மம்தாவோடு சேர்ந்து அப்துல் கலாம் உட்பட மூன்று பேரின்
பெயர்களை, தன் வாயாலேயே நிருபர்களிடம் அறிவித்து விட்டு, அடுத்த ஓர்
இரவுக்குள் முலாயம்சிங் அந்தர் பல்டியடித்த காரணத்தால்தான், ஜனாதிபதி
தேர்தல் வேட்பாளராகியுள்ளார் பிரணாப் முகர்ஜி. இது மம்தா பானர்ஜிக்கு
முலாயம் செய்த அரசியல் துரோகம் என, அரசியல் தலைவர்கள் பலரும்
வர்ணிக்கின்றனர்.
அதேநேரத்தில், முலாயம் சிங்கின் நீண்ட நெடிய அரசியல்
வாழ்க்கையில், அவரின் இதுபோன்ற அந்தர்பல்டிகளால், ராஜிவ், கன்ஷிராம்,
சோனியா, ஜெயலலிதா உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.
ரகசிய சந்திப்பு: ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரைத் தேர்வு
செய்யும் நடவடிக்கையில், மம்தாவோடு சேர்ந்து காங்கிரசுக்கு பெரிதாக
கடுக்காய் கொடுத்த முலாயம் சிங், கடைசியில் மம்தாவை அம்போவென விட்டு
விட்டார். மம்தாவோடு சேர்ந்து அறிவித்த அன்றைய தினம் இரவு, இரண்டு முறை
காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசியுள்ளார். மிக ரகசியமாக நடந்த
இந்த சந்திப்பை, முலாயம் சிங்கே ஒப்புக் கொண்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில்
மிகப்பெரிய அந்தர்பல்டி அரசியலை செய்த, முலாயம் சிங்கின் கடந்த கால வரலாறு
முழுவதுமே, இதுபோன்ற சம்பவங்களுக்கு பஞ்சமே இல்லாமல் உள்ளதுஎன்றும் அரசியல் தலைவர்கள் விமர்சிக்கின்றனர். அவர்கள் இதுதொடர்பாக கூறியதாவது:
கொள்ளையனுக்கு ஆதரவு: முலாயம் சிங்கின் அரசியல் 70ம் ஆண்டுகளில் துவங்கியது. சோசலிஸ்ட் தலைவரான ராம்மனோகர் லோகியாவின் சீடராக வளர்ந்த முலாயம் சிங், அடுத்தவர்களை நயவஞ்சமாகவும், கூடஇருப்பவர்களை குழிதோண்டி கவிழ்ப்பதிலும் ஆரம்பம் முதலே சிறந்து விளங்கவும் செய்தார். உ.பி.,யில் 80ம் ஆண்டுகளில் கொள்ளையர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. சபிராம் விக்ரம்மல்லா என்ற கொள்ளையனின் அட்டகாசம் தலைவிரித்து ஆடியது. அப்போது முதல்வராக இருந்தவர் வி.பி.சிங். கொள்ளைக்காரர்களுக்கு எதிராக முதல்வர் வி.பி.சிங் நடவடிக்கைகள் எடுத்தபோது, கொள்ளையனுக்கு ஆதரவாக முழங்கியவர் முலாயம் சிங். ராஜிவ் காந்தியின் ஊழல்களுக்கு எதிராக வி.பி.சிங் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருந்த சமயம், உ.பி.,யில் லோக்தளம் கட்சியின் சார்பில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் முலாயம். அப்போது சட்டசபையில் காங்கிரசை ஆதரித்து முலாயம் பேசினார். வி.பி.சிங்கின் டிரஸ்ட்டான தைய்யா அறக்கட்டளையில், ஊழல் நடப்பதாகக் குற்றம்சாட்டி, காங்கிரசுக்கு வக்காலத்து வாங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
பதவிக்கு போட்டி: காங்கிரசில் இருந்து விலகி வந்து லோக்தளம் கட்சியில் இணைந்த பகுகுணாவை, மிகுந்த நெருக்கடி அளித்து அவரது அரசியல் வாழ்க்கையை முலாயம் சீரழித்தார். பகுகுணாவின் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் "சீட்' தராமல் வஞ்சிக்கவே, அதே கவலையில் இருந்து பகுகுணா அடுத்த ஒரே ஆண்டில் மரணம் அடைந்தார். 1989ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, முதல்வர் பதவி யாருக்கு என்பதில் முலாயம் சிங்கிற்கும், அஜித் சிங்கிற்கும் போட்டி உருவானது. அப்போது வி.பி.சிங்கின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கைகொடுக்கவே முதல்வரானார் முலாயம். முதல்வராகி ஒரு ஆண்டு கூட ஆகியிருக்காது, சந்திரசேகருடன் கைகோர்த்துக் கொண்டு, டில்லியில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த வி.பி.,சிங் ஆட்சியை, முலாயம் கவிழ்த்தார்.
ராஜிவுடன் பேச்சு: இதையடுத்து, உ.பி.,யில் முலாயம் சிங்கிற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த வி.பி.சிங் எம்.எல்.ஏ.,க்கள் விலகிக் கொள்ளவே, அப்போது ராஜிவ் துணைக்கு வந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் முலாயம் ஆட்சி நடத்த ஆரம்பித்தார். 1991ம் ஆண்டு பொதுத்தேர்தல் வந்தது. இதோடு சேர்த்து நடத்தாமல் சட்டசபைத் தேர்தலை தனியாக நடத்தலாம் என்று முலாயமை ராஜிவ் கேட்டுக் கொண்டார். இதற்காகவே டில்லிக்கு அழைத்து ஒருமணிநேரம் பேசி அனுப்பினார் ராஜிவ். ஆனால், டில்லியில் இருந்து கிளம்பிச் சென்ற முலாயம் நேராக ராஜ்பவனுக்குத்தான் சென்றார்.
தீர்மானம்: அன்றை தினம் இரவே கவர்னர் சத்யநாராயண ராவை பார்க்க முலாயம் போகிறார் என்ற தகவல் உளவுத்துறை மூலம் தெரிந்ததும், அவரைத் தடுக்க ராஜிவ் எவ்வளவோ முயன்றார். ஆனால், போனில் வரவே இல்லை. மாறாக நள்ளிரவில் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி கவர்னரை சந்தித்தார். ஆட்சியைக் கலைக்கும் உத்தரவில் கையெழுத்துபோட்டபிறகே ராஜிவிடம் கவர்னர் பேசினார். இதில், ராஜிவ் மிகவும் நொந்து போனார்.
விலைபேசி துரோகம்: கடந்த 1993ல் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் தலா 100 சீட்டுகளை பெற்று ஆட்சியைப் பிடித்தன. பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்களை விலை பேசினார் முலாயம். கடுப்பான கன்ஷிராம் பல தடவை எச்சரித்தும் பலனில்லை. ஆதரவை விலக்கி விட்டு, அரசினர் விருந்தினர் மாளிகையில் கன்ஷிராம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் போட்டபோது, ரவுடிகளை விட்டு முலாயம் ஏவினார். நூற்றுக்கணக்கான ரவுடிகள் ஆறுமணி நேரம் வன்முறையில் ஈடுபட்டனர். அந்த சம்பவத்தில்தான், மாயாவதியை அவமானப்படுத்த முயற்சி நடந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையை அடுத்தே வன்முறை முடிவுக்கு வந்தது. இதன்பின், 1995ல் உ.பி.,யை பிரித்து உத்தரகண்ட் மாநில கோரிக்கைக்காக லக்னோவை நோக்கி வந்த பேரணியினர் மீது, முதல்வர் பொறுப்பில் இருந்தும்கூட தாக்குதல் நடத்தினார் முலாயம் சிங். ஏராளமானோர் காயம் பட்டனர்; பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். 1996-97ல் லாலு பிரசாத்துடன் கூட்டணியாக செயல்பட்டார். அப்போது பீகாருக்குள்ளும் போய் லாலு பிரசாத்தின் ராஜ்யத்திற்குள் தன் ஆதரவு வட்டத்தை விரிவுபடுத்த முயலவே, லாலு கோபம் கொண்டார். அதனால், அந்தக் கூட்டணியும் முறிந்தது. இவ்வாறு அரசியல் தலைவர்கள் கூறினர்.
ஜெ.,யும் தப்பவில்லை: ஒரு ஓட்டில் 1998ம் ஆண்டு வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. ஜெயலலிதாவோடு சேர்ந்து முலாயமும் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தார். ஆனால், அமைச்சரவையில் இடமில்லை என தெரிந்ததும், தன் ஆதரவை அடுத்த கணமே விலக்கிக் கொண்டு சோனியாவுக்கு அதிர்ச்சியளித்தார். கடந்த 2004ம் ஆண்டு ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, சவுதாலா உள்ளிட்டோர் இணைந்து மூன்றாவது அணி அமைத்தனர். இதில், ஜெயலலிதா தலைமைப் பொறுப்பு ஏற்பதை முலாயம் சிங் விரும்பவில்லை என்பதால், இந்த கூட்டணியையே உடைத்து விட்டார். 2007ம் ஆண்டு அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டனர். ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டது. அதுவரை இடதுசாரிகளிடம் கூட்டணியாக இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் இடதுசாரிகளை நட்டாற்றில் விட்டுவிட்டு, காங்கிரசிடம் போய்விட்டார் முலாயம். ஆக இவரை நம்பிய யாரையும் முதுகில் குத்தாமல் விட்டு வைத்ததில்லை என்பதே வரலாறு.
முடிவை மாற்றியது ஏன்? ""ஜனாதிபதி பதவிக்கு பிரணாப் முகர்ஜி பெயரை அறிவிக்க காங்கிரஸ் தயங்குகிறதோ என்பதால் தான், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இரண்டு பேரின் பெயர்களை, நான் முதலில் முன்மொழிந்தேன். ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் விவகாரத்தில், காங்கிரசுடன் எந்த விதமான ரகசிய உடன்பாடும் மேற்கொள்ளவில்லை,'' என, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: மம்தாவுடன் சேர்ந்து மூன்று பேரின் பெயர்களை அறிவித்த பின், நான் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தேன். அப்போது, பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார். அதனால், என் முடிவை மாற்றிக் கொண்டேன். பிரணாப் திறமையான, அனுபவமிக்க தலைவர் என்பதால், அவரை நாங்கள் ஆதரிக்கிறோம். நாங்கள் எந்த விதமான ரகசிய ஒப்பந்தமும், இதற்காக காங்கிரசுடன் மேற்கொள்ளவில்லை. அது, அரசியல் புரோக்கர்களின் வேலை. பிரணாப்பிற்கு ஆதரவு தெரிவித்ததால், எங்கள் கட்சி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சேரும் என்ற கேள்விக்கே இடமில்லை. அரசியலில் நிலைமை மாறிக் கொண்டே இருக்கும். மற்ற தலைவர்களை எல்லாம் ஒன்றிணைத்து செல்ல வேண்டியது அவசியம். பிரணாப் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என, விரும்பினேன். அது நடந்ததால் மகிழ்ச்சியே. இவ்வாறு முலாயம் சிங் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக