வியாழன், 14 ஜூன், 2012

என்னத்தைச் சொல்ல... மதுரை ஆதீனம் விரக்தி!

 Madurai Aadheenam Upset Over Nithya
மதுரை: நித்தியானந்தா கைதாகி சிறைக்குப் போய் விட்டதால் மதுரை ஆதீனம் விரக்தியுடனும், அதிர்ச்சியுடனும் உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, என்னைத்தைச் சொல்ல, பொறுமையாக இருப்போம் என்று பதிலளித்துள்ளார். மேலும், இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட ஒருவரை நீக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் அவர் பூடகமாக கூறியிருப்பது நித்தியானந்தாவை அவர் நீக்கும் முடிவை எடுக்கலாம் என்று மறைமுகமாக கூறுவதாக கருதப்படுகிறது.

நித்தியானந்தாவின் 2வது கைது படலம் பெங்களூர் அருகே ராமநகரத்தில் நேற்று நடந்தேறியது. அவரை ஒரு நாள் சிறைக் காவலுக்கு கோர்ட் அனுப்பி விட்டது. இந்தத் தகவல்கள் மதுரை ஆதீனத்தை அதிர்ச்சியுற வைத்துள்ளன. இதனால் அவர் சரியாக சாப்பிடாமல், விரக்தியுடன் காணப்படுகிறாராம்.
இந்த நிலையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதுகுறித்த விவரம்
கேள்வி: இவ்வளவு நடந்து கொண்டிருந்தும் எதுவும் பேசாமல் இருக்கிறீர்களே..
பதில்: என்ன மவுனம்... இப்போது பேசிக்கொண்டு தானே இருக்கிறேன்.
கேள்வி: நித்தியானந்தா கைது குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பதில்: என்னத்தை சொல்ல...பொறுமையாக இருப்போம்.
கேள்வி: இப்போதாவது நீங்கள் முடிவு எதுவும் எடுப்பீர்களா?
பதில்: முடிவு எதுவும் எடுக்கவில்லை.
கேள்வி: இளைய ஆதீனத்தை நியமிக்கும் அதிகாரம் உங்களுக்கு இருப்பது போல், அவரை அந்த பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் உங்களுக்கு உள்ளதா?
பதில்: நீக்கும் அதிகாரம் நிச்சயம் உண்டு.
கேள்வி: 2004,ல் இளைய ஆதீனமாக சுவாமிநாதன் என்ற 16 வயது சிறுவனுக்கு பட்டம் சூட்டினீர்கள். சிறிது காலத்தில் அவரை நீங்களே நீக்கி மடத்தில் இருந்து வெளியேற்றினீர்கள்.
பதில்: ஆமாம் நீக்கினேன்.
கேள்வி: தற்போது நித்தியானந்தா வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரே, சுவாமிநாதனை போல் இவரையும் நீக்குவீர்களா?
பதில்: இன்னும் முடிவு எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்று பார்ப்போம். அதுவரையில் பொறுமையாக இருப்போம் என்றார் ஆதீனம்.
என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் மதுரை ஆதீனம் தவிக்கிறாரா அல்லது நித்தியானந்தா தரப்பு இன்னும் கூடவே சுற்றியிருப்பதால் எந்த முடிவையும் எடுக்க விடாமல் தடுக்கப்படுகிறாரா என்று ஆதீன பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக