திங்கள், 9 ஜூலை, 2012

மதுரை ஆதீனம்: சாமிநாதன் என்னை கொல்ல சதி செய்தார்

 Madurai Aadheenam Comments On Former Junior Aadheenam

சாமிநாதனை நான் ஏன் நீக்கினேன்?... மனம் திறக்கும் மதுரை ஆதீனம்!

 என்னால் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட சாமிநாதன் என்னை கொலை செய்யும் அளவுக்கு சதித் திட்டிம் தீட்டியிருந்தார். இதனால்தான் அவரை நீக்கினேன். எனக்குக் கீழ்ப்படியாவிட்டால் யாராக இருந்தாலும் நீக்கும் அதிகாரம் என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.
திடீரென செய்தியாளர்களிடம் பேசினார் மதுரை ஆதீனம். அப்போது அவர் பேசுகையில், இளைய ஆதீனமாக, 2004ம் ஆண்டு, சாமிநாதன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆதீனத்துக்கு உட்பட்ட திருவாரூர் பண்ணைத்தெரு சிவன் கோவில் மேலாளர் ஆறுமுகத்திடம் தகராறு செய்தார். ஆதீனத்தின் சொத்து ஆவணங்களை கேட்டு மிரட்டினார். ஆறுமுகம் மறுக்கவே, நாளைக்கு மதுரை ஆதீனமாக வேறு ஒருவர் இருப்பார். அப்போது நீ எப்படி இந்த பதவியில் இருப்பாய் என பார்ப்போம் என்று, சாமிநாதன் மிரட்டியுள்ளார்.

இதன்மூலம், என்னை அவர் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியிருந்தார் என, நான் புரிந்து கொண்டேன். அதனால் அவரை நீக்கினேன். எனக்கு கீழ்ப்படியாதவர்களை இளைய ஆதீன பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு அதிகாரம் இருக்கிறது.
நித்தியானந்தாவுக்கும், எனக்கும் மனஸ்தாபம் இல்லை. ஆழமாக சிந்தித்த பின் தான், அவரை இளைய ஆதீனமாக தேர்வு செய்தேன். நித்தியானந்தாவுக்கு நிர்வாகத் திறமை உள்ளது. மடத்தில் மான் தோல், புலித் தோல் உள்ளது என, பலர் கதை கட்டினர். அதெல்லாம் இல்லை என, போலீசார் சோதனையில் வெளிவந்துள்ளது. மரகதலிங்கம் இருக்கிறது என்பதும் கற்பனையே.
நித்தியானந்தா கொடைக்கானலில் இருந்து 20 நாட்களில் மதுரை வருவார். நான் சூழ்நிலைக் கைதியாக இல்லை. மடத்தின் அதிகாரம், நிர்வாகம் என் கன்ட்ரோலில்தான் உள்ளது. என்னுடைய உத்தரவுக்கு கீழ்ப்படிபவர் தான் இளைய ஆதீனமாக இருக்க முடியும்.
இளைய ஆதீனம் நியமனம் குறித்து, இந்து அறநிலையத் துறை கேட்ட அனைத்து விவரங்களையும் தெரிவித்து விட்டேன். அதில், நித்தியானந்தா தொண்டை மண்டல முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளேன்.
நித்தியானந்தா மீதான புகார்கள் கோர்ட்டில் உள்ளன. அதுகுறித்து பேச முடியாது. அமெரிக்காவின் கலிபோர்னியா கோர்ட்டில் உள்ள வழக்கில் தீர்ப்பு வந்த பின், இளைய ஆதீனமாக நித்தியானந்தா நீடிப்பாரா என்ற கேள்வியை கேளுங்கள் என்றார் ஆதீனம்.
அமெரிக்காவில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட அமைப்புகள் மோசடியானவை என்று அமெரிக்க கோர்ட் வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த மோசடிகளுக்கு தண்டனை அறிவிக்கப்படவுள்ளதும் நினைவிருக்கலாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக