வியாழன், 19 ஜூலை, 2012

கேரளத்தின் புதிய அணை முயற்சி தோல்வி

திருவனந்தபுரம்: புதிய அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் குறுக்கு வழியில் அனுமதி பெற மேற்கொண்ட கேரளத்தின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
குமுளி-தேக்கடி இடையே தமிழக- கேரளா எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை வலுவிழந்து விட்டதாக பொய் புகார் கூறிய கேரள அரசு அங்கு புதிய அணை கட்ட திட்டமிட்டது.
இதற்காக ஆய்வு பணிகளையும் தொடங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. நீதிமன்ற உத்தரவுப்படி அணையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு நியமிக்கப்பட்டது. அந்த குழு நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் அணை பலமாக இருப்பதாகவும் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்றும் கூறியது.
ஆனால், கேரள அரசு இதை ஏற்காமல் முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு மனு செய்தது.
இந்த மனு கேரள வனத்துறை மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த மனு முறைப்படி வழங்கப்படவில்லை என கூறி மத்திய சுற்றுச்சூழல் துறை மனுவை நிராகரித்துவிட்டது.

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்டதாகும். புதிய அணை கட்டும்போது இந்த சரணாலயம் உள்ள இடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கும். எனவே புலிகள் சரணாலயம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியின்றி இங்கு எந்த பணியோ அல்லது அணை கட்டுவதோ கூடாது.
கேரள அரசு அணை கட்டுவதாக இருந்தால் அதற்கான மனுவை முதலில் புலிகள் சரணாலயத்திட்ட இயக்குனர் மூலம் மத்திய மற்றும் மாநில வன விலங்கு வாரியங்களுக்கும், அதன் பின்னர் மத்திய சுற்றுச்சூழல் துறை மூலம் சுப்ரீம் கோர்ட்டு நியமித்த உயர்நிலை குழுவிடம்தான் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால் கேரள அரசு அவ்வாறு செய்யாமல் கேரள வனத்துறை மூலம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பித்து குறுக்கு வழியில் அனுமதி பெற முயற்சித்து தோல்வியடைந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக