நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான‘கும்கி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.
கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று(26.07.12) சத்யம் திரையரங்கில் நடந்தது. கும்கி படத்தின் இசை தகட்டினை நடிகர் கமல் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.பிரபுவின் அழைப்பிதழை ஏற்று தி.மு.க தலைவர் கலைஞரும், முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரபுவை ஃபோனில் தொடர்புகொண்டு வாழ்த்தியுள்ளனர். நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, கார்த்தி, பார்த்திபன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சி துவங்கிய சிறிது நேரத்தில் எவருமே எதிர்பார்த்திராத நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சிக்கு வருகை தந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். மேடையில் பேசிய போது ரஜினி “சிவாஜி குடும்பத்திலிருந்து ஒருவர் சினிமாவிற்கு நடிக்க வரும்போது, அந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவில்லை என்றால் அது என் வாழ்க்கை முழுவதும் உருத்தலாகவே இருக்கும். பிரபு என்னை நிகழ்ச்சிக்கு வரச்சொல்லி கேட்டபோது இல்ல இப்ப முடியாது என்று கூறி மறுத்துவிட்டேன். ஆனாலும் நான் இல்லாத போது என் வீட்டிற்கு வந்து பத்திரிக்கை வைத்துவிட்டு ‘பத்திரிக்கை வைப்பது என் கடமை’ என்று கூறிவிட்டு சென்றார்.பத்திரிக்கை வைப்பது பிரபுவின் கடமை என்றால், நிகழ்ச்சியில் கலந்துகொள்வதும் என் கடமை.விக்ரம் பிரபுவின் வளர்ச்சிக்கு தமிழ்த் திரையுலகமே ஒத்துழைப்பு கொடுக்கும். இளம் ஹீரோக்களுக்கு நான் சொல்வது, ஒவ்வொரு படத்திற்கும் இடைவெளி விடாமல் நடிங்க. இடைவெளிவிட்டா ஸ்ட்ரெஸ் வந்துடும். நான் இளம் கதாநாயகனாக இருந்த போது சிவாஜி என்னிடம் “நீ ரொம்ப கெட்டிக்கரண்டா. எப்பவும் காலரை தூக்கிவிடமாட்ட” என்று கூறினார்.இன்றைய இளம் ஹீரோக்களுக்கு நான் சொல்வது ’படம் நடிச்சிட்டு காலரை தூக்கிவிட்டா அந்த படம் ஓடாது’ தெரிஞ்சிக்கோங்க” என்று கூறினார். கமல் பேசிய போது “சிவாஜி குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வரும் விகரம் பிரபு என்றும் எதற்காகவும் பயப்படவே கூடாது. அதற்கான அவசியமும் இருக்காது. தொடர்ந்து கடினமாக உழைத்துக்கொண்டே இருந்தால் வெற்றி உன்னைத் தானாக தேடி வரும்” என்று கூறினார்.பிரபு பேசிய போது “ கும்கி படக்குழுவிற்கு என் மகனை தாரைவார்த்து கொடுத்துவிட்டேன். இந்த படம் நன்றாக வரும். இயக்குனர் பிரபுசாலமனை, நடிகர் திலகத்தை பராசக்தியில் அறிமுகம் செய்த கிருஷ்ணன் பஞ்சுவைப் போல பார்க்கிறேன்” என மனம் நெகிழ்ந்து கூறினார்.கும்கி படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி பேசியபோது “என் தந்தை சிவாஜியின் தீவிர ரசிகர். ஒருமுறையாவது அவரை சந்தித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அது நிறைவேறாமலே இறந்துவிட்டார். இப்போது நான் சிவாஜி குடும்பத்திலிருந்து ஒருவரை சினிமாவிற்கு அறிமுகம் செய்துவைக்கிறேன் என்பதை கேட்டால் மிகவும் சந்தோஷப்படுவார்” என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக