வியாழன், 12 ஜூலை, 2012

16 குழந்தைகளை கடத்தி விற்றோம் : கைதான 2 பேர் திடுக் தகவல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மாவட்டங்களில் 16 குழந்தைகளை கடத்தி விற்றோம் என்று கோவை போலீசில் சிக்கிய 2 பேர் தெரிவித்துள்ளனர். கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ராணி. மகள் கார்த்தியாயினி(6), கோவில்மேட்டிலுள்ள மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறாள். நேற்று முன்தினம் மாலை சிறுமியை அழைத்துவர ராணி, பள்ளிக்கு சென்றார். அங்கு கார்த்தியாயினியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் சிறுமியை காணவில்லை. சாயிபாபா காலனி போலீசில் புகார் செய்தனர். தனிப்படை அமைத்து சிறுமியை போலீசார் தேடி வந்தனர். மாயமான சிறுமி அன்று இரவு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒலவக்கோடு ரயில்வே ஸ்டேஷனில் ஒருவருடன் அழுது கொண்டிருக்கும் விவரம் கோவை போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு, குழந்தையுடன் இருந்தவரை கோவை அழைத்து வந்து விசாரித்தனர்.

அவர் திண்டுக்கல் தர்மத்துப்பட்டியை சேர்ந்த செல்வம்(32), கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் ஊழியர். அவர் சிறுமியை கடத்தி விற்க முயன்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு உடந்தையாக இருந்த பூ மார்க்கெட்டில் பணிபுரியும் சுப்பிரமணியையும்(35) போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள்: இருவரும் ஒரே ஊரை சேர்ந்த நண்பர்கள். இவர்கள் தொடர்ந்து குழந்தை கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு புதுநகரத்தில் 35 வயது பெண் ஒருவர் ஆண், பெண் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளை விலைக்கு வாங்கி வந்துள்ளார்.

அவர் கருப்பு நிற பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம், மாநிற பெண் குழந்தைக்கு ரூ.75 ஆயிரம், சிவப்பு நிற பெண் குழந்தைக்கு ரூ.1 லட்சம் மற்றும் அதன் அழகை பொறுத்து கூடுதல் விலை அளித்துள்ளார். அதே போல் கருப்பு நிற ஆண் குழந்தைக்கு ரூ.1 லட்சம், சிவப்பு நிற ஆண் குழந்தைக்கு ரூ.2 லட்சம் அளித்துள்ளார். அதே போல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரின் நிறம், அழகு ஆகியவற்றுக்கு ஏற்ப தொகை வழங்கி வந்துள்ளார். இதையறிந்த 2 பேரும் தமிழகத்தில் குழந்தை களை கடத்தி அந்த பெண்ணிடம் விற்று பணம் சம்பாதிக்க முடிவெடுத்தனர். கடந்த 3 ஆண்டில் திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 16 குழந்தைகளை கடத்தி அந்த பெண்ணிடம் விற்று தொகை பெற்றுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 6 பேரை கடத்தியுள்ளனர். இதில் கோவை புறநகர் மாவட்டத்தில் 6 குழந்தைகளை கடத்தியதாகவும், கோவை மாநகரில் முதன் முதலாக கார்த்தியாயினியை கடத்தியபோது சிக்கியுள்ளனர். கேரள பெண்ணிடம் விற்கப்பட்ட குழந்தைகள், சிறுவர், சிறுமிகளை அந்த பெண் உடனடியாக கை மாற்றி விற்று விடுவதாகவும், அவரிடம் இருந்து விபசார கும்பல், நரபலி கொடுக்கும் கும்பல், வெளிநாட்டுக்கு சிறுவர், சிறுமிகளை வேலைக்கு அனுப்பும் கும்பல் வாங்கி செல்வதாகவும் அதற்கேற்ப அந்த பெண் தேவைப்படும் குழந்தைகளின் பாலினம், நிறம், அழகு, வயது ஆகியவற்றை தெரிவித்து அதற்கேற்ப குழந்தைகளை கடத்தி கொண்டு வரும்படி கூறியதாகவும், அதற்கேற்ப 2 பேரும் குழந்தைகளை கடத்தி விற்று வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் கடத்திய 16 குழந்தைகளின் விவரங்களை போலீசார் பெற்றுள்ளனர். இதற்கிடையில் தனிப்படை போலீசார் பாலக்காடு புதுநகரத்தில் உள்ள பெண்ணை கைது செய்ய விரைந்துள்ளனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தினால் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக