டெல்லி: பிரணாப் முகர்ஜிதான் குடியரசுத் தலைவர்
வேட்பாளர் என்பதில் காங்கிரஸ் ஏன் பிடிவாதமாக இருக்கிறது என்பது
தெரியவில்லை. ஒரு வேளை இப்படி இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஒரு பக்கம் ஓடத்
தொடங்கியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தற்போதுள்ள
பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் பிரதமர்
பதவிக்கு வர மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அடுத்த
பிரதமர் ராகுல்காந்திதான் என்ற மனோபாவத்திற்கு காங்கிரஸார் வந்து விட்டனர்.
அவர் அரசியல் சதுரங்கத்தில் இன்னும் டிகிரியே வாங்கவில்லை என்ற போதிலும்,
ஏகப்பட்ட சொதப்பல்களைச் சந்தித்துள்ள போதிலும், தொடர் தோல்விகளின் நாயகனாக
வலம் வருகின்ற போதிலும், அவரே எதிர்காலத் தலைவர் என்ற மன நிலையில்தான்
காங்கிரஸார் உள்ளனர்.இப்போதைக்கு ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு உயருவதற்கு மன்மோகன் சிங் ரூபத்தில் சின்னதாக ஒரு உறுத்தல் உள்ளது. இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் ராகுலுக்காக பதவியை விட்டுத் தர மன்மோகன் சிங் தயாராகத்தான் இருக்கிறார். யாரும் போய் அவரிடம் கேட்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அவரே எப்போதடா இந்தப் பதவியிலிருந்து போவோம் என்ற மன நிலையில் இருக்கிறார்.
ஆனால் பிரணாப் முகர்ஜிதான், காங்கிரஸ் தலைமைக்கு குறிப்பாக ராகுல் ஆதரவு வட்டத்திற்குப் பெரும் முட்டுக்கட்டையாக தெரிவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த, முக்கிய தலைவர்களில் பிரணாப் ஒருவர். இந்திரா காந்தி மறைவுக்குப் பின்னர் பிரதமர் பதவியைப் பிடிக்க இவர் கடுமையாக முயன்றார். ஆனால் இந்திராவின் வாரிசாக ராஜீவ் காந்தியை கொண்டு வந்து விட்டனர்.
இதனால் பெருத்த ஏமாற்றத்தை அடைந்த பிரணாப் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் கட்சிக்கு விசுவாசமாகவே செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகும் அவர் பிரதமர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் நரசிம்மராவ் உள்ளே புகுந்து விட்டார். பிறகு சோனியா காந்திக்கு பிரதமர் பதவி இல்லை என்ற நிலை உருவானபோதும் பதவியை எதிர்பார்த்தார் பிரணாப். ஆனால் மன்மோகன் வந்து விட்டார்.
இப்படி அடுத்தடுத்து பிரதமர் பதவியை அடையும் வாய்ப்பை நழுவ விட்டவர் பிரணாப். இருந்தாலும் அவர் எந்த காலகட்டத்திலும் அதை ஒரு பிரச்சினையாக்கியதில்லை. கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் கட்டுப்பட்டே செயல்பட்டு வந்தவர் அவர்.
அதேசமயம், அவருக்கு கொடுக்காமல் மற்றவர்களுக்கு பிரதமர் பதவி போனபோதும் கூட அவரைப் போலவே மூத்த தலைவர்களுக்குத்தான் போனது. இதனால் பிரணாப்புக்கு பெரிய அளவில் வருத்தம் ஏற்பட வாய்ப்பில்லாமல் போனது.
ஆனால் ராகுல் காந்தி விவகாரம் அப்படியில்லை. ராகுல் காந்தி தான் ஒரு வெற்றிகரமான தலைவர் என்று இதுவரை எந்த இடத்திலும் நிரூபிக்கவில்லை. அவரது உத்திகள் எல்லாமே கிட்டத்தட்ட தோல்வியைத் தழுவி விட்டன. உச்சகட்டமாக உ.பியில் ராகுல் காந்தியின் மந்திரம் செல்லுபடியாகவில்லை.
மேலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் ராகுல் காந்தியின் திறமை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. முக்கியப் பிரச்சினைகளில் அவருக்குத் தெளிவான எண்ணம் இல்லை. எதிர்க்கட்சிகளின் வியூகங்களை, அஸ்திரங்களை சமாளித்துக் கரையேறக் கூடிய பக்குவம் அவருக்கு இல்லை.
மறுபக்கம் பிரணாப், ராகுலுக்கு முற்றிலும் நேர் மாறாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை எத்தனையோ பிரச்சினைகளிலிருந்து அசகாயமாக காப்பாற்றியவர் அவர். பல பிரச்சினைகளுக்கு குறிப்பாக கூட்டணிக் கட்சிகளிடமிருந்து கிளம்பிய சீரியஸான பல பிரச்சினைகளில் படு லாவகமாக செயல்பட்டு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றிய பெருமை அவருக்குண்டு.
ஆனால், நீண்ட அரசியல் வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட பிரணாப் முகர்ஜி அதிலிருந்து விலகப் போவதாக ஏற்கனவே கூறிவிட்டார்.
ஆனால் அவரை இழக்க காங்கிரஸ் தயாராக இல்லை. அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் வராவிட்டாலும் ராகுல் காந்திக்கு உதவியாக, காங்கிரசுக்கு ஆதரவாக இருக்க பிரணாப் முகர்ஜி போன்றவர் ஜனாதிபதியாக இருப்பதே உதவியாக இருக்கும் என சோனியா கருதுகிறார்.
எனவேதான் அவரை குடியரசுத் தலைவராக்கி விட்டால், மறைமுகமாக காங்கிரசுக்கு ஆலோசனைகள் தருவதோடு ராகுல் காந்திக்கும் உதவுவார் என்ற கணக்கின் அடிப்படையில்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப்தான் என்று காங்கிரஸ் பிடிவாதம் பிடிப்பதாக ஒரு கருத்து உலவுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக