயன்படுத்தும் மண்ணைச் சோதனை செய்யும் பணியை எர்னஸ்டோவுக்கு ஒதுக்கியது. தன் மகன் ஒரு பொறியியலாளராக உருவெடுப்பார் என்று எர்னஸ்டோ சீனியர் திடமான நம்பிய காலகட்டம் அது. அவர் முன்னெடுத்துச் சென்ற கட்டுமான வேலை எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்காததால் கையிருப்பு நிலம், வீடு என்று அடுத்தடுத்து சொத்துகளை விற்கவேண்டியிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குவேராவின் குடும்பம் பியூனஸ் ஏர்ஸுக்குத் திரும்பிவந்தது.
ஆனால் எர்னஸ்டோவுக்கு வேறு கனவுகள் இருந்தன. அவர் ஒரு மருத்துவராக விரும்பினார். உண்மையில், ஒரு பொறியலாளராக மாறுவதற்கான படிப்பும் அனுபவமும்தான் அவரிடம் மிகுதியாக இருந்தன. இருந்தபோதும், ‘ஒரு புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளராக மாற விரும்பினேன். மனித குலத்துக்குத் தேவைப்படும் மிக முக்கியமான ஒன்றைக் கண்டறியவேண்டும் என்று கனவு கண்டேன்!’ உயிருக்குயிராக நேசித்த தனது பாட்டியைக் காப்பாற்ற நவீன மருத்துவம் தவறிவிட்டதால் அத்துறையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க சாதனை புரியவேண்டும் என்று அவர் முடிவெடுத்திருக்கலாம் என்று எர்னஸ்டோவின் குடும்பத்தினர் கருதுகிறார்கள். தன்னை வாட்டிக்கொண்டிருந்த ஆஸ்துமாவுக்கு தீர்வு காணும் நோக்கிலும் அவர் இத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். எப்படியும் பொறியியல் துறையைக் காட்டிலும் மருத்துவமே அவருக்கு நெருக்கமானதாக இருந்தது.
மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே டாக்டர் சல்வடோர் பிசானி என்பவரின் மருத்துவமனையில் ஆஸ்துமா பிரிவில் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார் எர்னஸ்டோ. ஆஸ்துமா நோயாளிகளை எர்னஸ்டோ கவனித்துக்கொண்ட முறையிலும் ஒவ்வாமை தொடர்பான ஆய்வில் அவர் செலுத்திய ஆர்வத்தையும் கண்ட பிசானி, எர்னஸ்டோவை சம்பளம் இல்லாத ஆய்வாளராக தன்னுடன் இணைத்துக்கொண்டார். பிசானி தான் கண்டறிந்த ஒருவித தடுப்பூசியைப் பயன்படுத்தி தன் நோயாளிகளின் ஆஸ்துமா தொல்லைகளைப் போக்குவதில் ஓரளவு வெற்றி பெற்றவர். எர்னஸ்டோவுக்கும் அவரே சிகிச்சை அளித்திருக்கிறார். பிசானியின் மருத்துவப் புலமையால் கவரப்பட்ட எர்னஸ்டோ ஒவ்வாமை துறையில் சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள முடிவு செய்தார்.
வீட்டில், எர்னஸ்டோ சீனியருக்கும் செலியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. பிரிந்துசெல்லும் முடிவில் அவர்கள் இருந்தனர். மூத்த மகனாக, வீட்டின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய பொறுப்பும் எர்னஸ்டோவுக்கு இருந்தது. ஒரே வீட்டில் இருந்தாலும் தன் தந்தையும் தாயும் தனித்தனியே பிரிந்து வாழ்வது எர்னஸ்டோவைப் பாதித்தது. உணவு மேஜையில் தன் தந்தையைச் சந்திக்கும்போது கோபத்துடன் எர்னஸ்டோ சண்டையிடுவது வழக்கம்.‘அப்போது எங்களைப் பார்ப்பவர்ளகள் எங்களை விரோதிகள் என்றுதான் நினைத்துக்கொள்வார்கள். ஓயாமல் நாங்கள் விவாதித்துக்கொண்டும் முரண்பட்டும் கிடந்தோம். ஆனால் அடியாழத்தில் எங்களிடையே நட்பு இருந்தது.’ என்று நினைவுகூர்ந்தார் எர்னஸ்டோ குவேரா லிஞ்ச்.
எர்னஸ்டோவை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏன் அவன் மருத்துவனாக விரும்புகிறான்? எனில், ஏன் அவன் இலக்கியமும் வரலாறும் வாசிக்கிறான்? ஏன் அவ்வப்போது பயணங்கள் பற்றி குறிப்பிடுகிறான்? அவன் கனவு என்ன? அவன் தன்னை எப்படிப் பார்த்துக்கொள்கிறான்? என்னவாக மாறவிரும்புகிறான்? ‘உண்மையைச் சொல்லவேண்டுமானால், எர்னஸ்டோவை மனதளவில் நான் பின்தொடர்ந்து கொண்டிருந்தேன்.’
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக