வியாழன், 12 ஜூலை, 2012

தமிழகத்திலிருந்து 16 சிறுமிகள் கடத்தி விற்பனை? போலீஸ் விசாரணை

கோவை: தமிழகத்திலிருந்து, 16 சிறுமிகளை கடத்தி சென்று, கேரள மாநிலத்தில் விற்பனை செய்திருப்பதாக தகவல் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த போலீசார் கடத்தல் பேர்வழிகளையும், சிறுமிகளை விலைக்கு வாங்கும் கும்பலையும் வளைத்து பிடிக்க கோவையில் மூன்று தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் களம் இறங்கியுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த ஆனந்த் என்பவரது ஆறு வயது மகள், கடந்த 9ம் தேதி கடத்தப்பட்டாள். சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை தேடினர். அப்போது, பாலக்காடு ரயில்வே போலீசார், ஒரு சிறுமியை மீட்டு வைத்திருப்பதாக, தகவல் தெரிவித்தனர். கோவை போலீசார், பாலக்காடு விரைந்து சென்று, சிறுமியை மீட்டனர். மேலும், சிறுமியை கடத்தி சென்ற இருவரையும் கையோடு பிடித்து வந்தனர். போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில், போலீஸ் துணை கமிஷனர் ஹேமா தலைமையில், போலீசார் சிறுமியை கடத்தியவர்களிடம் விசாரித்தனர். அப்போது, சிறுமியை கடத்தியவன் திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியைச் சேர்ந்த செல்வம், 32, சுப்பிரமணியம், 32, என்பது தெரிய வந்தது.


மூன்று தனிப்படை: சிறுமி கடத்தல் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சிறுமியை கடத்திய சுப்பிரமணியம், இரண்டு ஆண்டுகளாக, கோவை பூ மார்கெட்டில் வேலை செய்கிறார். செல்வம், ஆறு மாதமாக, கோவையில் தங்கி, ஓட்டல்களில் வேலை செய்து வருகிறார். இருவரும் கூட்டு சேர்ந்து, பணத்துக்காக சிறுமிகளை கடத்தியுள்ளனர். இதற்காக, பள்ளிகள், பஸ் ஸ்டாண்ட், சினிமா தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் தனியாக நிற்கும், 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கண்காணித்து, கடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வெளிநாட்டுக்கு கடத்தல்: கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு, கொச்சி, திருச்சூர் ஆகிய இடங்களில், பெண் புரோக்கர்களிடம் சிறுமிகளின் அழகை பொறுத்து, 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்திருப்பதாக தெரிகிறது. இதுவரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 16 சிறுமிகளை, கேரள மாநிலத்தில் விற்பனை செய்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமிகளை விலைக்கு வாங்கும் பெண் புரோக்கர்கள், சிறுமிகளை வீட்டு வேலைக்கு விட்டு, பணம் சம்பாதிக்கின்றனர். சிறுமிகள் வளர்ந்ததும், போலி முகவரியில், பாஸ்போர்ட் எடுத்து, சவூதி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதாகவும் தெரிகிறது. எனவே, சிறுமிகளை கடத்தும் கும்பல் மற்றும் விலைக்கு வாங்கும் கும்பலை பிடிக்க கோவை தனிப்படை போலீசார் தீவிரம் காட்ட உள்ளனர். இவ்வாறு, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் கூறும்போது, ""கைது செய்யப்பட்ட இருவரும், முன்னுக்கு பின் முரணாக கூறுகின்றனர். சிறுமிகளை கடத்தியதாக அவர்கள் கூறிய முகவரிகளில், விசாரிக்கும்போது, பொய்யான தகவல் என்பது தெரிந்தது. அவர்களை தொடர்ந்து விசாரித்து, சிறுமி கடத்தலில் தொடர்புடைய, கும்பலை பிடிக்கவும் திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

புரோக்கர்கள் "எஸ்கேப்': கோவை தனிப்படை போலீசார், சிறுமியை கடத்திய செல்வம், சுப்பிரமணியத்தின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனிப்படையும், திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில், மற்றோரு தனிப்படை போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சிறுமிகளை விலைக்கு வாங்கும், கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் புரோக்கர்களை பிடிக்க, கோவையிலிருந்து தனிப்படை விரைந்துள்ளது. இத்தகவல் தெரிந்ததும், கேரள பெண் புரோக்கர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால், கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் தொடர் வேட்டையில் களம் இறங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக