புதன், 6 ஜூன், 2012

Hyundai ஹூண்டாய் ஹவாசின்: ஆறு தொழிலாளிகள் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஹூண்டாய்-நரபலி
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தொழிலாளர்கள்
சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்து போன சிரமன், திலோத் மத்வான். இதில் சிரமனின் வயது 16 மட்டுமே.
ஸ்ரீபெரும்புதூர் அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் இரத்தச் சகதியில் கிடத்தப்பட்டிருந்த நான்கு உயிரற்ற உடல்கள். சென்னை அரசு பொதுமருத்துவமனையின் சவக்கிடங்கில் வெள்ளைத்துணி போர்த்தப்பட்டிருந்த இரு உடல்கள். அதே மருத்துவமனையின், தீவிர சிகிச்சைப் பிரிவில் நாசி வழியே வழிந்தோடும் இரத்தத்தை துடைத்தெடுக்கக்கூடத் துணை எவருமின்றி, சுயநினைவற்றுப்போன நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இரு உடல்கள். விபத்து சிகிச்சைப் பிரிவின் படுக்கையொன்றில் கிடத்தப்பட்டிருக்கும் ஒர் உயிரிருள்ள உடல்.
இந்தப் பரிதாபக் காட்சிகளைப் பார்க்கவே பதறுகிறது மனம். யாரையேனும் பிடித்து கதறி அழுது தீர்க்க வேண்டுமென உந்தித்தள்ளுகிறது, அதிர்ச்சியிலும், காட்சிகளிலும் வெடித்துக் கிளம்பும் உணர்ச்சி.
கவனிப்பார் யாருமின்றி, கேள்வி கேட்பாரற்ற அனாதைப் பிணங்களாய் கிடத்தப்பட்டிருக்கும் இவர்களெல்லாம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் ஹூன்டாய் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் “ஹவாசின்” என்ற நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநிலத் தொழிலாளர்கள். பீகார், ஒரிசாவைச் சேர்ந்த இந்த சடலங்கள் அனைத்தின் வயதும் 16 தொடங்கி 26க்குள் அடக்கம்.
நள்ளிரவில் பணிமுடித்து வீடு திரும்ப பேருந்துக்காக இவர்கள் காத்திருந்ததாகவும்; அப்போது அவ்வழியே சென்ற காய்கறி ஏற்றிச்செல்லும் சரக்குந்தை வழிமறித்து 15 தொழிலாளர்கள் ஏறிச்சென்ற பொழுது, சாலையோரம் நின்றிருந்த வாகனம் ஒன்றில் மோதி விபத்திற்குள்ளாகி பலியாகிவிட்டனர் என்றும் பச்சையாய் புளுகுகிறது, போலீசும் பத்திரிக்கைகளும்.
உண்மையில், இரவுநேரப்பணிக்கு போதுமான ஆட்கள் இல்லாததால், அறையில் பணிமுடித்தக் களைப்பில் உறங்கிக்கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்களைத் தட்டியெழுப்பி, ஆடுமாடுகளைப் போல லோடு ஆட்டோவில் அள்ளிப் போட்டுக்கொண்டு செல்லும் வழியில்தான் இந்த விபத்தும் கோரச்சாவும் நிகழ்ந்திருக்கிறது. சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் நசுங்கி இறந்திருக்கின்றனர். இதுவரை கிடைத்த தகவலின் படி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இருவர் இறந்தது உள்ளிட்டு மொத்தம் 6 பேர் இறந்து போயிருக்கின்றனர். எதிர்பாராத விதமாய் நிகழ்ந்துவிட்ட விபத்தல்ல இது. பச்சையான படுகொலை. முதலாளித்துவ இலாபவெறிக்கு நரபலியாக்கப்பட்டிருக்கிறார்கள் இவ்விளந் தொழிலாளர்கள்.
ஹூண்டாய்-நரபலி
மூக்குவழியே இரத்தம் கசிந்து உறைந்து போனநிலையில் சம்போ. தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும் இவரது வயது 16க்குள்தான் இருக்க வேண்டும்.
ஆடுமாடுகளைப்போல, எந்நேரம் வேலைக்குப் பணிக்கப்பட்டாலும் சிறு முணுமுணுப்பையும் வெளிக்காட்டாமல் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் 40-50 பேரை ஒரே அறையில் அடைத்து வைத்து தனக்கு தேவைப்பட்ட நேரத்திலெல்லாம் அழைத்து வேலை வாங்கியிருக்கிறது, ஹவாசின் நிர்வாகம். இயந்திரங்களை கையாளுவதற்கேற்ப போதுமான கல்வித் தகுதியோ, அனுபவமோ அற்ற இத்தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக அத்தகைய வேலைகளிலும் ஈடுபடுத்தியிருக்கிறது, நிர்வாகம். இவ்வாறு “வெல்டிங் மற்றும் பிரஸ்ஸிங் மிஷினில் கை சிக்கி உடல் உறுப்புகள் சின்னாபின்னமாகி சிதைந்து போன தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம், இது இங்கே சர்வ சாதாரணம்” என்கின்றனர் ஹவாசின் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள்.
“வழக்கமா ஷிப்ட்டுக்கு ஆள் பத்தலைன்னா, ரூம்ல இருக்கிற ஹிந்தி காரங்களை கூட்டிட்டு வர்றதுக்கு கம்பெனியிலிருந்தே வண்டியை அனுப்புவாங்க. ஹிந்தி கார பசங்களை “டாடா ஏஸ்” வண்டியிலதான் வேலைக்கு கூட்டிட்டு வருவாங்க, கொண்டுபோய் விடுவாங்க. இது வழக்கமா நடக்குறதான். அன்னிக்கு நைட்டும் ஷிப்ட்டுக்கு ஆள் பத்தலை, அதனால ஒரு டாடா ஏஸ் வண்டியும் கம்பெனி ஆம்புலன்சையும் அனுப்பி வச்சாங்க. ஆம்புலன்ஸ்ல வந்தவங்களுக்கு ஒன்னும் ஆகலை. டாடா ஏஸ் வண்டிதான் ஆக்சிடென்ட் ஆச்சு. அதுவும் அந்த டாடா ஏஸ் டிரைவர் மூனுநாளா வீட்டுக்கு போகாம டூட்டி பார்த்திட்டு இருந்தார் சார் ” என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத ஹவாசின் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளி.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை சந்திக்க சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இரு தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். விபத்தில் சிக்கி கந்தலாகிப் போன துணியோடு அப்படியே கிடத்தப்பட்டிருந்த 16 வயது மதிக்கத்தக்க இளந்தொழிலாளி சம்போ, சுயநினைவற்ற நிலையில் மூச்சை இழுத்து வாங்கிக் கொண்டிருந்தார். அவரது இதயத்துடிப்பு மிகவேகமாய் அலை பாய்ந்து கொண்டிருந்தது. நாசிவழியே இரத்தம் வழிந்தோடிக்கிடந்தது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தோம், “காலையில இருந்து பச்சைத்தண்ணி கூட உள்ள போகல தம்பி, ஒரு பய கூட எட்டிப்பார்க்கல, மூக்கு வழியா ரத்தம் வழிஞ்சிகிட்டே இருந்துச்சு. நர்சு அம்மாகிட்ட சொன்னேன், “அப்படித்தான் வரும் போ”ன்னு சொல்லிட்டாங்க. பார்க்கவே பாவமா இருக்கு தம்பி” என்றனர், அவர்கள்.
ஹூண்டாய்-நரபலி
21 வயதேயான பனிஸ்டோ, அவரை கவனித்துக்கொள்ளும் ராஜம்.
மண்டை பிளந்தும் கைமணிக்கட்டில் இரத்தக் காயங்களோடும் விபத்து சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரிசாவை சேர்ந்த 21 வயதான பனிஸ்டோவின் நிலையோ பரிதாபம். தன்னோடு பயணித்த சக தொழிலாளர்களில் எத்தனை பேர் இறந்து போயினர், தப்பிப்பிழைத்தவர்களின் கதியென்ன என்பதைக் கூட இதுவரை அறிந்துகொள்ள முடியாத துர்பாக்கியசாலியாய், தனிமையும் வெறுமையும் மட்டுமே துணையாய்க் கொண்டு துவண்டுக் கிடக்கிறார் அவர். படுக்கையில் கிடத்தியதோடு சரி, உடனிருந்து உதவிசெய்ய எவரும் வரவில்லை. கண்ணெதிரிலே சக தொழிலாளர்களை பலிகொடுக்க நேர்ந்த பரிதவிப்பும் அதன் தாக்கத்திலிருந்து மீளாத மிரட்சியுமே அப்பியிருந்தது, அவரது கண்களில்.
சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற நம்மை சூழ்ந்து கொண்டனர், அதே மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிற நோயாளிகளின் உறவினர்கள். அவர்களிடம் இவர் யார், எப்படி இங்கு வந்து சேர்ந்தார் என்பதை சொன்னோம். “நாடு வுட்டு நாடு பொழைக்க வந்தவனுங்கள இப்படியா கொடுமை பண்ணுறது, அவனுங்களாம் நல்லா இருக்க மாட்டானுங்க. அவனுங்க கிடக்குறானுங்க தம்பி நீங்க சொல்லுங்க, இந்த பையனுக்கு இன்னா பண்ணனும் சொல்லு. நாம இருந்து நம்மலால முடிஞ்சத செய்வோம்” என்றார், வள்ளுவர் கோட்டத்தை சேர்ந்த வயதான பெண்மணி ராஜம்.
வடமாநிலத்தைச் சேர்ந்த இந்த இளைஞன் யாரென்றே தெரியாத போதும், அவர் பேசும் மொழி புரியாதபோதும், உடனிருந்து உதவி செய்யக்கூட எவருமில்லாத அவலநிலையை உணர்ந்து, தானாக முன்வந்து தண்ணீர், உணவு, மருந்து மாத்திரைகளை வழங்கி பனிஸ்டோவை கவனித்துவருகிறார், ராஜம்.
அடையாளம் தெரியாத நபர்களால் அனுமதிக்கப்பட்ட “அடையாளம் காணப்படாத உருப்படிகளாய்” சவக்கிடங்கிலும், மருத்துவமனையின் படுக்கைகளிலும் அநாதைகளாய் கிடத்தப்பட்டிருக்கும் பேரவலத்தை இனியும் விவரிக்க மனம் ஒப்பவில்லை.
ஹூண்டாய்-நரபலி
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பரோதன் மற்றும் சம்போ
உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களை கவனிக்க ஒரு நாதியுமில்லை. உயிரற்ற சடலத்தின் அருகே ஒட்டியிருந்து காதும் காதும் வைத்தாற் போல அவற்றை அப்புறப்படுத்துவதிலேயேதான் முனைப்பு காட்டியது, ஹவாசின் நிர்வாகம். இந்தப் பணிக்காகவே ஒதுக்கப்பட்ட இரண்டு நிர்வாகிகள், ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தியின் உதவியுடன் இந்தக் காரியத்தை கச்சிதமாக செய்தும் முடித்தனர். வெற்றுத்தாளில் மிரட்டி கையெழுத்தை வாங்கிக் கொண்டு, வெள்ளைத்துணி போர்த்தப்பட்ட உயிரற்ற சடலத்தை வடமாநிலத் தொழிலாளர்களிடம் திணித்தது நிர்வாகம். சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல வாகன ஏற்பாட்டை செய்துகொடுத்து, வழிச்செலவுக்கு சில ஆயிரங்களை கொடுத்தும் ‘மனிதாபிமான’ அடிப்படையில் நடந்து கொள்வதைப் போல தொழிலாளர்களிடம் காட்டிக்கொண்டது, நிர்வாகம். நிர்வாகத்தின் இந்த நயவஞ்சக நாடகத்தை அம்பலப்படுத்தி தொழிலாளர்களிடையே அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
“இந்த பச்சைப் படுகொலையை செய்தது “ஹவாசின்” நிர்வாகம். கைது செய்து தூக்கிலிட வேண்டிய கொலைக்குற்றவாளிகள் அவர்கள். முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கெதிராக தொழிலாளர்கள் அணிதிரள வேண்டும்” என்ற  இவ்வமைப்பின் பிரச்சாரத்தை வரவேற்று ஆதரித்துள்ளனர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் பணியாற்றும் இளம் தொழிலாளர்கள். கனவிலும், இது விபத்து என்று ஒப்புக்கொள்ள அவர்கள் தயாராயில்லை.
ஹூண்டாய்-நரபலிநீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அய்யோ பாவம் என்ற அனுதாப வார்த்தைகளும், உண்மையாய் மனம் வருந்தி இறந்துபோன தொழிலாளிக்கு நாம் செலுத்தும் இரங்கலும் இயல்பான ஒன்றுதான். இது மட்டுமே போதுமா, என்ன?  சொந்த ஊரில் வாழ வழியற்று மொழி, உணவு, பண்பாடு தெரியாத மண்ணில் ஆட்டுமந்தைகளைப் போல அவதிப்படும் இந்த தொழிலாளிகளின் வாழ்க்கை மட்டுமல்ல, மரணமும் கூட யாரும் கவனிப்பாரின்றி முடிந்திருக்கிறது. உயிர் பிழைத்தோரும் என்ன ஏது என்று தெரியாமல் அனாதைகளாய் படுக்கையில் மயங்கிய நிலையில் இருக்கின்றனர்.
அழகான ஹூண்டாய் காரை என்ன கலரில் வாங்கலாம், எந்த வங்கியில் வட்டி குறைப்புடன் கடன் வாங்கி வாங்கலாம் என்று கனவு இல்லத் திட்டத்தோடு வாழும் வர்க்கம் தனது காருக்கு பின்னே இத்தனை இரத்தமும், சதையும் சிந்தப்பட்டிருக்கிறது என்பதை உணருமா? பன்னாட்டு நிறுவனங்களின் வருகை சொந்த மண்ணின் பொருளியல் வளத்தை மட்டுமல்ல, சொந்த மக்களின் உயிரையும் உறிஞ்சித்தான் இலாபத்தை பறித்தெடுக்கிறது என்பதை இப்போதாவது ஏற்கிறீர்களா? இல்லை எனில் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள், தொழிலாளிகளின் சொந்தக் கதைகளிலிருந்து சொந்தக் குரலிலிருந்து கதைகளை கேளுங்கள்! கல் நெஞ்சத்தையும் கரைக்கும் அந்தக் கண்ணீர் உங்களது பாவங்களை கழுவட்டும்!
__________________________________________________
சி.வெற்றிவேல் செழியன் உதவியுடன்,
இளங்கதிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக