வியாழன், 5 ஜூலை, 2012

தற்கொலை நகரம்': பெங்களூரில் பிபிஓ, ஐடி துறையினர் தற்கொலை அதிகரிப்பு

பெங்களூர்: இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களில் முதல் நான்கு முக்கிய நகரங்களில் பெங்களூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2009ம் ஆண்டு பெங்களூரில் 2,167 தற்கொலை வழக்குகள் பதிவாயின. அதுவே 2010ம் ஆண்டில் 1,778 பேரும் 2011ம் ஆண்டு 1717 பேரும் தற்கொலை மூலம் மரணமடைந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய குற்றவியல் பதிவு மையத்தில் பதிவாகியுள்ள புள்ளிவிபரத்தின்படி டெல்லி. பெங்களூர், சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. சென்னையில் 2,438 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அதேபோல் டெல்லியில் 1,385 பேரும். மும்பையில் 1,162 பேரும் தற்கொலை செய்து மரணமடைந்ததாக பதிவாகியுள்ளன.

இந்தியா முழுவதும் 53 மிகப்பெரிய நகரங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் மட்டும் 36.7 சதவிகிதம் பேர் தற்கொலை மூலம் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. பெங்களூர் நகரத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களில் 30 சதவீதத்தினர் பிபிஓ, கால்சென்டரில் பணிபுரியம் ஊழியர்கள் என்றும் 45 சதவீதத்தினர் ஐடி துறையில் பணிபுரிபவர்கள் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
17 சதவீதத்தினர் குறைந்த வருமானம் உடையவர்கள். எனினும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் 19 முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை எண்ணம் ஏற்படும் நொடியில் அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். மன உளைச்சல் காரணமாகத்தான் பெரும்பாலான தற்கொலைகள் நடைபெறுகின்றன. அவர்களுக்கு சரியான நேரத்தில் ஆலோசனைகளை வழங்கினால் தற்கொலை செய்து கொள்பவர்களின் உயிரை பாதுகாக்க முடியும். எனவே இளைஞர்களிடையே தற்கொலை எண்ணம் ஏற்படுவதை தடுக்க கவுன்சிலிங் வழங்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். மேலும் ஆலோசனை மையங்களை அழைக்க இலவச உதவி எண்களை அதிகரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக