ஞாயிறு, 3 ஜூன், 2012

ஜெகனை சிறையில் தள்ளியது வீண்.. பிரச்சாரத்துக்கு அலைமோதும் கூட்டம்

 Jagans Mother Sister Draw Huge Crowds
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக உருவெடுத்திருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை வரும் இடைத்தேர்தலில் முடக்குவதற்காக அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ சிறையில் அடைத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் நினைத்ததற்கு எதிராக ஜெகனின் குடும்பத்தினர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி வருகிறது.
ஆந்திராவில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரு நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கும் ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி எம்.பி.யின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. ஜெகன்மோகன் ரெட்டி தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. போலீசார் ஜெகன்மோகன் ரெட்டியை கைது செய்தனர். சி.பி.ஐ. கோர்ட்டு அவரை 11-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதனால் அவரால் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. இது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஜெகன்மோகனுக்கு பதிலாக அவரது தாயார் விஜயலட்சுமி, சகோதரி ஷர்மிளா, மனைவி பாரதி ஆகியோர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் குதித்தனர். அவர்கள் செல்லும் இடம் எல்லாம் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் கூடுகிறது. அவர்களை பார்க்க ஆண்களும், பெண்களும் முண்டியடிக்கிறார்கள்.

அவர்கள் பேசும் இடங்களைச் சுற்றியுள்ள மரங்கள், கட்டிடங்கள் மீது பொதுமக்கள் ஏறி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். ஜெகன்மோகனுக்கு வந்த கூட்டத்தைவிட இவர்களுக்கு பல மடங்கு கூட்டம் அதிகரித்தது.

எனவே இடைத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அனுதாப அலை வீசுவதாகவும், அவரது குடும்பத்தினரின் பிரசாரத்தில் இதை கண்கூடாக பார்க்க முடிந்தது என்றும் ஆந்திர மாநில அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜெகன்மோகன் ரெட்டி சகோதரி ஷர்மிளா இதற்கு முன்பு பொதுக்கூட்ட மேடைகளுக்கு வந்ததில்லை. தற்போது தனது தாயாருக்கு உதவியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஒவ்வொரு இடத்திலும் பேசுவதற்கு முன்பு ராஜன்னாவின் (ராஜசேகர ரெட்டி) மகளும், ஜெகனின் சகோதரியுமான நான் ஆந்திர மக்களிடம் நியாயம் கேட்டு வந்துள்ளேன். என் சகோதரரை சி.பி.ஐ. கைது செய்து எங்களது குடும்பத்தினரை மனரீதியாக செய்து வரும் சித்ரவதைகளுக்கு தேர்தலில் பாடம் புகட்டுங்கள் என்று கூறி வருகிறார். அவரது பேச்சை ஆந்திர மக்கள் மிகவும் ஆர்வமுடன் கேட்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக