பெற்ற பிள்ளையை விடப் பாசமாக ரேஸ் குதிரைகளை வளர்க்கும் பணக்காரர்கள், அந்தக் குதிரையால் பந்தயத்தில் வெற்றி பெற முடியாவிட்டால், அதனால் தன் கவுரவமும் குதிரையின் கவுரவமும் சேர்த்துப் பாதிக்கப்படும் என்ற கவலையால் அதனைச் சுட்டுக் கொன்று விடுவார்களாம். சாதி வெறியர்கள் பெற்ற பிள்ளைகளையே வெட்டிக் கொல்வது கூட இத்தகைய ‘பாச உணர்வு’ காரணமாகத்தான்.
வினவுரசிகர்களின் உணர்ச்சிகளை கட்டிப்போட்டு செல்வாக்கு செலுத்தியவற்றில், 90களில் வந்த காதல் தொடர்பான திரைப்படங்கள் முக்கியமானவை. மசாலா இல்லையென்பதற்காகவும், காதலின் ‘கண்ணியத்தை’ சித்தரித்தமைக்காகவும் இப்படங்களை மக்கள் விரும்பி பார்த்திருக்கிறார்கள். அந்த கண்ணியத்தின் பின்னே உள்ள கயமைத்தனத்தை கூரிய விமரிசனப் பார்வையால் புரிய வைக்கிறது இந்த விமரிசனம். புதிய கலாச்சாரத்தின் சினிமா விமரிசனங்கள் தமிழ் சினிமாவின் சமூக தடத்தை பதிந்து வைத்திருக்கின்ற வரலாற்று ஆவணம். அந்த தடத்தில் நீங்களும் சென்று பார்க்க இந்த விமரிசனத்தை வெளியிடுகிறோம்
.
இரத்தத்தை உறைய வைக்கும் சண்டைக் காட்சிகளோ, இரத்தத்தைச் சூடேற்றும் நடனக் காட்சிகளோ இல்லாத ஒரு திரைப்படம் நூறு நாட்கள் ஓடுகிறதென்றால் அந்தத் திரைக்கதையின் உணர்ச்சியுடனோ அல்லது அது முன்மொழியும் நீதியுடனோ ரசிகப் பெருமக்கள், குறிப்பாக இளைளர்கள் ஒன்றிவிட்டார்கள் என்று சந்தேகிக்கத்தான் வேண்டும். ”காதலுக்கு மரியாதை” திரைப்படத்தின் வெற்றி இந்தச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பெற்றோரின் பாசத்துக்காகத் தங்கள் காதலையே தியாகம் செய்யத் துணிவதன் மூலம் ‘காதலுக்கு மரியாதை’ செய்கிறார்கள் காதலர்கள்.
ஒரு புத்தகக் கடையில் தற்செயலான ஒரு பார்வையில் ஏற்படும் ‘காதலில்’ காதலியைத் துரத்துகிறான் காதலன். ஒன்றிரண்டு வார்த்தைகள் கூடப் பேசிப் கொள்ளாமல் அகத்தின் அழகை முகத்திலிருந்து மட்டுமே தெரிந்து கொண்டு காதலிக்க இயலுமா என்றொரு கேள்வியை யாராவது கேட்பதாக இருந்தால் ”இது போன ஜென்மத்தின் தொடர்ச்சி” என்பது கதாநாயகனின் பதில்.
ஒரு நண்பனைப் போல மகனைச் சமமாக நடத்தும் பண்பாளர், கதாநாயகனின் தந்தை; கதாநாயகியின் அண்ணன்மார்களோ தங்கையைக் குடும்ப விளக்காகக் கருதிப் போற்றிப் பாதுகாப்பவர்கள். விட்டலாச்சாரயா படம் போல அந்த விளக்கில் தான் அக்குடும்பத்தின் உயிரே இருக்கிறது என்று நீங்கள் கருதுவதாக இருந்தால் திரைக்கதைப்படி அதுவும் மிகையில்லை.
கதாநாயகன் வழக்கமான ஹீரோக்களைப் போல கண்ணில் பட்ட கல்லூரிப் பெண்களையெல்லாம் கலாட்டா செய்து துரத்தும் சராசரி ரகத்தைச் சேர்ந்தவன் அல்ல; கதாநாயகியும் ”ஐ லவ் யூ” என்று சொல்லப்படுவதற்காகவே காத்திருந்து ”ஐ லவ் யூ” உடனே எதிரொலிக்கும் மலிவான பெண்மணி அல்ல; மனதில் அரும்பிய முதல் காதலை ‘முதல் பாவமாக’ப் கருதி தேவனிடம் மன்னிப்பு கேட்கும் ‘நல்ல கிறித்தவக் கன்னி’. மொத்தத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரே நல்லவர்கள் மயம்.
கதாநாயகன் ஜீவா, தங்கள் தங்கை மினியைக் காதலிப்பதை அறிந்த அண்ணன்மார்கள் அவனை ரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்குக் குழந்தை மனசு என்பதையும், கல்யாணமாகிப் பிள்ளை குட்டி பெற்றிருந்த போதும் அம்மா பேச்சைத் தட்டாத அம்மா பிள்ளைகள் என்பதையும் மறந்து விடக்கூடாது. கதாநாயகன் தன் காதலை முதலில் அறிவித்த முறை, பின்னர் தெரிவித்த முறை இவையெல்லாம் அநாகரிகமானவை, அடாவடித்தனமானவை என்று நீங்கள் ஒருவேளை கருதலாம். ஒரு தன்மானமுள்ள, நேர்மையான, துடிப்பான இளைஞனின் நடவடிக்கைகள்தான் அவை என்பதை கதாநாயகனின் கோணத்திலிருந்து சிந்தித்தால் நீங்கள் உணர முடியும்.
கையைக் காலை உடைத்து கதாநாயகனைப் படுக்கையில் போடும்வரை தன் காதலை கதாநாயகி வெளிப்படுத்தவில்லையென்பதால் அவளைக் கல் நெஞ்சுக்காரி என்றும் கூறிவிட முடியாது. காதலை நிரூபிப்பதற்காகக் காதலனை பத்து மாடிக் கட்டிடத்திலிருந்தும், மலை உச்சியிலிருந்தும் குதிக்கச் சொல்லும் தமிழ்ச்சினிமாக் காதாநாயகிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் மினியின் அருமை புரியும்.
கடைசியில் ஒரு வழியாகக் கதாநாயகி காதலுக்கு உடன்பட்ட போதும், அவளது அன்புச் சகோதரர்கள் உடன்படவில்லை. காதலர்கள் ஓடுகிறார்கள். ஒரு ராத்திரி அவனுடன் தங்கிவிட்டால் அப்புறம் அவள் வீட்டுப்படி ஏறக் கூடாது என்று தாயார் உத்தரவு. இருட்டுவதற்குள் தங்கையின் கற்பைக் காப்பாற்ற கையில் அரிவாளுடன் துரத்துகிறார்கள், மினியின் அன்புச் சகோதரர்கள். அப்போதும் கதாநாயகனை வெட்டிவிட்டு தங்கையை அநாதை இல்லத்தில் சேர்ப்பதுதான் சகோதரர்களின் திட்டம் என்பதிலிருந்து அவர்களது நல்ல உள்ளத்தைப் பரிந்து கொள்ள வேண்டும்.
விடிந்தால் திருமணம் என்னும் சூழலில்தான் காதல் – அன்பு – பாசம் ஆகியவை குறித்த தத்துவஞானச் சிந்தனை காதலர்களை ஆட்கொள்கிறது. ”கண நேரத்தில் தோன்றிய காதல் உணர்வுக்காக 20 ஆண்டு உத்தரவாதமுள்ள பெற்றோரின் பாச உணர்வைப் புறக்கணிப்பதா? பெற்றோர்களைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டுப் பிள்ளைகள் இன்பமான மண வாழ்வைத் துவக்குவது தருமமா?” என்ற கேள்விகள் அவர்களை அலைகழிக்கின்றன.
ஆசையே துன்பத்துக்கு அடிப்படை என்னும் தத்துவத்தைக் கண்டுபிடிக்க புத்தன் கூடப் பல ஆண்டுகள் சிந்திக்க வேண்டியிருந்தது. இந்தக் காதலர்களோ ஒரே இரவில் முடிவு செய்து காதலை ரத்து செய்து விடுகிறார்கள். திருமண ஏற்பாட்டைச் செய்த மீனவர் இந்த முடிவைக் கேட்டு முதலில் அதிரிச்சியடைகிறார். காரணங்களைக் கேட்டபின் அவருக்குள் இருந்த தந்தை உணர்வு உசுப்பிவிடப்படவே நெகிழ்ந்து போகிறார். வீட்டைவிட்டு ஓடி ஓரிரவு கழிந்தவுடனே மகளின் புகைப்படத்தைக் கூடத் தீ வைத்து எரிக்கச்சொன்ன தாயார், அவள் அரை கிராம் கற்பு கூடக் குறையாமல் திரும்பிவிட்டாள் என்று உத்திரவாதப்படுத்திக் கொண்டதும் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கிறாள். மகனின் கற்பு பற்றி விசாரித்து உத்திரவாதம் செய்து கொள்ளாமலேயே கதாநாயகனின் பெற்றோர் உவக்கிறார்கள்.
சகோதரர்கள் சொல்கிற ஆளுக்குக் கழுத்தை நீட்ட கதாநாயகி தயார்; அம்மா சொல்லும் பெண்ணின் கழுத்தில் கயிற்றை மாட்ட கதாநாயகன் தயார். இருந்தாலும் பெற்றோர்கள் ‘அடிப்படையில் நல்லவர்கள்’ என்பதால் அவர்களைக் குற்றவுணர்வு வாட்டுகிறது. ‘காதலை விடப் பாசமே பெரிது’ என்று தங்களை நிரூபித்துக் கொண்ட பிள்ளைகளிடம், பெற்றோர் தமது பாசத்தை நீரூபிக்க வேண்டிய தருணமிது; நிரூபிக்கிறார்கள். காதலின் எதிர்காலம் குறித்த நடுக்கத்துடன் அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.
சமூகப் பிரச்சினைகள் எதுவும் வேண்டாம். காதல் தான் மனிதகுலத்தின் ஒரே பிரச்சினை என்று காதலையே சுற்றி வந்து கொண்டிருக்கிறது திரையுலகம். காதலுக்காகத் தியாகப் போராட்டம், சாகசங்கள் என்பது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, காதலையே தியாகம் செய்யச் சொல்கிறது காதலுக்கு மரியதை.
காதல் விவகாரங்களைப் பொறுத்தவரை, அதுவரையில் உலகம் எக்கேடு கெட்டால் என்ன என்று கவலையில்லாமல் இருக்கும் நபர்கள் வில்லங்கமான காதல் விவகாரங்களில் – அதாவது சாதி மதம் மாறிக் காதலித்தல் அந்தஸ்து வேறுபாடு போன்றவை – மாட்டிக்கொள்ளும்போது, அவர்கள் மீது சமூக விழிப்புணர்வு கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. தங்களது சொந்த நலனுக்காகவாவது சாதி, மத வெறியையோ பணத்திமிரையோ எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது. பெற்றோர்கள், சகோதரர்கள், உற்றார், உறவினர்களின் குரூரங்களும், அற்பத்தனங்களும் அப்போதுதான் காதலர்களுக்கு நிதரிசனமாகின்றன. இயக்குநர் பாசில் மிகுந்த எச்சரிக்கையுடன் அமைத்திருக்கும் திரைக்கதையின் படி இருதரப்புக் குடும்பத்தினரும் ‘நல்லவர்கள்’தான். எனினும் அவர்களது கெட்ட பக்கத்தைச் சுவைக்கும் வாய்ப்பு அதுவரை பிள்ளைகளுக்குக் கிடைக்கவில்லை.
தங்கள் மீது பெற்றோர் செலுத்தும் பாசத்திற்கு எந்தவித நிபந்தனைகளும், எதிர்பார்ப்புகளும் கிடையாது என்று நம்பிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கு பிரச்சினை (காதல்) வரும்போதுதான் உண்மை விளங்குகிறது. நிபந்தனைக்குட்படாத காதலோ, பாசமோ, நட்போ கிடையாதென்பது எலும்பில் உறைப்பது போலப் புரிகிறது.
பிறகுதான் அந்த நிபந்தனைகளின் தன்மை என்ன என்ற ஆய்வு துவங்குகிறது. பெற்றொர்கள் சாதி, மதம் பார்க்கிறார்களா, அந்தஸ்தைப் பார்க்கிறார்களா – எதற்காகக் காதலை எதிர்க்கிறார்கள் என்ற கேள்வியும் அது சரியா தவறா என்ற சிந்தனையும் வருகிறது. பிறகு அதன்மீது கருத்துப் போராட்டம் நடக்கிறது.
இந்தப் படத்தில் பெண்ணின் சகோதரர்கள் தங்கள் ஒரே தங்கையை கண்ணின் மணியாகக் கருதுகிறார்கள்; அவளைச் சுற்றி வந்து பாட்டெல்லாம் பாடி தங்கள் பாசத்தின் ஆழத்தை ரசிகர்களுக்கு நிரூபிக்கிறார்கள். அவள் வீட்டின் குடும்ப விளக்காக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பாசத்திற்கு அவர்கள் விதிக்கும் ஒரே நிபந்தனை.
விளக்கு என்றால் குத்துவிளக்கா, நியான் விளக்கா, அத்தகைய விளக்குகள் காதல் மணம் செயது கொண்டால் தொடர்ந்து விளக்காக நீடிக்க முடியாதா என்ற கேள்விகளுக்கெல்லாம் சகோதரர்கள் சொல்வதுதான் பதில். அதன்மீது விவாதத்துக்கு இடம் கிடையாது.
அதே போல மகனை நண்பனாக நடத்துபவர் கதாநாயகனின் தந்தை. எனினும் நட்பு எங்கே முடிகிறது, தந்தை ஆதிக்கம் எங்கே தொடங்குகிறது என்பது தந்தைக்குத்தான் வெளிச்சம். அதிலும் விவாதத்திற்கு இடமில்லை. அத்தகையதொரு விவாதம் நடந்திருந்தால் குடும்பத்தினரின் பல விகாரங்கள் வெளிப்பட்டிருக்கும். பல தமிழ்ச் சினிமாக்களில் பணக்காரக் காதலிகள், தந்தையின் பணத்திமிரை எதிர்த்து 5 நிமிடம் பொரிந்து தள்ளிவிட்டு, கட்டிய ஃபாரின் சேலையுடன் ஏழைக்காதலனின் வீட்டுக்கு வந்து, நுழைந்தவுடனேயே அம்மிக் கல்லில் மசாலா அரைப்பது, மாமியாருக்குத் துணி துவைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அவையெல்லாம் பாசில் படத்தைப் போல ‘எதார்த்தமாக’ எடுக்கப்பட்ட படங்களல்ல; கதாபாத்திரங்களும் எதார்த்தமானவர்கள் அல்ல.
நல்லவர்கள், கண்ணியமானவர்கள், அன்பானவர்கள், நாகரிகமானவர்கள், படித்தவர்கள் என்றெல்லாம் தோற்றம் தருகின்ற காதலர்களின் குடும்பத்தினர் ஏன் இந்தக் காதலை எதிர்க்கிறார்கள் என்ற விவகாரத்தை இயக்குனர் கிளறியிருந்தால் அவர்களது தோலைக் கொஞ்சம் உரசியிருந்தால் துர்நாற்றங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டிருக்கும். அந்த மோதலினூடாகக் காதலர்கள் தங்கள் சொந்த நிறத்தையும், தரத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியிருக்கும். எனவேதான் விசயத்திற்குள் போகாமல் காதலா, பாசமா என்றொரு மோசடியான உணர்ச்சி நாடகத்தை நடத்தி எல்லா ‘நல்லவர்களையும்’, தயாரிப்பாளரையும் சேர்த்துக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிட்டார் இயக்குநர்.
இறுதிக் காட்சியில் சிறிய மாற்றம் செய்து தப்பி ஓடிய காதலர்கள் சிக்கிக் கொள்வதாக அமைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ”நம்மள வெட்டணும் குத்தணும்னு நம்ம குடும்பத்துக்காரங்க அலையறதுக்குக் காரணம், அந்த அளவு அவுங்க நம்ம மேல பாசமாக இருக்கிறதுதான்” என்று கதாநாயகி கூறிய விளக்கம் நிரூபணமாகியிருக்கும்.
சுவாரசியமான பாசம்தான். பெற்ற பிள்ளையை விடப் பாசமாக ரேஸ் குதிரைகளை வளர்க்கும் பணக்காரர்கள், அந்தக் குதிரையால் பந்தயத்தில் வெற்றி பெற முடியாவிட்டால், அதனால் தன் கவுரவமும் குதிரையின் கவுரவமும் சேர்த்துப் பாதிக்கப்படும் என்ற கவலையால் அதனைச் சுட்டுக் கொன்று விடுவார்களாம். சாதி வெறியர்கள் பெற்ற பிள்ளைகளையே வெட்டிக் கொல்வது கூட இத்தகைய ‘பாச உணர்வு’ காரணமாகத்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக