புதன், 6 ஜூன், 2012

பிரபலங்கள் அரசிடம் பெறும் சலுகைகள் அதிகம் அநியாயம்

எதற்காக மக்கள் பணத்தை வீணாக்குகின்றனர்? தேவவிரதன், அடையாறு, சென்னையிலிருந்து எழுதுகிறார்:
ஐந்தாவது முறையாக, உலக செஸ் சாம்பியன் ஆன விஸ்வநாதன் ஆனந்திற்கு, இரண்டு கோடி ரூபாயை, பரிசாக, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவது நல்லது தான்.ஆனால், நம் நாட்டில், விளையாட்டு வீரர்களையும், திரை உலக நட்சத்திரங்களையும், அளவுக்கு மீறி சலுகைகள் கொடுத்து கொண்டாடுகிறோமோ என்று தோன்றுகிறது.மேற்கு வங்க முதல்வர் மம்தா, ஐ.பி.எல்., கிரிக்கெட் வீரர்களுக்கும், திரை நட்சத்திரங்களுக்கும் தங்கச் சங்கிலி கொடுத்து, பெரிய விழா எடுத்து, கொண்டாட்டம் நடத்தி இருக்கிறார். இந்த அழகில், இந்த பெண்மணி, தன்னை மிகப்பெரிய ஏழை பங்காளர் என்றும், எளிமையின் சிகரம் என்றும் கூறிக் கொள்கிறார்.
சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, செஸ் ஆனந்த், ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்கள், அரசிடம் பெறும் சலுகைகளும், பரிசுகளும் கொஞ்ச நஞ்சமல்ல; இவர்கள், சாதாரண, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. பெரும் பணக்காரர்கள்.விளம்பரங்கள் மூலமும், தனியார் நிறுவனங்கள் மூலமும், இவர்கள் பெறும் பணம் ஏராளம். வெளிநாட்டில் இருந்து வரும் வரும்படிக்கும் குறைச்சல் இல்லை. அபினவ் பிந்த்ரா என்ற இந்திய கோடீஸ்வரர், துப்பாக்கி சுடும் வீரர்; ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வென்றதற்காக கிடைத்த பரிசுகளும், பாராட்டுகளும், விளம்பர அழைப்புகளும் அளவற்றவை. அதேபோல் தான், ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் பரிசு பெற்றபோதும் நடந்தது!உலக அளவில் ஒருவர் வெற்றி பெற்று, நாட்டின் புகழை ஏற்றும் போது, பாராட்ட வேண்டியது தான். ஆனால், அளவுக்கு மீறி சலுகைகள் தருவதும், பணத்தை வாரி இறைப்பதும், எந்த வகையில் நியாயம்? இவர்களை ஜனாதிபதியோ, பிரதமரோ, முதல் அமைச்சர்களோ பிரத்யேகமாக அழைத்து, விருந்து கொடுத்து, பாராட்டு தெரிவிக்கட்டும். மக்களின் வரிப்பணத்திலிருந்து, பணத்தை அள்ளி வீசுவது எதற்காக?இனிமேலாவது, அரசாங்கம், இதுபோன்ற விஷயங்களில் அவசரப்படாமல், கவுரவம் தரும் பாராட்டை தந்து சிறப்பிக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக