புதன், 6 ஜூன், 2012

ராசா தமிழ்நாட்டுக்குப் போகலாம் நீதிமன்றம் அனுமதி

 Raja Can Visit Tamil Nadu Says Cbi Court
டெல்லி: முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராசா தமிழ்நாட்டுக்குப் போக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதான முதல் நபர் ராசா. ஆனால் கடைசி நபராக சமீபத்தில்தான் அவர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார். ஆனால் தமிழ்நாட்டுக்குப் போகக் கூடாது என அவருக்கு சிபிஐ கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் டெல்லியில் உள்ள மத்திய தொலைத் தொடர்புத்துறை அலுவலகத்துக்கும் அவர் போகக் கூடாது என்றும் நிபந்தனை உள்ளது.இந்த நிலையில், நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராசா.
அதில், நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையில் அங்கு ஜனநாயக கடமையாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலும் இருப்பதால் கட்சிப் பணியாற்ற வேண்டும்.

சி.பி.ஐ. கோர்ட்டுக்கு ஜூன் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கோடை விடுமுறை. அதனால் தினமும் விசாரணை இருக்காது. எனவே இந்த காலகட்டத்தில் நான் சென்னைக்கும், நீலகிரிக்கும் சென்றுவர அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை ஏற்ற நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று ராசாவுக்கு நிபந்தனையைத் தளர்த்தி தமிழகம் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து இன்றே ராசா சென்னை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை வந்தால் முதலில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ராசா பிறந்த நாள் வாழ்த்து கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், ராசாவை திமுக எப்படி விமான நிலையத்தில் வரவேற்கும் என்பதும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது. இதே வழக்கில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கருணாநிதி மகள் கனிமொழிக்கு திமுகவினர் திருவிழாக் கோலத்தில் தடபுடலாக வரவேற்பளித்தனர் என்பது நினைவிருக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக